Sunday, June 24, 2012

ஷஅபான் மாதத்தின் சிறப்பும் மேன்மையும் (1)

بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنامحمد وعلى اله وصحبه اجمعين.
ஷஅபான் மாதத்தின் சிறப்பும் மேன்மையும்


அஃப்ளலுல் உலமா
அ. அஹ்மது ஆரிஃப்,  எம்.காம். எம்.ஃபில்.,
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்,
சென்னை 600087

அளவற்ற அருளாள்ன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் திருநாமத்தால்... நமது தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் தோழர்கள், கிளையார்கள் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக.

ஷஅபான் மாதத்தின் சிறப்புகளும் மேன்மையும்

நிச்சயமாக ஷஅபான் மாதம் வருடத்தின் மேன்மை மிக்க பருவகாலங்களில் வரும் சங்கை மிக்க ஒரு மாதம் ஆகும். இம்மாதத்தின் பரக்கத்துகள் மிகவும் பெயர் பெற்றவை. அதன் நன்மைகள் அளவற்றதாகும்.  இம்மாதத்தில் இறைவனை நெருங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது மகத்தான வெற்றிப் பொருளாகும். இம்மாதத்தில் இறைவனை அதிகம் அதிகம் வழிபட்டு வணங்குவது மிகவும் இலாபம் தரும் மறுமையின் வியாபாராப் பொருள் ஆகும். இம்மாதத்தினை அல்லாஹ் காலங்களில் குறிப்பான ஒன்றாக ஆக்கி வைத்துள்ளான். இம்மாதத்தில் அவனிடம் தவ்பா செய்து மீள்வோருக்கு வாக்குறுதி அளித்துள்ளான். எவர் இம்மாதத்தில் இறைவனை வணங்குவதில் அதிகம் முயற்சி எடுத்து தன்னைப் பழக்கிக் கொள்கின்றாரோ, அவருக்கு அடுத்து வரும் ரமளான் மாதத்தில் இறைவனை வணங்கி வழிபடுவதில் இலேசும், வெற்றியும் கிடைக்கும்., இன்ஷா அல்லாஹ்.

ஷஅபான் என்ற வார்த்தைக்கு என்ன பொருள்?

ஷஅபான் மாதத்திற்கு ஷஅபான் - கிளைகளாகப் பரவுதல் எனும் பெயர் வந்தது ஏனெனில், அம்மாதத்தில் இறைவனிடமிருந்து நன்மைகள் பல கிளைகளாகப் பரவி அடியார்களை அடைகின்றது என்று கூறப் படுகின்றது. இன்னும், ஷஅபான் எனும் வார்த்தை ஷாஅபான் எனும் வார்த்தையில் இருந்து எடுக்கப் பெற்றது என்றும், மலையின் மீது காணப்படும் நல்ல வழியைக் குறிக்கும் ஷிஅப் எனும் வார்த்தையில் இருந்து எடுக்கப் பெற்றது என்றும், ஒட்டுப்போடுதல் எனும் பொருள் தரும் ஷஅப் என்னும் வார்த்தையில் இருந்து எடுக்கப் பட்டது, அம்மாதத்தில் அல்லாஹ் உடைந்து பிரிந்து சென்ற உள்ளங்களை ஒட்டுப்போட்டு இணைக்கின்றான் என்றும் பல கருத்துகள் கூறப் படுகின்றன.

இச்சிறு கட்டுரை ஷஅபான் மாதம் என்ன என்ன சிறப்புகளைப் பெற்றுள்ளது? அதனை முஸ்லிம்கள் ஏன் மிகவும் சிறப்பாகப் போற்றிக் கொண்டாடி, அவர்களைப் படைத்த இறைவனின் பக்கம் முன்னோக்கும் எண்ணத்துடன் அவனிடம் பாவமன்னிப்புத் தேடி மீள்வது, அவனை வணங்கி வழிபடுவது, இன்னும் பல வகைப்பட்ட நன்மையான காரியங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர்? இறைவனது தியானமாகிய திக்ரிலும், இறைத்தூதர் (ஸல்) அவர்களை ஜியாரத் செய்வதிலும், இறைவனது வீடாகிய பைத்துல்லாஹ்வில் தொழுகை, தவாஃப், உம்ரா போன்றவற்றை நிறைவேற்றவும், உலகம் எங்கும் உள்ள பிற இறையில்லங்களிலும் அதுபோன்றே தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல் போன்ற நற்காரியங்களிலும் அதிகம் அதிகம் ஈடுபடுகின்றனர்? என்பதன் காரணங்களைக் கூறும் ஒன்றாகும்.

புனித ஷஅபான் மாதத்தில் முஸ்லிம்களாகிய நமது உள்ளங்களை ஈர்க்கத்தக்க, நமது சிந்தனைகளை ஆச்சரியத்தில் ஆழ்த்த வைக்கக் கூடிய, பல கூட்டங்கள், மாநாடுகள், விழாக்கள் நடத்திப் பேசக் கூடிய முக்கியமான நிகழ்வுகள் பல நடந்துள்ளன.


ஷஅபான் மாதத்தில் நடந்த அதிமுக்கியமான ஓர் அற்புத நிகழ்வு

இஸ்லாமிய வரலாற்றில் தொழுகையில் முன்னோக்கும் திசையாக முதலில் கிப்லாவாக இருந்த பைத்துல் முகத்தஸ் பள்ளியில் இருந்து கிப்லா கஅபத்துல்லாஹ்வின் பக்கம் மாற்றப் பெற்ற நிகழ்ச்சி நடைபெற்றது இந்த ஷஅபான் மாதத்தில் தான். 

நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையின் போது, கஅபத்துல்லாஹ்வின் பக்கம் கிப்லா இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசையில் அடிக்கடி வானத்தின் பக்கம் தங்களது முகத்தை முன்னோக்கி அதுபற்றிய இறைவனது வஹ்யி எனும் கட்டளை என்று வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது தான், அவர்களது கண்களைக் குளிர்விக்க வைக்கும் வண்ணம், அவர்களது ஆவலை நிறைவேற்றும் வகையில் இறைவனது வார்த்தை வஹியாக இறங்கியது... உமது முகம் வானத்தின் பக்கம் அடிக்கடி முன்னோக்குவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். எனவே, நீர் விரும்பக் கூடிய கிப்லாவின் பக்கம் நாம் உம்மைத் திருப்புவோம். எனவே, மஸ்ஜிதுல் ஹராமின் பக்கம் உமது முகத்தைத் திருப்புவீராக. நீங்கள் எங்கிருப்பினும், அங்கிருந்தவாறே உங்களது முகங்களை அதன் பக்கம் திருப்பிக் கொள்ளுங்கள். அல்குர்ஆன் அத்தியாயம் 2, வசனம் 144

இவ்வசனம், உமது இரட்சன் பிறகு உமக்கு அளிப்பான், அதனை நீர் பொருந்திக் கொள்வீர், என்ற (அல்குர்ஆன் / அள்ளுஹா/வசனம் 5) இறைவனது வார்த்தையை மெய்ப்பிப்பதாக உள்ளது. இன்னும், ஆயிஷா (ரலி) அவர்கள், உங்களது ரப்பை உங்களது ஆசையை விரைந்து நிறைவேற்றுபவனாகவே அன்றி நான் காணவில்லை, (புகாரி) கூறிய வார்த்தையையும் உண்மைப் படுத்துகின்றது. நபி (ஸல்) அவர்கள் இறைவன் எதை விரும்பினானோ, அதையே விரும்புபவர்களாகவே இருந்தனர்.

முஸ்லிம்கள் 17 மாதங்களாக அல்லது 17 மாதங்கள் கழிந்து 3 நாட்கள் வரை பைத்துல் முகத்தஸ் பள்ளியை நோக்கித் தொழுது கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் 12ஆம் நாள் பகல், திங்கட்கிழமை அன்று மதீனா வந்தடைந்தனர். அல்லாஹ் ஷஅபான் மாதம் பாதிக்கு முந்திய செவ்வாய்க்கிழமை அன்று,  கிப்லாவின் பக்கம் முன்னோக்குமாறு கட்டளையிட்டான். அல்ஜாமி லிஅஹ்காமில் குர்ஆன் குர்துபீ, பாகம் 2 பக்கம் 150,

நல் அமல்கள் உயர்த்தப்படும் மாதம்

ஷஅபான் மாதத்தின் இன்னுமொரு சிறப்பு, நல்அமல்கள் மிக அதிக அளவில் உயர்த்தப்படுதல்.  உஸாமா இப்னு ஸைது (ரலி) அவர்கள் கூறினார்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே, ஷஅபான் மாதம் தாங்கள் நோன்பு நோற்பது போன்று பிற மாதங்களில் நோன்பு நோற்பதை நான் பார்க்கவில்லையே, என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அது ரஜபு, ரமலான் ஆகிய இருமாதங்களுக்கிடைய மக்கள் மறந்து விடக்கூடிய ஒரு மாதமாக அது இருக்கின்றது, ஆனால், அந்த மாதத்திலோ, அகிலங்களின் இரட்சகனிடத்தில் நல் அமல்கள் உயர்த்தப்படுகின்றன. நான் நோன்பு வைத்த நிலையில் எனது அமல்கள் உயர்த்தப் பட வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன், என்று கூறினார்கள். இந்நபிமொழி நஸாஈ நூற்தொகுப்பில் வருவதாக, அத்தர்ஃகீப் வத்தர்ஹீப் நூலாசிரியர் அல்முன்திரீ அறிவிக்கின்றார்கள். பாகம் 2, பக்கம் 48 இந்த அறிவிப்பு இமாம் அஹ்மது அவர்களின் முஸ்னத் நபிமொழித் தொகுப்பிலும் வருகின்றது.

அமல்கள் உயர்த்தப்படுவது என்பது ஷஅபான் மாதத்திற்கு மட்டும் குறிப்பானதல்ல என்றாலும், இம்மாதத்தில் அமல்கள் உயர்த்தப்படுவதற்கான நிலைகள் வேறு.

ரமளானுக்கு அடுத்து அதிகம் நோன்பு வைக்கப்படும் மாதம்

நபி (ஸல்) அவர்கள் ரமளானுக்கு அடுத்து அதிகம் நோன்பு வைத்த மாதம் ஷஅபான் மாதம் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தைத் தவிர மற்ற மாதங்களில் முழுமையாக நோன்பு வைத்ததை நான் பார்க்கவில்லை. எனினும், ரமளான் அல்லாத மாதங்களில் ஷஅபான் மாதத்தைத் தவிர மற்ற மாதங்களில் அதிகமான நோன்பு வைத்ததையும் நான் பார்க்கவில்லை., என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸாஈ, திர்மிதீ)

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் நோன்பு வைப்பதை மிகவும் விரும்புபவர்களாக இருந்தனர். ஷஅபான் மாத நோன்புடன் ரமலான் மாத நோன்பையும் தொடர்ந்து வைப்பார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) நூல் அபூதாவூது

நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுமாறு கட்டளை இறங்கிய மாதம்

ஷஅபான் மாதத்தின் இன்னுமொரு அற்புதமான பெருஞ் சிறப்பு ஒன்று உள்ளது.

இம்மாதத்தில் தான், நிச்சயமாக அல்லாஹ்வும் அவன் மலக்குமார்களும் நபியின் மீது ஸலவாத் கூறுகின்றனர். இறைநம்பிக்கை கொண்டேரே, நீங்களும் அவர் மீது ஸலவாத்தும், ஸலாமும் கூறுங்கள், என்ற இறைவசனம் (அல்அஹ்ஸாப், வசனம்-56) இறங்கியது என்று கூறப் பெறுவதாக, இப்னுஸ் ஸைஃப் அல்யமனீ அவர்கள் தெரிவித்தனர்

(நூல் இமாம் அஹ்மது இப்னுல் ஹிஜாஸி அவர்களது துஹ்ஃபத்துல் இஃக்வான், பக்கம் 74)

அறிஞர்கள் பலர் இந்த ஷஅபான் மாதத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும், ஸலாமும் கூற வேண்டும் எனும் இறைவசனம் இறங்கியது என்று கூறுவதாக இமாம் ஷஹாபுத்துன் அல் கஸ்தலானி அவர்கள் கூறினார்கள். (நூல்- ஷரஹ் அல்ஜர்கானி அலல் மவாஹிப், பாகம் 6, பக்கம் 328)


ஷஅபான் மாதம் 15ஆம் இரவு

ஷஅபான் மாதம் தன்னிடத்து புனிதமிக்க, மேன்மையான, இறையருள் பொழியும் ஓர் இரவைக் கொண்டுள்ளது. ஷஅபான் மாதம் 15ஆம் பிறையின் இரவே அது. 

இவ்விரவில், வல்லோனாகிய அல்லாஹ் படைப்பினங்களுக்கு அவனது அருளை அளவற்றுப் பொழிகின்றான். அவனது மன்னிப்பை எல்லையில்லாது வழங்குகின்றான். தனது கருணையால் சூழ்ந்து கொள்கின்றான். பாவமன்னிப்புத் தேடி அவன் பால் மீள்வோருக்கு மன்னிப்பையும், அவனது அருளைப் பொழியுமாறு வேண்டுவோருக்கு அவனது ரஹ்மத் எனும் அருளையும், பிரார்த்தனை கேட்போரது பிரார்த்தனைகளுக்குத் தனது ஏற்பையும், சிரமங்கள், கஷ்டங்களில் சிக்கித் தவித்து அவனிடம் முறையிடுவோருக்கு அவற்றிலிருந்து தீர்வுகளையும், நரகநெருப்பு விதியாக்க பெற்ற ஒரு சிலருக்கு அதிலிருந்து விடுதலையையும் வழங்குகின்றான் என்றும், இவ்விரவிலேலேய படைப்பினங்களுக்கு அவர்களது இரணங்களை அளவிடுகின்றான், அவர்களது செயல்களை எழுதுகின்றான் என்றும் கூறப் பெறுகின்றது.

ஷஅபான் மாதத்தின் இத்தகைய சிறப்புகளைப் பற்றிக் கூறும் நபிமொழிகள் பல வந்துள்ளன. அவற்றில் ஸஹீஹ், முர்ஸல், ளஈஃப் போன்ற பல வகை அறிவிப்புகள் கலந்திருந்தாலும், அவற்றின் கருத்துகள் ஒன்றை ஒன்று வலுப்படுத்துபவையாகத் தான் இருக்கின்றன. 

ஷஅபான் மாதத்தின் 15ஆம் இரவின் சிறப்புகள் பற்றிய நபிமொழிகள் வருமாறு.

அல்லாஹ் ஷஅபான் மாதம் 15ஆம் இரவு தனது படைப்புகள் அனைத்திற்கும் தோன்றி இணைவைப்பவன், இருவருக்கிடையில் பகைமையை மூட்டுபவன் ஆகிய இந்த இருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் மன்னிப்பை வழங்குகின்றான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் முஆத் இப்னு ஜபர் (ரலி) இப்னு ஹிப்பான், தபரானீ ஆகியோர் மேற்கண்ட நபிமொழி ஸஹீஹ் எனும் சரியான ஒன்றாகும் என்று கூறியுள்ளனர்.

அல்லாஹ் தனது படைப்புகளுக்காக ஷஅபான் 15ஆம் இரவு தோன்றி, இருவருக்கிடையே பகையை மூட்டுபவன், உயிரைக் கொல்பவன் ஆகிய இருவரைத் தவிர மற்ற அடியார்களுக்கு மன்னிப்பு வழங்குகின்றான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) நூல் அஹ்மது

Sunday, June 24, 2012 2:48:20 AM
இன்ஷா அல்லாஹ் இன்னும் வரும்...

Wednesday, June 13, 2012

உலகின் முதல் மனிதர் ஆதம் நபி (அலை) அவர்கள் பேசிய மொழி தமிழா? - (3)

உலகின் முதல் மனிதர் ஆதம் நபி (அலை) அவர்கள் பேசிய மொழி தமிழா? - (3)

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் இறக்கப்பட்ட இடம் இந்தியா என்பதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் கூறும் சான்றுகள்.

حَدَّثَنَا الحسن بن يحيى ، قال : أخبرنا عبد الرزاق ، قال : أخبرنا معمر ، عن قتادة ، قال : " أهبط الله عز وجل آدم إلى الأرض ، وكان مهبطه بأرض الهند

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் பூமிக்கு இறக்கினான். அவர்கள் இறங்கிய இடம் இந்தியாவாக இருந்தது என்று கதாதா அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: மஃமர்

)حديث موقوف) حَدَّثَنِي ابْنُ سِنَانٍ ، قَالَ : حَدَّثَنِي ابْنُ سِنَانٍ ، قَالَ : حَدَّثَنَا الْحَجَّاجُ ، قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، عَنْ يُوسُفَ بْنِ مِهْرَانَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ عَلَيْهِ السَّلامُ : " أَطْيَبُ أَرْضٍ فِي الأَرْضِ رِيحًا أَرْضُ الْهِنْدِ ، أُهْبِطَ بِهَا آدَمُ فَعَلِقَ شَجَرُهَا مِنْ رِيحِ الْجَنَّةِ " .

பூமியில் நறுமணம் மிகுந்த இடம் இந்தியா, அங்குதான் ஆதம் (அலை) அவர்கள் இறக்கப்பெற்றார்கள். அங்கிருக்கும் மரங்கள் சுவனத்தின் நறுமணத்தைப் பெற்றுள்ளன என்று அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் யூஸுஃப் இப்னு மிஹ்ரான்


)حديث موقوف) حَدَّثَنَا أَبُو هَمَّامٍ ، قَالَ : حَدَّثَنِي أَبِي ، قَالَ : حَدَّثَنِي زِيَادُ بْنُ خَيْثَمَةَ ، عَنْ أَبِي يَحْيَى . بَائِعِ الْقَتِّ قَالَ : قَالَ لِي مُجَاهِدٌ : لَقَدْ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ، " أَنَّ آدَمَ عَلَيْهِ السَّلامُ نَزَلَ حِينَ نَزَلَ بِالْهِنْدِ ، وَلَقَدْ حَجَّ مِنْهَا أَرْبَعِينَ حِجَّةً عَلَى رِجْلَيْهِ

ஆதம் (அலை) அவர்கள் இறங்கிய பொழுது இந்தியாவில் இறங்கினார்கள். இன்னும் அவர்கள்  அங்கிருந்து கால்நடையாக 40 ஹஜ்ஜுகள் செய்துள்ளார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஜாஹிது

حَدَّثَنَا ابن حميد ، قال : حَدَّثَنَا سلمة ، عن ابن إسحاق ، قال : وأما أهل التوراة فإنهم ، قالوا : " أهبط آدم بالهند على جبل ، يقال له : واسم عند واد يقال له : بهيل بين الدهنج والمندل ، بلدين بأرض الهند ، قالوا : وأهبطت حواء بجدة من أرض مكة ، وقال آخرون : بل أهبط آدم بسرنديب على جبل يدعى بوذ 

தவ்ராத் வேதத்தை உடையவர்கள் ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் தஞ்ச், மன்தல் எனப்படும் இடங்களுக்கிடையே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மலையின் மீது இறக்கப் பெற்றார்கள்.  இன்னும் ஹவ்வா (அலை) அவர்கள் மக்காவின் நிலப்பரப்பைச் சேர்ந்த ஜித்தாவில் இறக்கப் பெற்றார்கள், என்று கூறுகின்றார்கள். இன்னும் சிலர், ஆதம் (அலை) அவர்கள் ஸரந்தீப் (இலங்கையின் பழைய அரபிப் பெயர்) என்ற இடத்தில் உள்ள பூத் எனும் மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்றும் கூறுகின்றனர்.  அறிவிப்பவர் அபூ இஸ்ஹாக்

وأخرج ابن جرير وابن أبي حاتم والحاكم وصححه عن ابن عباس قال أول ما أهبط الله آدم إلى أرض الهند وفي لفظ بدجنى أرض الهند

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் முதலில் இந்தியப் பூமியில்தான் இறக்கினான் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்னொரு அறிவிப்பில் இந்தியப் பூமியில் தஜ்னா என்ற இடத்தில் இறக்கினான் என்று கூறியதாகவும் வருகின்றது. அறிவிப்போர்: இப்னு ஜரீர், இப்னு அபீ ஹாத்திம், ஹாகிம்

(حديث موقوف) حَدَّثَنِي الْحَارِثُ ، قَالَ : حَدَّثَنَا ابْنُ سَعْدٍ ، قَالَ : حَدَّثَنَا هِشَامُ بْنُ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : " أُهْبِطَ آدَمُ بِالْهِنْدِ وَحَوَّاءُ بِجِدَّةَ , فَجَاءَ فِي طَلَبِهَا حَتَّى اجْتَمَعَا , فَازْدَلَفَتْ إِلَيْهِ حَوَّاءُ فَلِذَلِكَ سُمِّيَتِ الْمُزْدَلِفَةَ ، وَتَعَارَفَا بِعَرَفَاتٍ فَلِذَلِكَ سُمِّيَتْ عَرَفَاتٍ ، وَاجْتَمَعَا بِجَمْعٍ فَلِذَلِكَ سُمِّيَتْ جَمْعًا ، قَالَ : وَأُهْبِطَ آدَمُ عَلَى جَبَلٍ بِالْهِنْدِ ، يُقَالُ لَهُ : بُوذُ " .

ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் இறக்கப் பெற்றார்கள். ஹவ்வா (அலை) அவர்கள் ஜித்தாவில் இறக்கப் பெற்றார்கள். ஆதம் (அலை) அவர்கள் ஹவ்வா (அலை) அவர்களைத் தேடி வந்துகொண்டிருந்தபொழுது ஹவ்வா (அலை) அவர்களும் அவர்களை நெருங்கினார்கள். அவர்கள் இருவரும் நெருங்கி வந்த இடம் முஸ்தலிஃபா என்று அழைக்கப் பெற்றது. பின்னர், அவர்கள் இருவரும் அரஃபாத் என்ற இடத்தில் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டனர். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டதால், அந்த இடம் அரஃபா என்று பெயர் பெற்றது. இன்னும் அவர்கள் இருவரும் ஜம்உ எனும் இடத்தில் ஒன்றிணைந்தனர். அதனால், அவ்விடம் ஜம்உ என்று பெயர் பெற்றது. இன்னும், ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் பூத் என்று அழைக்கப் பெறும் மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.  அறிவிப்பாளர்: அபூஸாலிஹ்

இந்த அறிவிப்புகள் அனைத்தும் இமாம் தபரீ அவர்கள் தொகுத்த தாரீஃகுத் தபரீ என்ற உலக வரலாற்று நூலில் வருகின்றன.

மேற்கண்ட அறிவிப்புகளில், இந்தியாவில் தஞ்ச், மன்தல் எனப்படும் இடங்களுக்கிடையே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்று வரும் அறிவிப்பில் வரும் தஞ்ச் என்ற வார்த்தை தெங்கணம், (தென்+கணம்) என்ற வார்த்தையை ஒத்திருக்கின்றது. இன்னும், அவ்வறிவிப்பில் வரும் மன்தல் எனும் வார்த்தை (மண்டல், கோரமண்டல்) போன்ற இந்தியாவின் தென் பகுதிகளின் பெயர்களுடன் ஒத்துப் போகின்றது. 

தஞ்ச்  எனப் பெயர் கொண்ட அல்லது அப்பெயருடன் தொடர்புள்ள நிலப்பகுதி ஏதும் தமிழ்நாட்டின் பகுதியாக இருந்ததா என்ற கேள்வியுடன், இணையத்தில் தேடும் பொழுது கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்தன.

கடல் கொள்வதற்கு முன் இருந்த குமரிக் கண்டத்தில் தெங்க நாடு இருந்தது என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் கூறியுள்ளார். தெங்கணம் என்ற பழைய குமரிக் கண்ட நகரத்தின் பெயராக இருக்க வேண்டும்.


பண்டைய தமிழகத்தின் பாண்டிய நாட்டின் பகுதிகளாக 49 நாடுகள் இருந்தன வென்றும் அவற்றில் தெங்க நாடு என ஒன்று இருந்தது என்ற தகவல் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் தொடர்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


குணகரை குன்றங் குறும்பனை யோடு
மணமிகு தெங்க மதுரைமுன் பாலை 
இணருபின் பாலையோ டேழ்தலை மேய 
உணவமல் நாற்பதோ டொன்பது நாடே. 

(ஏழ்தலைமேய - ஏழ்என்னும் எண்ணை முதலிலுடைய ஏழ்குணகரைநாடு, ஏழ்குன்றநாடு,
ஏழ்குறும்பனை நாடு, ஏழ்தெங்கநாடு, ஏழ்மதுரைநாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை
நாடு எனக் கொள்க.)

மாறிமாறி வந்த கடற்கோள்களினால் பாண்டி நாட்டைச் சேர்ந்த 49 நாடுகளாகிய ஏழ் தெங்க நாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் குணக்கரை நாடு, ஏழ் குறும்பனை நாடு ஆகியன மறைந்தன என ஆய்வாளர் கூறுவர். பார்க்க: http://www.tamilvu.org/courses/degree/a031/a0311/html/a0311332.htm

 “ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் இந்தியப் பூமியில்தான் இறக்கினான் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள், இன்னொரு அறிவிப்பில் இந்தியப் பூமியில் தஜ்னா என்ற இடத்தில் இறக்கினான் என்று கூறியதாகவும் வருகின்றது” – இப்னு ஜரீர், இப்னு அபீ ஹாத்திம், ஹாகிம் ஆகியோர் அறிவிக்கும் இந்த அறிவிப்பில் வரும் தஜ்னா என்ற வார்த்தையில் வரும் ஜீம் என்ற அரபி எழுத்தினை geem என்றும் கூறுவர். அதன்படிப் படித்தால் தக்னா என்றும் அவ்வார்த்தையைப் படிக்கலாம். அந்த உச்சரிப்பு தக்கன்’, ‘தக்காணம் போன்ற வார்த்தைகளின் உச்சரிப்புடன் ஒத்திருக்கின்றது.

ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் பூத்என்று அழைக்கப் பெறும் மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்”- என்ற அறிவிப்பில் வரும் பூத் வார்த்தையினை புத் என்றும் வாசிக்க இயலும். அது ஏனெனில், அரபி அல்லாத வார்த்தைகளை அரபியில் எழுதும் பொழுது உகரத்தைக் குறிக்க அரபி மொழியின் எழுத்தான் வாவ் என்ற எழுத்தைப் பயன்படுத்துவது அரபிகளின் வழக்கம். அவ்வகையில், புத் என்று அழைக்கப் பெறுவதாக இவ்வறிவிப்பில் குறிப்பிடப் பெறும் அம்மலை, இலங்கையில் உள்ள புத்தர் பாதம்என்று அழைக்கப் பெறும் மலையாக இருக்கலாம்.

இவற்றின் அடிப்படையில் பார்க்கும் பொழுது ஆதம் (அலை) அவர்கள் நூஹ் (அலை) அவர்களது காலத்தில் ஏற்பட்ட பிரளயத்திற்கு முன் இலங்கையுடன் ஒன்றாக இருந்த இந்தியாவின் தென் பகுதியில் உள்ள மலை ஒன்றின் மீது இறக்கப் பெற்றார்கள் என்று கருத அதிகம் வாய்ப்பிருக்கின்றது.
- இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்..

அஃப்ளலுல் உலமா
அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில்.
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்ஸ், சென்னை-600092.