Thursday, January 26, 2012

அல்குர்ஆனில் நபி (ஸல்) அவர்கள் இறைவனால் எவ்வாறு அழைக்கப் பெற்றுள்ளார்கள்?

அல்குர்ஆனில் நபி (ஸல்) அவர்கள் இறைவனால் எவ்வாறு அழைக்கப் பெற்றுள்ளார்கள்?


அல்லாஹ் அண்ணல் நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை, ரசூல்- தூதர், நபி (தீர்க்கதரிசி -மறைவான விஷயங்கள் அறிவிக்கப் பெறுபவர்), அமீன் (நம்பிக்கைக்குரியவர்), ஷாஹித் (சாட்சியாளர்), முபஷ்ஷிர் (நன்மாராயம் கூறுபவர்), நஃதீர் (எச்சரிப்பவர்), தாஈ இலல்லாஹ் பி இஃத்னிஹி (அவனது அனுமதியுடன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்), சிராஜுன் முனீர் (ஒளிதரும் விளக்கு), ரஊஃப் (இரக்கம் கொள்பவர்), ரஹீம்(அன்பு மிக்கவர்), ரஹ்மத் (அருள்), நிஃமத்(கொடை), ஹாதீ (நேர்வழி காட்டுபவர்) என்றெல்லாம் வர்ணித்துக் கூறியுள்ளான் என அறிஞர்கள் ஆராய்ந்து கூறியுள்ளார்கள் என்று இமாம் பைஹகீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

இத்தகைய நபி (ஸல்) அவர்களது மேன்மையான தன்மைகளை விவரிக்கும் ஆயிரத்தை விட அதிகமான சிறப்புப் பெயர்கள் என அறிஞர்கள் தொகுத்து வைத்துள்ளனர். திர்மிதீ எனும் ஹதீஸ் நூலுக்கு விளக்கம் எழுதியுள்ள ஷைகு அபுபக்கர் இப்னுல் அரபி அல் மாலிக்கீ எனும் அறிஞர் நபி (ஸல்) அவர்களின் சிறப்புப் பெயர்கள் நாற்பத்து எட்டினைத் தொகுத்து தமது அல்அஹ்வதீ எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள. நபி (ஸல்) அவர்களது தந்தையார் அப்துல்லாஹ் ஆவார்கள். நபி (ஸல்) அவர்களது பாட்டனார் அப்துல் முத்தலிபு. அப்துல் முத்தலிபின் பத்து மக்களில் கடைசி மகனே நபி (ஸல்) அவர்களின் தந்தையார். குறைஷிக்குலத்தாரின் ஆண்களிலேயே மிகவும் அழகானவராக அவர்கள் இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் தந்தையாருடன் பிறந்தவர்கள் ஹாரிஃத், ஜுபைர், ஹம்ஸா, ளிரார், அபூதாலிப் எனப்படும அப்துமனாஃப், அபூலஹப் என்ற அப்துல் உஜ்ஜா, அப்துல் கஅபா, முகீரா, நவ்ஃபல் ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையர் ஆவர். உர்வா, பர்ரா, உமைமா, ஸஃபிய்யா, ஆதிகா, உம்மு ஹகீம் எனும் பைளா ஆகியோர் நபி (ஸல்) அவர்களது தந்தையாருடன் பிறந்த சகோதரிகள். அதாவது நபி (ஸல்) அவர்களது மாமிமார்கள்.

நபி (ஸல்) அவர்களே, “நான் நதார் என்பவரின் மகன் முளர் என்பவரின் மகன் இல்யால் என்பவரின் மகன் முத்ரிகா என்பவரின் மகன் குஜைமா என்பவரின் மகன் கினானா என்பவரின் மகன் நள்ர் என்பவரின் மகன் மாலிக் என்பவரின் மகன் காலிப் என்பவரின் மகன் கஅப் என்பவரின் மகன் முர்ரா என்பவரின் மகன் கிலாப் என்பவரின் மகன் குஸை என்பவரின் மகன் அப்து முனாஃப் என்பவரின் மகன் ஹாஷிம் என்பவரின் மகன் முத்தலிப் என்பவரின் மகன் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது ஆவேன். மனிதர்களை இரண்டாகப் பிரித்தால் அதில் சிறந்த பிரிவிலேயே அன்றி அல்லாஹ் என்னை ஆக்கவில்லை. என் பெற்றோரிலிருந்து நான் வெளியாக்கப் படுவதில் அறியாமைக்காலத்தில் இருந்த அருவெறுப்புகள் எதுவும் என்னைத் தீண்டவில்லை. ஆதம் (அலை) முதல் எனது தாய், தந்தையர் வரை நான் பரிசுத்தமான திருமணத்தின் மூலமே அன்றி முறை தவறிய உறவின் மூலம் வெளியாக்கப் பெறவில்லை. எனவே, நான் உங்களிலேயே சிறந்தவன். சிறந்த தந்தையைப் பெற்றவன்”, எனக் கூறியுள்ளார்கள். (நூல்-பைஹகீ)

“இன்னும், நிச்சயமாக அல்லாஹ் இப்றாஹீம் (அலை) அவர்கள்து மக்களில் இஸ்மாஈல் (அலை) அவர்கள்த் தேர்ந்தெடுத்தான். இஸ்மாயீல் (அலை) அவர்களது மக்கள் பனீ கினானாவைத் தேர்ந்தெடுத்தான். பனீ கினான கோத்திரத்தாரில் குறைஷி குலத்தினரைத் தேர்ந்தெடுத்தான். குறைஷி குலத்தாரில் ஹாஷிம் கிளையினரைத் தேர்ந்தெடுத்தான். ஹாஷிம் கிளையோரில் என்னைத் தேர்ந்தெடுத்தான்”, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பவர், வாயில் இப்னு அஸ்கஉ, நூல் – முஸ்லிம்.

நபி (ஸல்) அவர்கள் என்று பிறந்தார்கள்?

நபி (ஸல்) அவர்கள் என்று பிறந்தார்கள்?


“நபி (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை அன்று பிறந்தார்கள். ஒரு அரபி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் திங்கட்கிழமை நோன்பு வைப்பது பற்றி என்ன கூறுகிறீர்கள்? என வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அன்றுதான் நான் பிறந்தேன், அன்று தான் என் மீது வஹ்யீ இறக்கப்பெற்றது எனப் பதில் அளித்தார்கள்”. அறிவிப்பவர்-அபுகதாதா (ரலி) நூல்- முஸ்லிம்

“நபி (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை அன்றே பிறந்தார்கள். திங்கட்கிழமை அன்றே நபியாக அறிவிக்கப்பட்டார்கள். மக்காவிலிருந்து மதீனாவுக் அவர்கள் ஹிஜ்ரத் செய்ததும் திங்கட்கிழமை அன்றுதான். அவர்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்ததும் திங்கட்கிழமை அன்றுதான். அவர்கள் இறப்பெய்தியதும் திங்கட்கிழமை அன்றுதான். அவர்கள் ஹஜருல அஸ்வத் கல்லை எடுத்துக் கொடுத்ததும் திங்கட்கிழமை அன்றுதான்”. அறிவிப்பவர்-இப்னு அப்பாஸ் (ரலி) நூல்-அஹ்மத்

இன்னும் சில அறிவிப்புகளில், நபி (ஸல்) அவர்கள் யானை ஆண்டு என்று அழைக்கப்பெறும் ஆண்டில், ரபீஉல் அவ்வல் மாதம் பிறை பன்னிரண்டில் பிறந்தார்கள் என வந்துள்ளது. மற்றும் சில அறிவிப்புகளில் அவர்கள் பிறந்தது ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 18 என்றும் வந்துள்ளது. உதுமான் (ரலி) அவர்கள், குபாஃத் இப்னு அஷ்யம் (ரலி) அவர்களிடம், “நீங்கள் பெரியவரா அல்லது ரசூல் (ஸல்) அவர்கள் பெரியவரா?” என வினவினார்கள். அதற்கவர்கள், “ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் என்னை விடப் பெரியவர்கள். ஆனால், நான் பிறப்பில் அவர்களை விட முந்தியவன். நான் யானைகளின் சாணங்கள் பச்சை நிறத்தில் இருந்ததைக் கண்டுள்ளேன்”, எனக் கூறினார்கள். அறிவிப்பவர்- முஹம்மது இப்னு இஸ்ஹாக்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் யானை ஆண்டு பிறந்தார்கள். அதன்பிறகு பதினைந்து வருடங்களுக்குப் பிறகு உக்காழ் எனும் சந்தை கூடியது. யானையாண்டிற்குப் பின் இருபத்தைந்து வருடங்கள் தொடக்க்கத்தில் கஃபத்துல்லாஹ் கட்டப்பட்டது. யானை ஆண்டிற்குப் பின் நாற்பதாண்டுகள் தொடக்கத்தில் ரசூல் (ஸல்) அவர்கள் நபியாக்கப் பெற்றார்கள். அறிவிப்பவ்ர்-யஃகூப். (பைஹகி)

Wednesday, January 25, 2012

நபி (ஸல்) அவர்களின் பிறப்பின் சிறப்பு

بسم الله الرحمن الرحيم
الحمد لله والصلاة والسلام على سيدنا محمد
لا نبي بعد وعلى اله واصحابه نجوم سماء الهدى
ومن تبعهم من الجن والانس






நபி (ஸல்) அவர்களின் பிறப்பின் சிறப்பு

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தால்...
அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே. சாந்தியும், சமாதானமும் நமது தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களைப் பின்பற்றிய நேர்வழியின் வழிகாட்டும் நட்சத்திரங்களாகத் திகழும் அவர்களின் தோழர்கள் மீதும், ஜின்களிலும், மனிதர்களிலும் அவர்களைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகுக..

இம்மை, மறுமையின் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காக இறைவன் அனுப்பிய தூதர்களில் இறுதியாக அனுப்பப் பெற்றவர்கள் தான் புகழப்படுபவர் (அவர்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகுக) என அழைக்கப் படும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
இறைவன் மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் உலக இறுதி நாள் வரை வழிகாட்டியாக அனுப்பிய முன்மாதிரி மனிதர்.

ஒருவரை இன்னொருவர் பின்பற்ற வேண்டும் எனில், பின்பற்றுபவரை விட பின்பற்றப் படுபவர் மேன்மையாக இருக்க வேண்டும். இல்லையெனில், பின்பற்றுதல் என்பதற்கே பொருள் இல்லாததாகி விடும். மனிதர்களும், மனிதர்கள் அல்லாத ஜின்களும் ஒரே ஒரு நபரை மட்டுமே இறுதிநாள் வரை முன்மாதிரியாகப் பின்பற்ற வேண்டும் எனில், அத்தகையவர் மற்றவர்களை விடப்பல விஷயங்களிலும் மேன்மையாகத் தான் இருக்க வேண்டும். அந்த வகையில் தமது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருக்கும் நபி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறப்பும் மற்ற மனிதர்களை விடச் சிறப்பானதாகவே அமைந்துள்ளது.

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் ஆகிய அல்லாஹ் திருமறையில் கூறுவதாவது, اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ سورة الأنعام » الآية 124 அவனது தூதுத்துவத்தை எங்கு வைக்கவேண்டும் என அல்லாஹ் மிகவும் அறிந்தவன், (அல்குர்ஆன், சூரா அன்ஆம்.124)

மன்னர் ஹிர்கல் நபி (ஸல்) அவர்களைப் பற்றி அபூசுஃப்யானிடம் விசாரிக்கையில், அவரது வம்சம் உங்களில் எப்படிப்பட்டது? எனக் கேட்டார். அதற்கு அபூசுஃப்யான், அவர் எங்களில் மிகவும் உயர்ந்த வம்சத்தைச் சார்ந்தவர், எனப் பதில் அளித்த பொழுது அதைக் கேட்ட மன்னர் ஹிர்கல், ஆம், இறைத்தூதர்கள் உயர்ந்த வம்சத்தில் தான் அனுப்பப் படுகிறார்கள், எனப் பதில் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் ஆதமின் மக்களாகிய மனித குலத்திற்கும், ஜின்களுக்கும், அனைத்துப் படைப்பிற்கும் தலைவராக இம்மையிலும், மறுமையிலும் இருக்கிறார்கள். முஹம்மது-புகழப்படுபவர், அஹ்மது-மிகவும் புகழ் மிக்கவர், மாஹீ-(இறைநிராகரிப்பெனும் குஃப்ரை) அழிப்பவர், ஆகிப் – (அவருக்குப்பின் வேறொரு நபி இல்லாத) இறுதியானவர், அல்ஹாஷிர் – மனிதர்களை மறுமையில் தனது பாதங்களுக்கிடையே எழுப்புபவர், அல்மக்ஃபீ- அடிக்கு அடி பின்பற்றப்படுபவர், நபிய்யுர் ரஹ்மத் (இறையருளைப் பெற்றுத் தரும்நபி), நபிய்யுத் தவ்பா (பாவமன்னிப்பைப் பெற்றுத் தரும் நபி), நபிய்யுல் மல்ஹமா - இறைநிராகாரிப்பை எதிர்க்கும் யுத்தகளங்களின் நபி, ஃகாத்தமுன்னபி - நபிமார்களுக்கெல்லாம் இறுதி முத்திரையான நபி என்றெல்லாம் பல வித சிறப்புப் பெயர்களைத் தாங்கியவர்கள் நபி பெருமானார் (ஸல்) அவர்கள்.