தர்காக்களை இடித்து விட்டால் ஷிர்க் ஒழிந்து விடுமா?
அஃப்ளலுல் உலமா,
அ. அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில்.,
இஸ்லாம் என்னும் மார்க்கம் தவ்ஹீத் எனும்
ஏகஇறைவன் ஒருவனை மட்டுமே வணக்கத்துக்குரியவனாக்க ஏற்றுக் கொண்டு, அவனுக்கே அடிபணிந்து
வாழ்தலைக் குறிக்கும். குஃப்ர் என்பது அந்த
இறைவனையே மறுத்து நிராகாரிப்பதாகும். ஷிர்க்
என்ற அரபி வார்த்தை இஸ்லாத்தின் பார்வையில் இறைவனுக்கு இணையாக இறைவன் அல்லாத மற்றவற்றுக்கும்
அதே போன்ற சக்திகள் உண்டு என்று கருதி அந்த ஏக இறைவனுக்கு இணையாக மற்றவற்றையும் நம்பிக்கை
கொண்டு செயல் படுவதைக் குறிக்கும்.
இறைவனுக்கு இணையாக மக்களால் கருதப் படும்
பலவற்றில் இறைவனது நேசர்களாக்க் கருதப் பெறும் பெரியோர்களும் உண்டு.
தற்போது இறைநேசர்களாக்க் கருதப் பெற்றவர்கள்
அடக்கம் செய்யப்பட்ட தர்காக்கள் ஷிர்க்கின் பிறப்பிடங்கள் என்றும், ஷிர்க்கைப் பரப்பும் மையங்கள் என்றும் குறை கூறப் பட்டு, தர்காக்களை இடித்து விட்டால்,
கப்ருகளைத் தரைமட்டமாக ஆக்கி விட்டால், ஷிர்க்கை ஒழித்து விடலாம் என்று பலத்த பிரச்சாரங்கள் செய்யப்
பட்டு வருகின்றன.
உண்மையில் தர்காக்களை இடித்து விட்டால்
ஷிர்க் ஒழிந்து விடுமா…? தர்காக்கள்
வெறும் கட்டிடங்களே அன்றி மனிதர்கள் அல்லவே?
தர்காக்கள் என்பன யாருக்காக,
எப்போது கட்டப்பட்டன?
தர்காக்கள் ஒரு காலத்தில் ஏகத்துவக் கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருந்த
இறைநேசர்கள் காலஞ் சென்றதும், அவர்கள் எல்லோரையும் போன்ற சாதாரண மக்கள் அல்ல,
இறைவனின் ஏகத்துவத்தை தங்கள் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு மூச்சிலும் கடைப்பிடித்த மக்கள் என்று இனி வருவோருக்குத்
தெரிய வேண்டும் என்பதற்காக, அவர்கள் இறந்தபின்னர், அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட கட்டிடம் தானே? பின்னர், அது எவ்வாறு ஏகத்துவத்தின் அடையாளமாக இருப்பதற்குப் பதிலாக, எவ்வாறு ஷிர்க்கின் அடையாளமாக இருக்க இயலும்?
அப்படி என்றால், கட்டிடத்தில் ஷிர்க் இல்லை,
அதனைச் சுற்றி வாழும்,
அந்த இடத்திற்கு வருகை புரியும் மக்களின் மனதில், பழக்க வழக்கங்களில்,
நடைமுறைகளில் தான் ஷிர்க் இருக்கின்றதே அன்றி தர்கா எனும் கட்டிடத்தில்
ஷிர்க் என்பது எதுவும் இல்லை.
அல்லாஹ் தன்னை வணங்குவதற்கு அடையாளமாக
கஅபத்துல்லாஹ் எனும் இறையில்லத்தை ஆக்குமாறு நபிமார்களுக்குப் பணித்தான். ஆனால், நபிமார்கள் மறைந்த பின்னர் காலப்போக்கில்,
அதைச் சுற்றியுள்ள மக்களின் மனதில் ஷைத்தானின் தூண்டுதலால் உண்டாக்கப்பட்ட
வழிகேட்டின் காரணமாக, ஷிர்க்
என்னும் ஏக இறைவனுக்கு இணையாக ஏகத்துவத்தைப் போதித்து மறைந்த நபிமார்களையே கருதும்
அளவுக்கு நம்பிக்கைகள் மாசு பட்ட பின்னரே,
அதே இறையில்லத்தைச் சுற்றிலும் ஷிர்க் உண்டானது. உண்மையில், இறைவனது இல்லமாகிய கஅபத்துல்லாஹ்வில்
ஒன்றும் ஷிர்க் இல்லை. எனினும், அதைச் சுற்றி வாழ்ந்த மக்களின் மனதிலும், அதனால் மாறுபட்ட அவர்களின் நடைமுறைகளிலும், பழக்கவழக்கங்களிலும் தான் ஷிர்க் இருந்த்து.
நபி ஸுலைமான்
(அலை) அவர்கள் கட்டிய பைத்துல் முகத்தஸ் எனும் இறையில்லத்தைச் சுற்றி இருந்த மக்கள் காலப்
போக்கில் வழி பிறழ்ந்து விட்டனர். அவர்களின் மத்தியில், நபி ஈஸா (அலை) அவர்களை அனுப்பிய போதும்,
அல்லாஹ், மக்களை ஏகத்துவத்தின் பால் அழைக்குமாறு கட்டளையிட்டானே அன்றி பைத்துல் முகத்தஸ்
பள்ளியின் கட்டிடத்தை இடிக்குமாறு பணிக்கவில்லை.
இன்னும்,
அப்ரஹாவின் யானைப் படையினர் அந்த இறையில்லத்தை இடிக்க வந்த பொழுதும், அபாபீல் பறவைப் படைகளை அனுப்பி அப்ரஹாவின் கூட்டத்தாரை அழித்துத்
தனது இறையில்லத்தைக் காப்பாற்றிக் கொண்டானே அன்றி,
அதனை இடிப்பதற்கு ஏதும் வாய்ப்பளிக்கவில்லை.
அதுபோன்றே,
தான், அல்லாஹ் தன் தூதர் முஹம்மது (ஸல்ல்ல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையும், மக்கள் ஏகத்துவத்தின் பால்
தங்கள் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்வதற்காக,
கூலூ லா இலாஹ இல்ல்ல்லாஹ்,
துஃப்லிஹூன் – மக்களே, அல்லாஹ்வை அன்றி இறைவன் இல்லை
என்று கூறுங்கள், நீங்கள் வெற்றி அடைவீர்கள், என்று கூறி அழைக்குமாறு ஏவினானே அன்றி, கஅபத்துல்லாஹ்வை இடித்து விடுமாறு ஒருபோதும் ஏவவில்லை.
இன்னும்,
நபி (ஸல்) அவர்களும், மக்கா வெற்றியின் போது கஅபத்துல்லாஹ்வைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த
சிலைகளை அகற்றினார்களே அன்றி கஅபத்துல்லாஹ் எனும் இறையில்லத்தை இடித்துக் காட்டவில்லை.
ஏனெனில்,
அது என்றென்றும் ஏகத்துவத்தின் அடையாளமாகத் திகழ்ந்திருந்ததே
அன்றி, அதனைச் சுற்றியுள்ள மக்கள்
தான் ஏகத்துவக் கொள்கையில் இருந்து பிறழ்ந்திருந்தனர்...
இதிலிருந்து நமக்குப் புரிவது என்னவெனில், கட்டிடங்களை இடிப்பது இறைவனது கட்டளை அல்ல. இஸ்லாத்தின் நோக்கமல்ல.
ஏகத்துவத்தின் நோக்கம் அல்ல.
மக்களின் மனதில் ஆழப் பதிந்திருக்கும், ஏகஇறைவனுக்கு இணை கற்பிக்கும் நம்பிக்கைகளை இடித்துத் தகர்ப்பதே
இறைவனின் கட்டளை, இஸ்லாத்தின் நோக்கம் ஆகும், என்று விளங்குகின்றது.
மக்கா வெற்றிக்குப் பின்னர், ஏகத்துவத்தின் கொடி கஅபத்துல்லாஹ்வில் ஏற்றப்பட்டதும், அதே கஅபத்துல்லாஹ்வின் மீதிருந்து பிலால் (ரலி) அவர்கள் ஏகத்துவ முழக்கத்தை முழங்கினார்கள்.
ஆனால், அப்போது அதைச் சூழ்ந்திருந்த மக்களின் மனதில் இருந்த நம்பிக்கைகளில் இணைவத்தல்
எனும் ஷிர்க் இல்லை. உண்மையான
ஏகத்துவம் என்ற தவ்ஹீதே இருந்த்து.
அதுபோன்றே,
இறைநேசர்களாக வாழ்ந்து,
காலத்தால் உலகை விட்டுப் மறைந்து சென்ற நல்லோர்களை அடையாளம்
காட்டுகின்ற தர்காக்கள் எனும் கட்டிடங்களும்,
ஏகத்துவத்தின் அடையாளங்கள்தான். மக்கள் அவற்றைப் பயன்படுத்தும்
முறையில் தான், அவை இணைவைப்பின் அடையாளங்களாகப்
பார்ப்பவர்களுக்கு இன்று தோன்றுகின்றன.
எவ்வாறெனில்,
சாதாரண ஒரு முஸ்லிம் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டை முஸ்லிம்
வீடு என்று கூறுகின்றோம். அவர் இறந்து விட்ட பின்னாலும், அவர் வசித்து வந்த வீடு முஸ்லிம் வீடு என்றே அழைக்கப் பெறும். அவர் இறந்த பின்னர் அதே வீட்டில் அடக்கப் பெற்றாலும், அந்த வீடு முஸ்லிம் வீடு என்றே அழைக்கப் படும். ஏனெனில், ஒரு முஸ்லிம் வாழ்ந்து வரும் அல்லது வாழ்ந்து வந்த வீடு ஏகத்துவத்தின் அடையாளமாகத்
தான் இருக்கும். (அவர் பெயரளவில் முஸ்லிமாக
இருந்தாலும் சரியே) ஏனெனில், முஸ்லிம் ஒருவர் வசிக்கும் வீடு ஏகத்துவத்தின் அடையாளம் தான். அதை எப்போதும் மாற்ற இயலாது.
அந்த வீட்டை முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு விற்கும் வரை. அதுபோன்றே, அல்லாஹ்வை மறுத்தோ, இணைவைத்தோ
வாழும் மக்கள் வசிக்கும் வீடு, இணைவைப்பின் அடையாளமாகத்தான் இருக்கும்.
அத்தகைய வீடு முஸ்லிம் ஒருவருக்கு விற்கப்படும் வரை. இருந்தாலும், ஒரு வீட்டில் வசிக்கும் மக்கள்
இறைவனை மறுக்கிறார்கள், அல்லது
இணைவைக்கின்றார்கள் என்ற காரணத்திற்காக, அவர்களது வீட்டை நாம் இடிப்பதில்லை. அவர்களை இறைவனின் பக்கமும், அவனது ஏகத்துவத்தின் பக்கமும் அழைப்பதே நம் கடமை. எனவே, முஸ்லிம் ஒருவர் வசிக்கும் வீட்டை இது ஒரு முஸ்லிம் வீடு என்றும், முஸ்லிம் அல்லாதவர் வசிக்கும் வீட்டை முஸ்லிம் அல்லாதவர் வீடு
என்றுதான் அடையாளம் காண்கிறோம். ஆனால், ஒரு முஸ்லிம் அல்லாதவர்,
ஒரு நாள் முஸ்லிம் ஆகிவிட்டால்,
அன்றே அவரது வீடும் முஸ்லிம் வீடாகி விடுகின்றது. அவர் முஸ்லிம் ஆகிவிட்டதால்,
அவர் ஏற்கனவே இருந்த வீட்டை இடித்து விட்டுப் புதிதாக ஒரு வீட்டைக்
கட்ட வேண்டியது அவசியம் இல்லை. ஆனால், இஸ்லாத்திற்கு மாற்றமான அடையாளங்களை
அவர் வீட்டில் இருந்து நீக்கிக் கொள்வது அவர் மீது கடமை.
இதுதான் நடைமுறை ஆகும்.
எனவே,
தர்காக்களை இடித்து விடுவதாலும்,
கப்ருகளைத் தரை மட்டமாக்குவதாலும் ஷிர்க் எனும் இணைவைப்பு ஒன்றும்
எக்காலத்திலும் மறையாது. அது ஒரு முழுமையான தீர்வும் அல்ல. மக்களின் மனதில் உள்ள நம்பிக்கைகளை மாற்றுவதால் மட்டுமே ஷிர்க் மறையும். ஏனெனில், ஏகத்துவம் இருப்பது கட்டிடங்களில் அல்ல….
மக்களின் மனதிலும்,
செயல்களிலும், நடைமுறைகளிலும் தான். அதுபோன்றே, ஷிர்க் இருப்பதும் கட்டிடங்களில்
அல்ல, மக்களின் மனதிலும், செயல்களிலும், நடைமுறைகளிலும் தான்..
அறியாமைக் காலத்தில் மக்கா நகரில் கஅபத்துல்லாவைச்
சுற்றி எண்ணவியலா அனாச்சாரங்கள் நடந்து கொண்டிருந்தன. பெண்கள் அதனை நிர்வாணமாகச்
சுற்றி வந்து கொண்டிருந்தனர். இன்னும், ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள் இவற்றின் உறுப்புகளைச் சேதப்படுத்தியும்,
களியாட்டம் இட்டுக் கொண்டும் இருந்தனர். அதுபோன்றே, தர்காக்களிலும், கந்தூரி
என்ற பெயரில், மார்க்கத்துக்கு முரணான பாட்டும், அரைகுறை ஆடை அணிந்த பெண்களின் நடனமும், கூத்தும், கேளிக்கைகளும், பலவித
மிருகங்ளைப் போன்று பொம்மைகளைச் செய்து ஊர்வலமாகத் தூக்கிக் கொண்டு செல்வதும், இன்னும் பலப்பல அனாச்சாரங்கள் ஒவ்வொரு தர்காவிலும் நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றன.
இத்தகைய அனாச்சாரங்களில் இருந்து மக்களைத்
தூய்மைப் படுத்த்த் தான் வேண்டும். ஆனால், தர்காக்கள் இருக்க வேண்டும்.
அவற்றில், கந்தூரிகள் எனும் இறைநேசர்களின் நினைவு நாட்களும்,
விழாக்களும் நடக்க வேண்டும்.
ஏனெனில், உங்களில் இறந்துவிட்டவரின் நற்செய்கைகைளை நினைத்துப் பாருங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். இறைநேசர்களின் நினைவு நாட்கள் என்று ஒன்று கொண்டாடப்படவில்லை
எனில், அவர்களின் நற்செயல்கள் பற்றி
எப்படி நினைத்துப் பார்க்க இயலும்? அவர்களது வரலாறுகளை எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?
அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை நம் வாழ்வில் எப்படி எடுத்து
நடக்க இயலும்?
எனவே,
கந்தூரி எனும் இறைநேசர்களின் நினைவு நாட்களில், மார்க்கத்திற்கு முரணான பாட்டு,
நடனம், ஊர்வலம், கேளிக்கைகளுக்குப் பதிலாக, அந்த இறைநேசரின் வாழ்க்கை வரலாறு,
அவர்கள் ஏகத்துவத்தைப் பரப்புவதில் சந்தித்த துன்பங்கள், சோதனைகள், அவற்றை வென்று அவர்கள் இறைமார்க்கத்திற்குப் புரிந்த சேவைகள் நினைவு கூறப் பட வேண்டும். புத்தகங்களாக வெளியிடப் பட வேண்டும். இன்னும், அந்நினைவு நாட்களில், குர்ஆன் ஓதி முடிக்கும் மஜ்லிஸ்கள், குர்ஆன்-ஹதீஸ் ஓதிக் கொடுக்கும் பாட
வகுப்புகள், திக்ரு மஜ்லிஸ்கள், ஸலவாத் மஜ்லிஸ்கள்,
உலமாக்களின் உபதேசங்கள்,
மார்க்க அறிவை ஊட்டும்,
குழந்தைகளுக்கும், பெண்களுக்குமான சிறப்பு நிகழ்ச்சிகள்,
அந்தந்த தர்காக்கள் உள்ள ஊர்களில் உள்ள மக்களின் மார்க்க, பொருளாதாரா, கல்வி, சமுதாய மேம்பாட்டிற்கான ஆலோசனைகள், உதவி வழங்கும் விழாக்கள் போன்றவை நடைபெற வேண்டும். தர்க்காக்களின் சொத்துகளின் மூலம் கிடைக்கும் வருமானங்கள் வீணாக்கப்படுவதற்குப்
பதிலாக, சமுதாயத்தின் நலிவடைந்த மக்களுக்காகவும், சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படும் திட்டங்கள்
வகுக்கப் பட்டுச் செயல் படுத்தப் பட வேண்டும்.
தர்காக்களுக்குச் சொந்தமான நிலங்களில் மத்ரஸாக்கள், பள்ளிக்கூடங்கள், அல்லது இரண்டும் இணைந்த கல்விக் கூடங்கள்,
மருத்துவமனைகள், நூலகங்கள், ஹலாலான முறையில் பொருளீட்டும்
தொழில், வேலை வாய்ப்பு மையங்கள் தொடங்கப்
பெற வேண்டும்.
கட்டிடங்களை இடிப்பதற்குச் சில மணி நேரங்கள் போதும். கட்டுவதற்கோ பல நாட்கள், வருடங்கள் ஆகும். ஒரு சதுர அடி 1500 ரூபாய் முதல் 15000 வரை மதிப்பிடப்படும் இக்காலத்தில் இருக்கும் கட்டமைப்புகளை இடித்து விட்டு புதிதாக ஒரு கட்டமைப்பை உருவாக்குவது என்பது காலவிரயத்தையும், பணவிரயத்தையும் உருவாக்குமே அல்லாது அது ஓர் அறிவுடைமையான தீர்வாக இருக்காது. எனவே, அவ்வாறு, பல நாட்களாக்க் கட்டப்பட்ட ஏற்கனவே ஒரு கட்டமைப்புக்குள் இருக்கும் தர்காக்களின் மூலம் சமுதாயத்திற்கு உண்மையான பலன்கள் போய்ச் சேர வேண்டும். இவ்வடிப்படையில், மக்கள் மனங்களைச் மாற்றிச் செப்பனிடுவதற்கான நற்பணிகள் நடைபெறவேண்டும். இச்சீர்திருத்தங்கள் நடைபெற ஊர்மக்கள் ஒன்று கூடிச் செயல்பட வேண்டும்.
இவ்வாறு,
மக்களின் மனம் மாறிச் செயல்பட்டால்,
அந்த தர்காக்களில் அடங்கப் பெற்றுள்ள இறைநேசர்கள் பரப்பிய ஏகத்துவத்தின்
நறுமணம் எங்கும் பரவும் நிலை உண்டாகும்.. அந்த இறைநேசர்களின் மனம் உண்மையில் சாந்தி அடையும்….!
