Monday, November 26, 2012

இஸ்லாமியப் பொருளாதாரம் (2)

இஸ்லாமியப் பொருளாதாரம் (2)
சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வழிகள்
அஃப்ளலுல் உலமா
அ. அஹ்மது ஆரிஃப், எம். காம்., எம். ஃபில்.,
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ், சென்னை-600087

விசுவாசிகளே, நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடங்கள்.  அவ்வாறே, அல்லாஹ்வுடைய தூதருக்கும், உங்கள் அதிபருக்கும் வழிப்பட்டு நடங்கள்.  நீங்கள் உண்மையாகவே, அல்லாஹ்வையும், இறுதிநாளையும் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால், உங்களுக்குள் யாதொரு விஷயத்தில் பிணக்கு ஏற்படின், அதனை அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள்.  இதுதான் நன்மையாகவும், மிக அழகான முடிவாகவும் இருக்கும். (அல்குர்ஆன் 5-59)

மனிதகுலத்தின் எல்லா வகையான குழப்பங்களுக்கும் தீர்வு காணும் வழியை மேற்கண்ட வசனம் நன்கு தெளிவு படுத்துகின்றது.  பிணக்கு ஏற்படின், அதனை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள் என்பதன் பொருள், அல்லாஹ் அருளிய குர்ஆன் மற்றும் அவன் தூதரின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் சிக்கல்களுக்கு தீர்வு காணுங்கள் என்பதாகும்.

தெளிவாகச் சொல்வதென்றால், எந்த விஷயத்திலும், முடிவு செய்வதற்குக் கீழ்க்கண்ட அடிப்படைகள் கையாளப் பெற வேண்டும். 

1. அல்லாஹ் அருளிய குர்ஆன்
2. ஹதீது, சுன்னத்து
3. இஜ்மாஉ
(இறைநம்பிக்கையாளர்களின் ஏகோபித்த முடிவு)
4. கியாஸு (ஏற்கனவே எடுக்கப்பட்ட உதாரணங்களின் அடிப்படைகளைப் பின்பற்றுதல்), இஜ்திஹாது (மேற்கண்டவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்தல்)

1. குர்ஆன்
மக்களுக்கு வழிகாட்டுவதற்கென் அல்லாஹ்வால் அருளப்பெற்ற இறுதி வேதம் குர்ஆன்.  இது கூறும் முறைகள் குழப்பங்களைத் தீர்ப்பதில் பின்பற்றப் பட வேண்டும். 

குர்ஆனைப் பற்றி அல்லாஹ் கூறுவதாவது,
இது வேதநூல், இதில் சந்தேகமே இல்லை.  பயபக்தி உடையோருக்கு (இது) நேரான வழியைக் காட்டுகிறது (அல்பகரா-2)

நபியே, அல்லாஹ் உமக்கு அளித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக் கிடையில் நீர் தீர்ப்பளிப்பதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது அருளியுள்ளோம். (அந்நிஸா – 2)

நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து, பேரொளியும், தெளிவும் உள்ள ஒரு வேதம் உங்களிடம் வந்திருக்கின்றது.அதன் மூலம் அல்லாஹ், உங்களில் எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பின் பற்றுகிறார்களோ, அவர்களைச் சமாதானத்திற்குரிய வழியில் செலுத்துகின்றான். அன்றி (அறியாமை) இருள்களில் இருந்தும் அவர்களை வெளிப்படுத்தித் தன் அருளைக் கொண்டும் பிரகாசத்தின் பக்கம் கொண்டு சென்று விடுகின்றார்ன.  மேலும், அவர்களை நேரான வழியிலும் செல்லும்படிச் செய்கின்றான். (அல்மாஇதா-15, 16)

நிச்சயமாக, இந்தக் குர்ஆன் மிக நேரான வழியை அறிவிக்கின்றது.  அன்றி, விசுவாசங் கொண்டு நற்கருமங்கச் செய்வோருக்கு,நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலி உண்டு என்றும் நன்மாராயம் கூறுகின்றது.  (பனீ இஸ்ராஈல்-9)

குர்ஆனின் அடிப்படையில் தீர்வு காணாதவர்களைப் பற்றிக் கூறும் போது அல்லாஹ், எவர்கள் அல்லாஹ் அருளியற்றைக் கொண்டு தீர்ப்பளிக் கவில்லையோ, அவர்கள் தான் நிராகரிப்பவர்கள் (அல்மாஇதா – 44)

எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவிலலையோ, அவர்கள் தான் அக்கிரமக்காரர்கள். (அல்மாஇதா – 45)

எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவிலலையோ, அவர்கள் தான் அக்கிரமக்காரர்கள். (அல்மாஇதா – 47)

என்று பழித்துக் கூறுகின்றான்.

2. ஹதீதும், சுன்னத்தும்

தீர்வு காண்பதற்கு இஸ்லாம் தரும் இரண்டாம் அடிப்படை இறைத்தூதர் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்களின் சொல், செயல் மற்றும் அவர்கள் பிறரது செயல்களுக்கு அளித்த ஒப்புதல்கள் ஆகியவை ஆகும்.  இதில் நபித்தோழர்கள் மற்றும் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களான தாபிஈன்களின் சொல்,செயல், அவர்கள் பிறரது செயல்களுக்கு அளித்த ஒப்புதல்களும் அடங்கும். 

இந்த இரண்டாம் அடிப்படையின் முக்கியத்துவம் பின்வரும் இறை வசனங்களில் இருந்து விளங்குகின்றது.

எவர் இறைத்தூதருக்கு வழிப்பட்டாரோ அவர் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டேவர் ஆவார் (அந்நிஸா-2/20)

நீங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு கொண்டவர்களாக இருப்பின், என்னைப் பின்பற்றுங்கள். (அவ்வாறு செய்யின்) அல்லாஹ் உங்கள் மீது அன்பு கொண்டு உங்கள் பாவங்களை மன்னித்து அருள்வான், என நபியே, நீர் கூறும். (ஆலு இம்ரான்-31)

நிச்சயமாக, உங்களின் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டோருக்கு, இறைத்தூதரில் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்-அஹ்ஸாப்-21)

அவரது வழியை விட்டும் பிறழ்ந்து போவோர், தங்களைக் குழப்பமோ, கடுமையான வேதனையோ பிடிப்பதைப் பயந்து கொள்ளட்டும். (அந்நூர் -63)
நபியே, நீர் அல்லாஹ்வின் பாதையாகிய நேரான பாதையின் பக்கம் வழிகாட்டுகிறீர் (அஷ்ஷுஅரா-52,53)

மேலும், இறைத்தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமொப்பி) எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை உங்களை விட்டும் தடுத்தாரோ, அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள், (அல் ஹஷ்ரு-7)

3. இஜ்மாஉ

இஜ்மாஉ என்பதற்கு இறைநம்பிக்கையாளர்களின் ஒருமனதான முடிவு என்று பொருள்.  இது இஸ்லாம் பிரச்சினைகளைத் தீர்க்கக் காட்டும் மூன்றாம் வழியாகும்.

(விசுவாசிகளே), அவ்வாறே நடுநிலையான சமுதாயத்தினராகவும் உங்களை நாம் ஆக்கினோம். ஆகவே, நீங்கள், மனிதர்களுக்கு (வழிகாட்டக்கூடிய) சாட்சிகளாக இருங்கள்.  நம்முடைய தூதர் உங்களுக்கு (வழிகாட்டக்கூடிய) சாட்சியாக இருப்பார். (அல்பகரா-143)

நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன்பின்னரும் எவன் (அல்லாஹ்வுடைய) இத்தூதரை விட்டுப் பிரிந்து விசுவாசிகளின் வழியல்லாத ஒன்றில் செல்லுகிறானோ, அவனை நாம் அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு அவனை நரகத்தில் சேர்ந்து விடுவோம்.  அது செல்லும் இடங்களில் மிகக் கெட்டது. (அந்நிஸாஉ-115)

மேற்கண்ட வசனத்தில் விசுவாசிகளின் வழி என்பது இஜ்மாஉவையே குறிக்கும் என்பது இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் கருத்தாகும்.

எனது உம்மத்தினர் (முஸ்லிம்கள்) ஒருபோதும் தவறான ஒரு விஷயத்தில் ஒன்றுபட மாட்டார்கள், என்று நபிமொழி ஒன்று கூறுகின்றது.  அதன் கருத்து, முஃமின்கள் எல்லோரும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளும் முடிவு நன்மையானகவே இருக்கும் என்பதாகும்.

4. கியாஸும், இஜ்திஹாதும்

இவை இரண்டும் நான்காம் அடிப்படையாகும்.  கியாஸு என்பது இஸ்லாமியச் சட்டத்தில் ஒரு விஷயத்திற்கு ஏற்படுத்தப்பட்ட தீர்வை அடிப்படையாக வைத்துக் கொண்டு வேறொரு சிக்கலுக்குத் தீர்வு காண்பதாகும்.

இஜ்திஹாது என்பது, ஒரு விஷயத்தில் மேற்கண்ட, எந்த முறைகளிலும் தீர்வு காண இயலாவிடின், இஸ்லாமியச் சட்டத்திற்கு முரண்படாத வகையில் தனது அறிவைப் பயன்படுத்தித் தீர்வு காண்பதாகும்.

இந்த நான்காம் அடிப்படையைப் பயன்படுத்துவதற்கு இஸ்லாமிய மார்க்க ஞானத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்று இருப்பது இன்றியமையாததாகும்.

இஸ்லாமியப் பொருளியல், மனிதனுக்கு ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களை நீக்தித் தீர்வு காண்பதற்கு மேற்கண்ட நான்கு அடிப்படைகளே ஆதாரமாக உள்ளன.  அந்நான்கின் அடிப்படையில் தீர்வு காணும் போது மட்டுமே, தீர்வின் முழுமையான நன்மை கிட்டக் கூடியதாக இருக்கின்றது.

அதிலிருந்து விலகிச் சென்று தீர்வு காண முயல்பவர்களை நோக்கித் திருக்குர்ஆன், அல்லாஹ்வுடைய நேரான வழியை அன்றித் தன் மனோ இச்சையைப் பின்பற்றுபவனை விட வழிகெட்டவன் எவனுமுண்டா? (அல்கஸஸ்-56) என இழித்துக் கூறிக் கொண்டுள்ளது.

Sunday, November 11, 2012

இஸ்லாமியப் பொருளாதாரம் (1)

இஸ்லாமியப் பொருளாதாரம் (1)
அறிமுகம்
அ. அஹ்மது ஆரிஃப், எம். காம்., எம். ஃபில்., அஃப்ளலுல் உலமா
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்,
சென்னை-600087

மக்களே, பூமியில் உள்ளவற்றிலிருந்து அனுமதிக்கப் பட்டதும், மணமானது மானவைகளைப் புசியுங்கள்.  மேலும், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப்  பின்பற்ற வேண்டாம்.  நிச்சயமாக, அவன் உங்களது வெளிப்படையான பகைவனாவான். (அல்குர்ஆன்-2-168).

இறைவனின் பிரதிநிதியான மனிதனின் அடிப்படையான மூன்று தேவைகள் உணவு, உடை, உறையுள் ஆகியன.  சமுக அடிப்படையில் வாழும் தன்மையில் மனிதன் படைக்கப்பட்டு இருப்பதால், அவனது தேவைகள் இம்மூன்றுடன் மட்டும் முடிந்து விடவில்லை.  நாகரிக வளர்ச்சியின் தாக்கம், அவனது தேவைகளை முடிவற்றதாக்கி விட்டன.  ஒரு தேவை முடிந்து விட்டதும், மற்றொன்று புதிதாக உருவாகி விடுகின்றது.  அந்நோக்கங்களை அடையும் வழிகள் மிகக் குறைவாகவே உள்ளன.  இப்படி வளர்ந்து கொண்டே செல்லும் தேவைகளை, இருக்கின்ற குறைந்த வழிகளில் ஒன்றின் மூலம், எப்படி, எப்போது நிறைவேற்றுவது என்பதில் மனிதன் குழம்பி விடுகின்றான்.  இக்குழப்பத்திலிருந்து தீர்வு காண்பதே பொருளாதார அறிவு. இஸ்லாமியப் பொருளாதாரம் இந்நோக்கத்தையே கொண்டது.

மேற்கண்ட குழப்பத்திற்கு திருக்குர்ஆனும், நபிவழியும் அளிக்கும் தீர்வே இஸ்லாமியப் பொருளாதாரமாகும்.

நவீனப் பொருளாதரமும், இஸ்லாமியப் பொருளியலும் இவ்விஷயத்தில் ஒத்த கருத்தையே கொண்டுள்ளன.  இரண்டுக்கும் இடையில் வேறுபாட்டை உண்டாக்குவது, சிக்கல்களின் தன்மை, மற்றும் அவற்றைக் கையாளும் முறையில் தான் இருக்கின்றது.  இரண்டும் தனிமனிதனை ஓரிடத்தில வேறு வேறு நோக்கில் காண்கின்றன.



இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட தேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுவதால் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத தேவைகள் உருவாகும் பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன.

மனோ இச்சையின் அடிப்படையில் வழியைத் தேர்ந்தெடுத்துத் தீர்வு காணும்போது, அது தவறான எதிர் விளைவுகளை உருவாக்கலாம்.  அந்த எதிர்விளைவுகள் மீண்டும் பல சிக்கல்களை உருவாக்கலாம்.

இறைவனின், அவன் தூதரின் வழியில் சிக்கல்களை எதிர் நோக்கும் போது தவறான தீர்வு காணும் வாய்ப்பு குறைகிறது.  சமுகத்ன் நன்மையைக் கருத்தில் கொண்டே சிக்கலுக்குத் தீர்வு காணப்படுகிறது.

அல்லாஹ் ஒருவனென்றும், அவனது தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்றும் நம்பிக்கை கொண்டு அவ்விருவரின் வழிகளைப் பின்பற்றுவோருடன் தொடர்புடைய இஸ்லாமியப் பொருளாதாரம்.

இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவைகள் மட்டுமே இஸ்லாமியப் பொருளாதாரத்தில் இடம்பெறும்.  இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகளுக்கு இஸ்லாமியப் பொருளாதாரத்தில் இடமில்லை.  எடுத்துக் காட்டாக மது உற்பத்தி செய்தல், அதனை விற்றல் போன்றவை.

தனிமதினத நலன், சமூக நலன் இரண்டும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.   தனிமனித நலனுக்கென சமூக நலன் இழக்கப்படுவதை இஸ்லாமியப் பொருளாதாரம் இடம் கொடாது.  உதராணமா வட்டி மற்றும் அதன் தொடர்புடைய வியாபாரங்கள் மற்றும் நடைமுறைகள்.

அல்லாஹ் அளித்துள்ள அரிய வளங்களை மனித சமுதாயத்துக்கு நன்மை அளிக்கும் முறையில் பயன்படுத்துவதே இஸ்லாமியப் பொருளாதாரத்தின் சாரமாகும்.

Monday, September 3, 2012

கல்வியின் மேன்மையும், சிறப்புகளும் (1)

கல்வியின் மேன்மையும், சிறப்புகளும் (1)
அரபு மூலம் இமாம் ஸர்னூஜி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)
அஃப்ளலுல் உலமா அ. அஹ்மது ஆரிஃப்


கல்வியின் சிறப்பு

கல்வியின் சிறப்பு மனிதத்துவத்தைக் கொண்டு சிறப்பிக்கப் பெற்ற எவரை விட்டும் மறைந்ததல்ல.,  கல்வியைத் தவிர உள்ள வீரம், தைரியம், வலிமை, இரக்கம், அன்பு, இவை போன்ற எல்லாப் பண்புகளிலும் மனிதனும் மிருகங்களும் பங்கு கொள்கின்றன.  

அறிவைக் கொண்டே அல்லாஹு தஆலா ஆதம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களுக்கு வானவர்களை விடச் சிறப்பளித்து, வானவர்கள் ஆதம் அலைஹிஸ் ஸலாமுக்குச் சிரம் பணிய வேண்டும் என்றும் கட்டளையிடப் பட்டனர்.

அல்லாஹ்விடம் கண்ணியத்தையும், நிலைத்திருக்கக் கூடிய மறுமையின் மகிழ்ச்சியையும் பெற்றுத் தரும் இறையச்சம் எனும் தக்வாவை அடையக் காரணமாக இருப்பதால், அல்லாஹ் கல்வியைச் சிறப்பாக்கி வைத்துள்ளான்.

கற்றுக் கொள்வீராக, ஏனெனில் நிச்சயமாகக் கல்வி அதனை உடையோருக்கு அழகாகும்.  மேலும், அது புகழப்பட்ட நற்குணங்களுக்கு அடையாளமாயும், சிறப்புமாயிக்கிறது.

கல்வியின் மூலம் ஒவ்வொரு நாளும் அதிகமான பயன்களை அடைந்து கொள்வீராக. அப்பயன்களாகிய கடல்களில் நீந்தி வருவீராக.

கல்வியில் தேர்ச்சியடைவீராக, ஏனெனில், கல்விய்ல தேர்ச்சியடைவது என்பது நன்மையின் பக்கமும், இறையச்சத்தின் பக்கமும் கொண்டு செல்லும் சிறப்பு மிக்க நடத்துனராகவும், நேர்மையான நோக்கம் கொண்டதாகவும் இருக்கிறது.

கல்வியே நேர்வழியின் வழிமுறைகளுக்கு வழிகாட்டியாகும்.  அதுவே, எல்லாத் திடுக்கங்களில் இருந்து பாதுகாகக்கும் கோட்டையாகும்.  ஏனெனில், (மார்க்கத்தில்) தேர்ச்சி பெற்ற ஒருவன், ஷைத்தானுக்கு ஆயிரம் வணக்கவாளிகளை விடக் கடினமாக இருப்பான்,
-              என்று முஹம்மது இப்னு ஹஸன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி (அல்லாஹ்வின் அருள் அவர்கள் மீது உண்டாகுக)  அவர்கள் கூறியது போன்று, கல்வியும், தேர்ச்சியும் சிறப்பு வாய்ந்தவைகளாக இருக்கின்றன. 


கடமையான கல்வி எது?

கல்வியைத் தேடுவது முஸ்லிமான ஆண், பெண் ஒவ்வொருவர் மீதும் கடமை ஆகும், என இறைத்தூதர் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளனர் என்றாலும் முஸ்லிமான ஆண், பெண் ஒவ்வொருவரும் எல்லாக் கல்வியைம் கற்றுக் கொள்வது கடமை அல்ல எனவும் தெரிந்து கொள்ளவேண்டும்.  அஃப்ளலுல் இல்மி இல்முல் ஹால் வஅஃப்ளலுல் அமலி ஹிஃப்ளுல் ஹால் அதாவது, சிறந்த கல்வி உடனடியாகத் தேவைப்படும் கல்விதான், சிறந்த செயல் நிகழ்காலத்தைப் பாதுகாகாப்பது தான் (கற்ற கல்வியின் படி உடனடியாகச் செயல்புரிவது தான்) என்று கூறப்படுவதைப் போன்று, உடனடியாக (மார்க்கத்தில்) தேவைப்படும் கல்வியைக் கற்றுக்கொள்வது தான் கடமையானதாகும்.

ஒரு முஸ்லிம் எந்நிலையில் இருந்தாலும், அந்நிலையில் அவருக்குத் தேவைப்படும் கல்வியைக் கற்றுக் கொள்வது அவர் மீது கடமை.  ஒருவருக்குத் தொழுகை கடமை ஆகிவிட்டதெனில், தொழுகையின் ஃபர்ளுகளை (மிகக் கட்டாயமான செயல்களை) நிறைவேற்றப் போதுமான அளவு கற்றுக் கொள்வது ஃபர்ளு (மிகவும் கட்டாயமானது) ஆகும்.  அதைப் போன்றே (பர்ளுக்கு அடுத்த படியான) செய்லகளை நிறைவேற்ற உதவும் செயல்களும் வாஜிபு (கட்டாயமானது) ஆகும். 


இவ்வாறே நோன்பிலும், பொருள் இருப்பின் ஜக்காத்து எனும் ஏழைவரி கொடுப்பது பற்றியும், ஹஜ்ஜு கடமை ஆகி விட்டால் ஹஜ்ஜைப் பற்றியும் கற்றுக் கொள்வது கடமை ஆகும்.  முஹம்மது இப்னு ஹஸன் என்னும் பெரியாரிடம், தாங்கள் துறவு பற்றி ஒரு நூல் எழுதக் கூடாதா? என்று கேட்கப்பட்டது.  அதற்கவர்கள், நான் வியாபாரச் சட்ட திட்டங்கள் பற்றி ஒரு நூலைத் தொகுத்து உள்ளேன், என்று பதிலிறுத்தார்கள்.  இப்பதிலின் பொருள் என்னவென்றால், வியாபாரத்தில் சந்தேகமானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும் தவிர்ந்து கொள்பவன் கூடத் துறவி தான் என்பதாகும்.

இவ்வாறு ஒவ்வொரு செயலிலும் ஆகுமான தொழில்களிலும், அவற்றைப் பற்றிக் கற்றுக் கொள்வது அவசியம்.  மேலும், ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அதில் ஹராமான (தடுக்கப்பட்ட விஷயங்கள) விட்டும நீங்கி இருப்பது பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.  இவை போன்றே, தவக்குல் இறையாதரவு, இறைவனிடம் மீளுதல், தக்வா இறையச்சம், ரிளா இறை பொருத்தம் போன்ற உள்ளத்துடன் தொடர்புடைய நிலைகளைப் பற்றியும் அறிந்து கொள்வது கடமை ஆகும்.  ஏனெனில், இவ்விஷயங்கள் எல்லா நேரங்களிலும் தேவைப்படுகின்றன.

இரக்கம், கஞ்சத்னம், கோழைத்தனம், வீரம், பெருமை, பணிவு, கற்பு, வீண் செலவு செய்தல், இவை போன்ற எல்லாக் குணங்களைப் பற்றியும் அறிந்து கொள்வது அவசியம்.  ஏனெனில், பெருமை, கஞ்சத்தனம், கோழைத்தனம், வீண் செலவு செய்தல் போன்றவைகள் ஹராம் (தடுக்கப்பட்டவை) ஆகும்.  தீய குணங்கள் பற்றியும், அவற்றுக்கு மாறன நற்குணங்களையும் அறிந்து கொள்ளாமல், தீய குணங்களில் இருந்து தவிர்ந்து கொள்வது இயலலாததாகும்.  எனவே, இவை பற்றி அறிவதும் ஒவ்வொரு மனிதனின் மீதும் கடமை ஆகும். 

சில குறிப்பிட்ட நேரங்களில் தேவைப்படும் கல்வி (உதாணமா, ஜனாஸா தொழுகை போன்றவை) பற்றி அறிந்து கொள்வது ஃபர்ளு கிஃபாயா (சிறப்புக் கடமை) ஆகும். அவற்றை ஊரில் உள்ள சிலர் அறிந்திருந்தால், மற்றவர்களை விட்டு அதன் கடமை நீங்கி விடும்.  ஆனால், ஒருவருமே அவற்றை அறிந்திருக்கவில்லை என்றால், எல்லோருமே பாவிகளாகி விடுவர்.  எனவே, இத்தகையவற்றை கற்றுக் கொள்வது பற்றி ஏவுவது, அவ்வூரில் உள்ள இமாம்கள் மீது கடமையாகும்.   அவர்கள் ஊர் மக்களை இவ்விஷயத்தில் வற்புறுத்த வேண்டும்.

கல்வியின் உதாரணமும், அதில் தடுக்கப்பட்டதும்

எல்லா நேரங்களிலும் தேவைப்படுவன பற்றிய கல்வியறிவு உணவினைப் போன்றதாகும்.  ஏனெனில், அது ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகின்றது.  சில குறிப்பிட்ட நேரங்களில் தேவைப்படும் கல்வியறிவு மருந்தினைப் போன்றதாகும்.  ஏனெனில், மருந்து சிற்சில நேரங்களில் அவசியம் ஆகின்றது.  எனினும், இல்முன்னுஜூம் என்ற வான சாஸ்திரக் கல்வியை (எதிர்காலத்தை அறிந்து கொள்ளும் நோக்கத்திற்காகக்) கற்றுக் கொள்வது நோயினைப் போன்றதாகும்.  அத்தகைய நோக்கில் அக்கல்வியினைக் கற்றுக் கொள்வது ஹராம் ஆகும். அல்லாஹ்வுடைய கற்பனையை விட்டும், விதியை விட்டும் தப்பித்து ஓடுவது இயலாத ஒன்றாகும்.  (இதற்கு மாறாக) ஒவ்வொரு முஸ்லிமும் எல்லா நேரத்திலும், அல்லாஹ்வுடைய திக்ரு (தியானம்), துஆ (இறைஞ்சுதல்), பேணுதல், குர்ஆன் ஓதுதல், சோதனைகளைத் தடுக்கும் தர்மங்களைச் செய்தல், சோதனைகளை விட்டு அல்லாஹ் பாதுகாப்பதற்க அவனிடம் இம்மையிலும், மறுமையிலும் நன்னையைம், நற்சுகத்தையும் கேட்டல போன்றவற்றிலும் ஈடுபட்டிருக்க வேண்டும்.  ஏனென்றால், யார் துஆ இறைஞ்சுதல் என்னும் பாக்கியம் அருளப் பெற்றாரோ, அவர் பதிலளிக்கப்படுவதை விட்டும் தடுக்கப் பெற மாட்டார்.

சோதனை அல்லாஹ்வின் விதியில் இருப்பின், அது எப்படியும் வந்தே தீரும். ஆனால், துஆவின் அருளால் அச்சோதனையை அல்லாஹ் இலேசாக ஆக்கி, அதற்கான பொறுமையையும் தருவான்.

என்றாலும், வானசாஸ்திரக் கலையை கிப்லா எனும் தொழும் திசையை அறியவும், தொழுகை நேரங்களை அறியவும் கற்றுக் கொண்டால் அது அனுமதிக்கப்பட்டதாகும்.  மருத்துவம் கற்றுக் கொள்வதும் அனுமதிக்கப்பட்டதாகும்.  ஏனெனில், ஏனெனில், அது தேவைகளில் ஒன்றாக இருக்கின்றது.  நபி (ஸல்) அவர்களும் மருத்துவம் பார்த்திருக்கிறார்கள்.

அறிவு இரண்டு வகைப்படும். ஒன்று மார்க்கத்தைப் பற்றிய அறிவு. இன்னொன்று உடலைப் பற்றிய மருத்துவ அறிவு.  இவையல்லாத மற்றவை வெறும் சபைகளுக்கு மட்டுமே பயன்படக் கூடியவை என்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

கல்வி, தேர்ச்சி ஆகியவற்றின் விளக்கம்

 இல்மு- கல்வி, அறிவு என்பது ஒரு பண்பாகும்.  ஒருவரிடம் அப்பண்பு இருப்பதால், அதனைக் கொண்டு அவரிடம் கூறப்படும் ஒன்று அவருக்குத் தெளிவாகின்றது.  இதற்கே கல்வியறிவு என்று கூறப்படும்.

ஃபிக்ஹு தேர்ச்சி என்பது அறிவின் நுட்பங்களை அறிந்து கொள்வதாகும்.

இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள், தன்னைப்பற்றி, தனக்குச் சார்புடையவை (நன்மை பயப்பவை) எவை, தனக்கு எதிரானவை (தீமை பயப்பவை) எவை என்று அறிவதே ஃபிக்ஹு தேர்ச்சி என்று கூறியுள்ளார்கள்.

மேலும், அவர்கள், இல்மு கல்வி என்பது அதனைக் கொண்டு அமல்-செயல் புரிவதற்கன்றி வேறெதற்குமில்லை.  அமல்-செயல்புரிவது என்பது மறுமைக்காக இம்மையை விட்டு விடுவதாகும், என்று கூறியுள்ளார்கள்.

எனவே, ஒரு மனிதன், தன்னைப் பற்றியும், தனக்கு இம்மையிலும், மறுமையிலும் எது நன்மை அளிக்கும், எது ஊறு விளைவிக்கும் என்பது பற்றியும் மறக்காமல் இருப்பது அவசியம்.  அப்போது தான், அவன் நன்மை அளிப்பவற்றை அவன் பக்கம் ஈர்த்துக் கொள்ளவும், தீமை தருபவற்றை அவனை விட்டு விலக்கிக் கொள்ளவும் செய்வான்.  ஏனெனில், அவனது, புத்தியும், அறிவும் அவன் மீதே வாதிகளாக மாறி விடக்கூடாது.  அப்படி மாறிவிடின், தண்டனையும் அதிகமாகி விடும்.

அல்லாஹ் அவனது வெறுப்பு, தண்டனைகளில் இருந்து நம்மைப் பாதுகாப்பானாக.

அரபு மூல நூல் இமாம் ஸர்னூஜி அவர்களது தஃலீமுல் முதஅல்லிம் (கற்போர் கல்வி)
தமிழில் அஹ்மது ஆரிஃப், எம். காம்., எம்.ஃபில்., அஃப்ளலுல் உலமா


Thursday, August 30, 2012

இருபதாம் ஆண்டுப் பயணத்தை தொடங்கும் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்


இருபதாம் ஆண்டுப் பயணத்தை தொடங்கும்
அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்

நவீன அரபி மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் எண்ணத்துடன், 1993 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் நாள் தொடங்கப் பெற்ற அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனம், உலக வரலாற்றில் தனது இருபதாம் ஆண்டுப் பயணத்தை வெற்றியுடன் தொடர்கின்றது.

அரபு நாடுகளுகளுக்கு வேலைக்குச் செல்ல விரும்புவோருக்கு நவீன அரபி மொழி, அரபி தட்டச்சுப் பயிற்சினை அளித்துச் சான்றிதழ் அளிககத் தொடங்கிய முதல் நிறுவனம் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் ஆகும். 1995 முதல் அரபி கம்ப்யூட்டர் வகுப்புகளை அளிக்க ஆரம்பித்தது.  இன்று வரை ஏறக்குறைய 2000க்கும் அதிகமான மாணவர்கள் இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். 

தமிழகத்தில் இருக்கும் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத், மன்பஉல் அன்வார், மிஸ்பாஹுல் ஹுதா, ரஹ்மானிய்யா, அரூஸிய்யா, மஹ்ளரா, ஜமாலிய்யா, இன்னும் பல அரபி மத்ரஸாக்களின் மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும், அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனத்தில் இணைந்து நவீன அரபு மொழி, அரபி கம்ப்யூட்டர், அரபு மொழி வணிகத் தொடர்பு,  அரபி மொழி பெயர்ப்புப் பயிற்சிகளைக் கற்றுத் திறமையாளர்களாக வெளி வருகின்றனர்.

ஸஹாரன்பூர், லக்னோ, பீஹார், குஜராத், ஆந்திரா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள அரபி மத்ரஸாக்களில் இருந்து ஆலிம் பட்டம் பெற்று வந்த மாணவர்களும் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனத்தில் பயின்று வருகின்றனர்.  அனைத்து அரபுக் கல்லூரிகளில் இருந்தும் வெளியாகும் புதிய ஆலிம்கள் ஒன்று கூடும் சங்கமமாக அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனம் திகழ்வதில் பெருமை கொள்கின்றது.

ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்குச் சுற்றுலா வரும் ஐரோப்பியர்களும் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸில் இணைந்து அரபி மொழி கற்றுக் கொண்டு சென்றுள்ளனர்.

இங்குப் பயிலும் மாணவர்களில் பலர் அரபு நாடுகளில் பணியாற்றி வருக்கின்றனர். 

அரபி மொழி, அரபி கம்ப்யூட்டர் இன்னும் அரபி மொழி வணிகத் தொடர்பு, அரபி-ஆங்கில மொழி பெயர்ப்பு போன்ற துறைகளில், 3 மாதம், 2 மாதம், 1 மாதத்திற்குள் கற்கும் வண்ணம் எளிமையான, அதே நேரத்தில் திறமையான முறையில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

அரபியில் பல்கலைக்கழகப் பயிற்சிகளான அஃப்ளலுல் உலமா, எம்.ஏ, போன்ற பயிற்சிகளுக்கான ஆலோசனைகளையும், பயிற்சிகளையும் அளித்து வருகின்றது. 

இணையத்தின் மூலம் உலகில் எங்கிருந்தாலும் அரபி மொழியைக் கற்கும் வண்ணம் ஆன்லைன் அரபி மொழிப் பயிற்சிகளை அளிப்பதிலும் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கின்றது.

அத்துடன், மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் உயர் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை ஆலோசனைகளும் அளிக்கப்படுகின்றன.

அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸின் இன்னொரு மகத்தான பணி அரபி-ஆங்கில மொழி பெயர்ப்புச் சோலை. இதன் கீழ் அரபு நாடுகளுக்குச் செல்வோருக்குத் தேவையான விசா, சான்றிதழ்கள், கடிதங்கள் ஆகியவற்றை மொழி பெயர்த்தல் ஆகியவை அடங்கும்.

இன்னும், அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விவரங்கள், வணிகக் கடிதங்கள், பொருள்களைப் பயன்படுத்தும் முறைகள் பற்றிய விவரகு குறிப்புப் புத்தகங்கள் ஆகியவற்றை அரபியில் மொழிபெயர்த்தல், அச்சிடுதல் போன்ற சேவைகளையும் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனம் அளித்து வருகின்றது.

இவ்வாறு, கல்வி, தொழில் ஆகிய இரு துறைகளிலும் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ நிறுவனம் தனது பங்கைச் சிறப்பான முறையில் ஆற்றி வருகின்றது.

அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனத்தின் பணிகள் மூலம் பயன் பெற விரும்புவோர், விவரங்களை அறிந்து கொள்ள விரும்புவோர் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கலாம்.

தொடர்பு முகவரி:

அ. அஹ்மது ஆரிஃப்
எம்.காம்., எம்.ஃபில்., அஃப்ளலுல் உலமா,
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்,
255, சிந்து தெரு, ஷேக் அப்துல்லாஹ் நகர்,
ஆழ்வார்திருநகர், சென்னை 600087
தொலைபேசி-9884033731
மின்னஞ்சல்: info@arabicinstitute.in
இணையதளம்: www.arabicinstitute.in
Yahoo Messenger: arabicinstitute@yahoo.com

பட்டம் பெறும் உலமாக்கள், இனி என்ன செய்யலாம்? - (1)

பட்டம் பெறும் உலமாக்கள்,
இனி என்ன செய்யலாம்? - (1)

(இக்கட்டுரை அல்-இஸ்லாம்,  ஜனவரி, 2001 இதழில் வெளிவந்தது)

ஏழாண்டுகள் தொடர்நது கல்வி கற்று நீங்கள் இப்போது ஆலிம் என்னும் பட்டம் பெற்றிருக்கிறீர்கள்!

இப்பட்டம் உங்களை ...
- நபிமார்களுக்கு வாரிசாகவும்
- மக்களுக்கு வழிகாட்டிகளாகவும்
- இறையச்சமுள்ளோருக்கு இமாம்களாகவும்
- சமுதாயத்திற்கு ஊழியர்களாகவும்

ஆக்கியிருக்கும் பட்டமாகும்!

இப்பட்டத்தின் மதிப்பு, நீங்கள் மேற்கண்ட நான்கு விதத்திலும் சிறப்பாகச் செயல்படுவதில்தான் உள்ளது!

ஆனால், இதுவரை நீங்கள் கற்ற கல்வி உங்களுக்கு ஓர் அடிப்படைக் கல்வி மட்டுமே! இதற்கும் மேல் உயர்கல்விகள் பல உள்ளன! உங்கள் வாழ்க்கை முழுதும் கற்கவேண்டிய எத்தனையோ விஷயங்கள் உள்ளன!




மக்களுக்கு முன்னோடிகளாகத் திகழ வேண்டியவர்கள் அவர்களை விடத் தகுதிகளிலும் முன்னேறி இருக்க வேண்டும். 

உங்கள் தகுதிகளை மேம்படுத்திக் கொள்வதற்கான சில வழிமுறைகள் இங்குத் தரப்படுகின்றன:


  1. மார்க்கக் கல்வியிலேயே உயர்கல்வியைக் கற்றுக் கொள்வது.
  2. உலகக் கல்வியில் தற்காலத்திற்கு அவசியமாக இருக்கும் கல்விகளைக் கற்றுக் கொள்வது.
  3. மேற்கண்ட இரண்டுக்கும் வாய்பில்லை எனில், மார்க்கத்தின் வழிமுறைக்கு ஏற்ற ஒரு தொழிலில் ஈடுபடுவது
 
  1. மார்க்கக் கல்வியில் உயர்கல்வி
ஆலிம் கல்விக்குப் பின்னர் உள்ள ஃபாளில், தவ்ரா மற்றும் சிறப்பு (ஃகுஸூஸிய்யாத்) வகுப்புகளில் சேரலாம். நம் நாட்டில் பல மார்க்கக் கல்வி நிறுவனங்களில் இவ்வகை உயர்கல்விகள் அளிக்கப் பட்டு வருகின்றன. அங்குத் தொடர்பு கொண்டு அதற்கான விவரங்களைச் சேகரித்து, அவற்றில் சேர வேண்டும். 

  1. உலகக் கல்விகள்
ஒரு கல்வித் தகுதியைப் பெற்றுள்ளவர்கள், அதற்கு அடுத்த கல்வித் தகுதியைப் பெறுவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.  உதாரணமாக, ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளவர்கள், எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெறவும், எட்டாம் வகுப்பு படித்துள்ளவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெறவும், பத்தாம் வகுப்பு படித்துள்ளவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்ச்சி பெறவும் முயற்சிக்க வேண்டும்.

சில யோசனைகள்
  1. 8,10,12 ஆம் வகுப்புகளுக்குரிய தேர்வுகளை எழுத முயற்சிக்கலாம்.
  2. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்திருந்தால் பல்கலைக் கழங்களில் அஃப்ளலுல் உலமா மற்றும் பிற பயிற்சிகளில் சேரலாம்.
  3. ஆங்கிலம், தமிழ், மற்றும் அரபி டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு நேரத்தில் ஒவ்வொரு மொழியாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.
  4. கம்ப்யூட்டர் கல்வியில் சேரலாம். கம்ப்யூட்டரில் விண்டோஸ், எம்-எஸ் வோர்டு, எக்ஸல், பவர்பாய்ன்ட் இன்னும் பிற கம்ப்யூட்டர் பயிற்சிகளைக் கற்கலாம்.
  5. இதில் ஆங்கிலம்-அரபி இரண்டையும் கற்றுக் கொள்வது மிகமிகச் சிறந்தது.  அரபுநாடுகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. உள் நாட்டிலும் வாய்ப்புகள் உள்ளன.
  6. ஆங்கிலம் பேச, எழுதக் கற்றுத் தரும் பயிற்சிகளில் சேரலாம்.
  7. தனியாக அல்லது உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து புதிய தொழில் தொடங்கலாம்.
இவ்வழிகளில் பட்டம் பெறும் உலமாக்கள் தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ளலாம். 

எப்படி இருப்பினும், அவர்கள்...
நபிமார்களின் வாரிசு !
மக்களுக்கு வழிகாட்டிகள் !
இறையச்சமுள்றோருக்கு இமாம்கள் !
சமுதாயத்திற்கு உழியர்கள் !

எனச் செயல்படுவதையே தங்கள் வாழ்க்கையின் இலட்சியமாகக் கொள்ள வேண்டும!

இளம் உலமாக்கள் வளர்ந்து சிறக்க, வாழ்த்துக்கள்!

அஃப்ளலுல் உலமா
அஹ்மது ஆரிஃப், எம்., காம்., எம்.ஃபில்.,
இயக்குநர்,
அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்.



Monday, August 20, 2012

வந்தது இன்றே ஈதுப் பெருநாள்! வாழ்த்தி மகிழ்வோம் வளமாய் இந்நாள்!

இல்லா தோர்க்குக் கொடுத் தளித்தும்
இருப்ப வர்கள் தானும் மகிழ்ந்தும்
வல்லோன் புகழைப் பாடித் துதிக்க
வந்தது இன்றே ஈதுப் பெருநாள்!
 
நல்லார் நயினார் முஹம்மதர் மேல்
நாளும் சொல்வோம் நன்மை ஸலவாத்
அல்லாஹ் அவன்துதி போற்றி உரைத்தே
வாழ்த்தி மகிழ்வோம் வளமாய் இந்நாள்!
 
பொல்லார் செய்யும் துன்பம் காத்தே
நல்லார் வழியில் சென்று தொடர்ந்தே
எல்லாம் ஒன்றாய்க் கூடி மகிழ்ந்தே
இருந்திடச் செய் எங்கள் ரப்பே!
 
வஸ்ஸலாம்.
 
துஆவுடன்,
தங்கள் துஆவை நாடும்,
அஹ்மது ஆரிஃப்
 

Friday, August 3, 2012

இப்லீஸ் மிஷின் தெரியுமா...?

இப்லீஸ் மிஷின் தெரியுமா...?


ஒரு நாள் அரபி தட்டச்சு பழக வேண்டும் என்று ஒருவர் நம்மிடம் வந்தார்.  இவ்வாறு வருபவர்கள், தங்களது இன்ஸ்டிடியூட்டில் என்னென்ன பயிற்சிகள் அளிக்கிறீர்கள்? பயிற்சிக் காலம் எவ்வளவு? கட்டணங்கள் எப்படி? என்று கேட்பது வழக்கம்.  அவ்வாறே அந்த நபரும் கேட்டார். 

எங்களது இன்ஸ்டிடியூட்டில் அரபி மொழி கற்றுத் தருகிறோம். அரபி டைப்ரைட்டிங், அரபி கம்ப்யூட்டர் பயிற்கள், அரபியில் கடிதம் எழுதுதல் போன்ற பயிற்சிகளைக் கற்றுத்தருகிறோம், என்று கூறி அப்பயிற்சிகளின் காலங்கள், கட்டணங்கள் முதலியவற்றையும் தெரிவித்தேன்.   அவற்றைக் கேட்டுக் கொண்ட அநத் நபர், இன்ஸ்டிடியூட்டில் பயிற்சி அளிக்கப்படும் அறையையும், அங்கு இருந்த பொருள்களையும் ஒவ்வொன்றாக நோட்டமிட்டார்.  அரபி டைப்ரைட்டிங் மிஷின்களுடன், அங்கு வைக்கப்பட்டிருந்த ஆங்கில டைப்ரைட்டிங் மிஷின் மீது அவர் பார்வை பட்டது. 

அதனைப் பார்த்தவாறே நம்மிடம் ஒரு புதுமையான கேள்வியைக் கேட்டார்.

என்ன மௌலானா? இப்லீஸ் மிஷினிலும் தாங்கள் பயிற்சி அளிக்கிறீர்களா?

அந்தக் கேள்வி புதிதாக இருந்தாலும், அதன் பின் ஓர் அறியாமை இருக்கின்றது என்பதைத் தெளிவாக உணர்த்தியது.  உடனே, நான் அவரிடம், இப்லீஸ் மிஷினா? ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள்? என்று கேட்டேன்.  பின் என்ன மௌலானா? இங்கிலீஷ்காரன் கண்டுபிடித்த மிஷின்தானே இது... அதை, அவ்வாறு கூறாமல் வேறு எப்படிக் கூறுவது என்றார்.  அவரிடம், நீங்கள் அரபி டைப்ரைட்டிங் கற்றுக் கொள்வதற்காக வந்திருக்கிறீர்கள் தானே? என்று கேட்டேன்.  ஆம், அதிலென்ன சந்தேகம்? என்றார்.  அப்படியா? உங்களது அரபி டைப்ரைட்டிங் மிஷினையும் இங்கிலீஷ்காரன் தான் கட்ணடுபிடித்தான் என்று நாம் கூறியவுடன் அவருக்குத் தூக்கி வாரிப் போட்டுவிட்டது.  இல்லை மௌலானா. அப்படி இருக்காது. இருக்கவே இருக்காது, என்றார்.

நாம் அவரை அழைத்துக் கொண்டு போய், அரபி மிஷினில் ஒரு பகுதியைக் காட்டினேன். அதில் என்ன இருக்கிறது என்று படியுங்கள் என்றோம்.  அவர், “Made in Sweden”  என்று இருக்கிறது.  என்றார்.  நாம் அவரிடம் திருப்பிக் கேட்டோம், அப்படி என்றால் உங்கள் அரபி டைப்ரைட்டிங் மிஷினையும் இப்லீஸ்தான் கண்டு பிடித்துள்ளான், என்றோம்.  அவர் ஒன்றும் கூறவில்லை. அவரிடம் நான் அறிந்த ஒரு விளக்கத்தைக் கூறினேன்.

மௌலானா, உங்களுக்கு இருக்கின்ற இந்தச் சந்தேகம் எனக்கும் இருந்தது.  மௌலானா அப்துல் ஃபத்தாஹ் பாகவி ஜுஹூரி (அதிரை) அவர்களைத் தங்களுக்குத் தெரிந்திருக்குமே? என்று நான் அவரிடம் கேட்டேன். அவர், ஆம், அவர்களை நன்றாக எனக்குத் தெரியும். தற்போது அவர்கள் இல்லை, என்றார்.  அவரிடம், ஒரு முறை மௌலானா அப்துல் ஃபத்தாஹ் ஜுஹூரி அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த பொழுது அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன்.  மௌலானா, கருவிகளைப் பொறுத்த வரை எது ஹலால்? எது ஹராம்? என்று எப்படித் தெரிந்து கொள்வது? என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், குல்லு ஆலத்தின் முபாஹுன் இஃதா உஸ்துஃமில லில் ஃகைரி அதாவது நன்மையான காரியத்திற்குப் பயன்படக்கூடிய ஒவ்வொரு கருவியும் ஆகுமானது தான்.  இதுவே மார்க்கத்தின் விதி, என்று பதிலளித்தார்கள்.  நான் இதற்கு தலீல் ஆதாரம் என்ன? என்று கேட்டேன்.  அவர்கள், நான் தான் இதற்குத் தலீல். ஒவ்வொரு ஆலிமும் ஒரு தலீல் தான், என்று பதில் கூறினார்கள் என்று நான் அவரிடம் கூறி விட்டு அவர் முகத்தைப் பார்த்தேன்.  அவர் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது.  அவர் கூறினார், இப்போது நான் புரிந்து கொண்டேன்.

அத்துடன் நான் நின்று விடவில்லை. அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு அஸ்மாக்கள் பெயர்கள் அதாவது அறிவுகள் அனைத்தையும் கற்றுத் தந்ததாக வஅல்லம ஆதமல் அஸ்மாஅ குல்லஹா (அல்குர்ஆன்-2:31) மேலும், ஆதமுக்குப் பெயர்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தான், என அவனது வேதத்தில் கூறியுள்ளான்.  எனவே, மக்களுக்கு நன்முறையில் பயன் அளிக்கக் கூடிய இல்முகள் அனைத்தும் ஹலால்தான். அவை தீய விளைவை உண்டு பண்ணும் எனில் அவை தவிர்க்கப் பட வேண்டியவையே, என்று கூறினேன். 

ஆம், அது சரிதான் என்று கூறிய அந்த நபர் ஒரு புதிய அறிவைக் கற்றுக் கொண்ட தெம்பில் புறப்பட்டார்.

அஃப்ளலுல் உலமா
அ. அஹ்மது ஆரிஃப்,  எம்.காம். எம்.ஃபில்.,
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்,
255, சிந்து தெரு, ஷேக் அப்துல்லாஹ் நகர்,
ஆழ்வார்திருநகர், சென்னை 600087

(இக்கட்டுரை அல் இஸ்லாம், ஜனவரி, 1998 மாத இதழில் வெளிவந்தது)

Friday, July 27, 2012

நோன்புன் மாண்புகள்

நோன்புன் மாண்புகள்
[இக்கட்டுரை எமது தந்தையார் தமிழ்மாமணி அல்ஹாஜ்
புலவர் அஹ்மது பஷீர், எம்.ஏ., எம். எட்.,
அவர்களது 1996ஆம் ஆண்டு நாட்குறிப்புப்
புத்தகத்தில் எழுதி வைத்திருந்தது]


நோன்பு ஒரு கேடயம். அதனை உடைக்காமலிருக்கும் வரை. அளிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் அறிவிப்பவ்ர் அபூ உபைதா (ரலி) ஹதீஸ்


நோன்பினுள் பலவிதமான நோக்கங்களும் பலன்களும் உள்ளன.  மார்க்கம் நோன்பை விதியாக்கி இருப்பதில் பல வித பலன்கள் கிடைக்க வேண்டுமென்பதே நோக்கம்.  அவற்றில் மிகப் பெரிய பலனாகிய மனோ இச்சையை முறியடித்தல் என்பது சிறிது நேரம் பசித்திருப்பதில் தான் அமைக்கப் பட்டிருக்கிறது.

ஷைத்தான் மனிதனின் உடலில் இரத்தம் போன்று ஊடுருவிச் சென்று கொண்டிருக்கின்றான்.  அவனுடைய வழிகளைப் பசித்திருப்பதன் மூலம் தடை செய்யுங்கள், என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அருளியுள்ளார்கள்.


நோன்பு இறைவன் வேதனையிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது,  நோனபு நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. ஒரு மனிதர் ரசூல் (ஸல்) அவர்களிடம் , யா ரசூலல்லாஹ், நோன்பு எதனால் முறிகிறது? என்று கேட்டார்.  பொய் பேசுவதனாலும், புறம் பேசுவதனாலும், என்று பதிலளித்தார்கள். சாப்பிடுவதும், குடிப்பதும் நோன்பை முறிப்பது போல பொய் பேசுவதும், புறம் பேசுவதும் நோன்பை முறித்து விடுகின்றன என்று உலமாக்கள் கூறி உள்ளனர்.  சிலர் நோன்பு முறியாது, அதன் பரக்கத் நீங்கி விடும் என்றும் கூறியுள்ளனர்.

புறம் பேசுவது என்றால் என்ன? என்பதாக ஒரு மனிதர் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களிடம் கேட்டார்.  ஒருவருக்குப் பின்னால் அவருக்கு மனப்பொருத்தம் இல்லாத விஷயங்களைக் கூறுவது என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.  உண்மையிலேயே அவவ்விஷயம் அவரிடம் இருந்தாலுமா? என அவர் மீண்டும் கேட்டார்.  உண்மையிலேயே அவ்விஷயம் அவரிடம் இருக்கும் பொழுதுதான் புறம் என்பதாகும்.  அவரிடம் இல்லாத விஷயத்தைக் கூறினால் அது அவதூறு என்பதாகும் என பதில் அளித்தார்கள்.

வயிற்றை நிரப்புவது போன்று வேறு வேறு எந்தப் பாத்திரத்தை நிரப்புவதும் அல்லாஹு தஆலாவுக்கு வெறுப்பானதாக இல்லை எனவும் ரசூல் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

குடலை நிரப்புவது ஞானத்தை விட்டு (மனிதனை) காலியாக்கி விடும் என்பதை உடலை வளர்ப்பவர்கள் அறிந்திருக்கவில்லை. (மௌலானா ஷைகு ஸஅதீ (ரஹ்)

பசியின் கசப்பைக் கொஞ்சம் உணரவேண்டும்.  அதுதான் அதிகமான நன்மைகள் கிடைப்பதற்கும் ஏழை, எளியோரின் மீது இரக்கம் ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கும். (அல்லாமா தன்தாவீ (ரஹ்)

பிஷ்ருல் ஹாஃபி (ரஹ்) என்ற பெரியாரிடம் ஒரு மனிதர் சென்றார்.  அப்பொழுது வர்கள் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அருகில் அவர்களின் ஆடைகள் கழற்றி வைக்கப்பட்டிருந்தன.  இந்தக் குளிரில் ஆடைகளைக் கழற்றி வைத்து விட்டு ஏன் நடுங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர்கள், ஏழைகள் பலர் ஆடையின்றி இருக்கின்றனர். அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்ள எனக்குச் சக்தியில்லை.  எனவே, அவர்களைப் போன்றாவது நான் இருந்து அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்ளவே இவ்வாறு நான் இருக்கிறேன், என்று கூறினார்கள்.

சொர்க்கத்தில் ரய்யான் என்று ஒரு வாசல் உள்ளது.  நோன்பாளிகள் மட்டுமே அதில் செல்ல முடியும். அவர்கள் எங்கே என்று தேடும்.  நுழைந்ததும் மூடிக் கொள்ளும். பிறர் செல்ல இயலாது. (ஹதீஸ் கருத்து)

ஐந்து கடமைகளில் மற்றவை பிறர் அறியக் கூடியவை. நோன்பு பிறர் அறிய இயலாதது.  பிற கடமைகளுக்கு வேறு வேறு கூலிகள் உண்டு.  நோன்பிற்கு இறைவனே கூலியாக உள்ளான். (ஹதீஸ் கருத்து)

இன்ஷா அல்லாஹ் இன்னும் வரும்...