இப்லீஸ் மிஷின் தெரியுமா...?
ஒரு நாள் அரபி தட்டச்சு பழக வேண்டும் என்று ஒருவர் நம்மிடம் வந்தார். இவ்வாறு வருபவர்கள், “தங்களது இன்ஸ்டிடியூட்டில் என்னென்ன பயிற்சிகள் அளிக்கிறீர்கள்? பயிற்சிக் காலம் எவ்வளவு? கட்டணங்கள் எப்படி?” என்று கேட்பது வழக்கம். அவ்வாறே அந்த நபரும் கேட்டார்.
“எங்களது இன்ஸ்டிடியூட்டில் அரபி மொழி கற்றுத் தருகிறோம். அரபி டைப்ரைட்டிங், அரபி கம்ப்யூட்டர் பயிற்கள், அரபியில் கடிதம் எழுதுதல் போன்ற பயிற்சிகளைக் கற்றுத்தருகிறோம்”, என்று கூறி அப்பயிற்சிகளின் காலங்கள், கட்டணங்கள் முதலியவற்றையும் தெரிவித்தேன். அவற்றைக் கேட்டுக் கொண்ட அநத் நபர், இன்ஸ்டிடியூட்டில் பயிற்சி அளிக்கப்படும் அறையையும், அங்கு இருந்த பொருள்களையும் ஒவ்வொன்றாக நோட்டமிட்டார். அரபி டைப்ரைட்டிங் மிஷின்களுடன், அங்கு வைக்கப்பட்டிருந்த ஆங்கில டைப்ரைட்டிங் மிஷின் மீது அவர் பார்வை பட்டது.
அதனைப் பார்த்தவாறே நம்மிடம் ஒரு புதுமையான கேள்வியைக் கேட்டார்.
அதனைப் பார்த்தவாறே நம்மிடம் ஒரு புதுமையான கேள்வியைக் கேட்டார்.
“என்ன மௌலானா? இப்லீஸ் மிஷினிலும் தாங்கள் பயிற்சி அளிக்கிறீர்களா?”
அந்தக் கேள்வி புதிதாக இருந்தாலும், அதன் பின் ஓர் அறியாமை இருக்கின்றது என்பதைத் தெளிவாக உணர்த்தியது. உடனே, நான் அவரிடம், “இப்லீஸ் மிஷினா? ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன். “பின் என்ன மௌலானா? இங்கிலீஷ்காரன் கண்டுபிடித்த மிஷின்தானே இது... அதை, அவ்வாறு கூறாமல் வேறு எப்படிக் கூறுவது” என்றார். அவரிடம், “நீங்கள் அரபி டைப்ரைட்டிங் கற்றுக் கொள்வதற்காக வந்திருக்கிறீர்கள் தானே?” என்று கேட்டேன். “ஆம், அதிலென்ன சந்தேகம்?” என்றார். “அப்படியா? உங்களது அரபி டைப்ரைட்டிங் மிஷினையும் இங்கிலீஷ்காரன் தான் கட்ணடுபிடித்தான்” என்று நாம் கூறியவுடன் அவருக்குத் தூக்கி வாரிப் போட்டுவிட்டது. “இல்லை மௌலானா. அப்படி இருக்காது. இருக்கவே இருக்காது”, என்றார்.
நாம் அவரை அழைத்துக் கொண்டு போய், அரபி மிஷினில் ஒரு பகுதியைக் காட்டினேன். “அதில் என்ன இருக்கிறது என்று படியுங்கள்” என்றோம். அவர், “Made in Sweden” என்று இருக்கிறது. என்றார். நாம் அவரிடம் திருப்பிக் கேட்டோம், “அப்படி என்றால் உங்கள் அரபி டைப்ரைட்டிங் மிஷினையும் இப்லீஸ்தான் கண்டு பிடித்துள்ளான்”, என்றோம். அவர் ஒன்றும் கூறவில்லை. அவரிடம் நான் அறிந்த ஒரு விளக்கத்தைக் கூறினேன்.
“மௌலானா, உங்களுக்கு இருக்கின்ற இந்தச் சந்தேகம் எனக்கும் இருந்தது. மௌலானா அப்துல் ஃபத்தாஹ் பாகவி ஜுஹூரி (அதிரை) அவர்களைத் தங்களுக்குத் தெரிந்திருக்குமே?” என்று நான் அவரிடம் கேட்டேன். அவர், “ஆம், அவர்களை நன்றாக எனக்குத் தெரியும். தற்போது அவர்கள் இல்லை”, என்றார். அவரிடம், “ஒரு முறை மௌலானா அப்துல் ஃபத்தாஹ் ஜுஹூரி அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த பொழுது அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன். “மௌலானா, கருவிகளைப் பொறுத்த வரை எது ஹலால்? எது ஹராம்? என்று எப்படித் தெரிந்து கொள்வது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், குல்லு ஆலத்தின் முபாஹுன் இஃதா உஸ்துஃமில லில் ஃகைரி – அதாவது நன்மையான காரியத்திற்குப் பயன்படக்கூடிய ஒவ்வொரு கருவியும் ஆகுமானது தான். இதுவே மார்க்கத்தின் விதி”, என்று பதிலளித்தார்கள். நான் “இதற்கு தலீல் – ஆதாரம் என்ன?” என்று கேட்டேன். அவர்கள், “நான் தான் இதற்குத் தலீல். ஒவ்வொரு ஆலிமும் ஒரு தலீல் தான்”, என்று பதில் கூறினார்கள்” – என்று நான் அவரிடம் கூறி விட்டு அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. அவர் கூறினார், “இப்போது நான் புரிந்து கொண்டேன்”.
அத்துடன் நான் நின்று விடவில்லை. “அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு அஸ்மாக்கள் – பெயர்கள் – அதாவது அறிவுகள் அனைத்தையும் கற்றுத் தந்ததாக – வஅல்லம ஆதமல் அஸ்மாஅ குல்லஹா – (அல்குர்ஆன்-2:31) மேலும், ஆதமுக்குப் பெயர்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தான், என அவனது வேதத்தில் கூறியுள்ளான். எனவே, மக்களுக்கு நன்முறையில் பயன் அளிக்கக் கூடிய இல்முகள் அனைத்தும் ஹலால்தான். அவை தீய விளைவை உண்டு பண்ணும் எனில் அவை தவிர்க்கப் பட வேண்டியவையே”, என்று கூறினேன்.
“ஆம், அது சரிதான்” என்று கூறிய அந்த நபர் ஒரு புதிய அறிவைக் கற்றுக் கொண்ட தெம்பில் புறப்பட்டார்.
அஃப்ளலுல் உலமா
அ. அஹ்மது ஆரிஃப், எம்.காம். எம்.ஃபில்.,
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்,
255, சிந்து தெரு, ஷேக் அப்துல்லாஹ் நகர்,
ஆழ்வார்திருநகர், சென்னை – 600087
(இக்கட்டுரை அல் இஸ்லாம், ஜனவரி, 1998 மாத இதழில் வெளிவந்தது)

ஆங்கிலம் படித்தால் ஹராம் என்று தீர்ப்பு வழங்கியக் காரணமாக 50 வருடங்களாக் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் நம் சமுதாயம் பின் தங்கி விட்டதை முல்லாக்கள் உணர வேண்டும்.
ReplyDeleteஜாஹிர் நாயக் போன்றோர் ஆங்கிலம் மற்றும் சம்ஸ்கிருத மொழிப் புலமைகளால் ஆயிரமாயிரம் மக்களை இஸ்லாத்தின் பால் தன் பேச்சாற்றலால் ஈர்க்கின்றார்கள்; எனவே, ஒவ்வொரு முஸ்லிமும் தா இ ஆக வேண்டும்; அதற்கு எல்லா மொழிகளையும் கற்பது காலத்தின் கட்டாயம்.
அன்பின் சகோ அஹமது ஆரிப்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
நம் மக்களிடம் இதுபோல் ஏராளமான அறியாமை எண்ணங்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் நாம் முற்று முழுதாக அகற்றவேண்டும். அதைச் செய்யாவிட்டால் இறைவன் நம்மை மன்னிக்கமாட்டான்.
உங்கள் எழுத்துக்கள் தரமான எளிய வழியில் அச்சேவையைச் செய்வதைக் காணும்போது உள்ளம் தேனில் விழுகிறது.
சிலர் இஸ்லாமிய அறிஞர்கள் என்றும் ஞானிகள் என்றும் கூறிக்கொண்டு, மூட நம்பிக்கையை இஸ்லாமியரிடம் வளர்க்கிறார்கள். ஈமானை தவறான திசைக்கு இட்டுச் செல்கிறார்கள்.
தன்னை அறிவதற்காகவேயன்றி வேறெதற்காகவும் மனிதர்களைப் படைக்கவில்லை என்று இறைவக் கூறுகின்றான்.
அவனை அறிய முயல்வதால் உயரும் ஈமானால் அவனை வணங்குவதே உண்மையானதாய் இருக்க முடியும்.
இஸ்லாமிய மக்கள் மூட நம்பிக்கைகளைக் களைந்தால்தான் இஸ்லாம் விண்ணைத்தாண்டி பிரகாசிக்கும்.
இஸ்லாம் எத்தனை மேன்மையானதாக இருந்தாலும், இஸ்லாமியர்கள் அறிவைத் தேடும் இஸ்லாமிய வழியில் பயணப்படாவிட்டால், இஸ்லாத்தின் மேன்மை வளரக்கூடியதாக அமையவே அமையாது.
அன்புடன் புகாரி
ஓர் இஸ்லாமியப் பேரறிஞர் என்னிடம் கேட்டார். குர்-ஆனில் மனிதக்கறி உண்ணக்கூடாது என்று எங்குமே இல்லை, நீங்கள் உண்ணுவீர்களா என்று. இது எத்தனை அபத்தமான கேள்வி?
ReplyDeleteகுர்-ஆனில் மிக அழகாக இதற்கான பதில் உண்டு. ஆனால் நான் அவருக்கு அந்த பதிலைத் தரவில்லை. காரணம், அது உரையாடிக்கொண்டிருந்த தலைப்பைவிட்டு விலகிச் சென்றதால்தான்.
அன்புடன் புகாரி
தங்களின் எளிய நடையில் அழகு,
ReplyDeleteஃபத்தாஹ் ஜுஹூரி அவர்களை யாரென்று அறியேன். அவர்களின் கருத்து செம்மையானது.
/// நன்மையான காரியத்திற்குப் பயன்படக்கூடிய ஒவ்வொரு கருவியும் ஆகுமானது தான் ///
நட்புடன்...
தேவன் கேசவன்
قال ابن عباس : ( وأول ما حمل نوح من البهائم في الفلك حمل الإوزة ، وآخر ما حمل حمل الحمار ) ; قال : وتعلق إبليس بذنبه ، ويداه قد دخلتا في السفينة ، ورجلاه خارجة بعد فجعل الحمار يضطرب ولا يستطيع أن يدخل ، فصاح به نوح : ادخل ويلك فجعل يضطرب ; فقال : ادخل ويلك ! وإن كان معك الشيطان ، كلمة زلت على لسانه ، فدخل ووثب الشيطان فدخل . ثم إن نوحا رآه يغني في السفينة ، فقال له : يا لعين ما أدخلك بيتي ؟ ! قال : أنت أذنت لي ; فذكر له ; فقال له : قم فاخرج . قال : ما لك بد في أن تحملني معك ، فكان فيما يزعمون في ظهر الفلك .
ReplyDeleteநூஹ் (அலை) அவர்கள் கப்பலில் முதலில் ஏறிய பொழுது அவர்கள் முதலில் உள்ளே கொண்டு சென்றது வாத்து. இறுதியில் ஏறியது கழுதை. ஷைத்தான் அதன் வாலைப் பிடித்துக் கொண்டிருந்ததால், கழுதை மட்டும் ஏற இயலாமல் நின்று கொண்டிருந்தது. அதன் முன்னங் கால்கள் இரண்டையும் கப்பலுக்குள்ளும், பின்னங்கால்கள் இரண்டையும் கப்பலுக்கு வெளியேயும் வைத்துக் கொண்டு உள்ளே நுழைய இயலாமல் நின்று கொண்டிருந்தது. நூஹ் (அலை) அவர்கள், "உள்ளே நுழை" என்று கத்தினார்கள். அப்போதும் அதனால் இயலவில்லை. மீண்டும் நூஹ் (அலை) அவர்கள், :உன்னுடன் ஷைத்தான் இருந்தாலும் பரவாயில்லை, உள்ளே நுழை", என்று கோபத்தில் கத்தியவுடன், கழுதை கப்பலுக்குள் நுழைந்து விட்டது. அதனுடன் சேர்ந்து ஷைத்தானும் உள்ளே புகுந்து விட்டான். பின்னர், ஷைத்தானை தமது கப்பலின் உள்ளே இருக்கக் கண்ட நூஹ் (அலை) அவர்கள், "சபிக்கப்பட்டவனே, நீ எப்படி என் வீட்டில் (கப்பலில்) நுழைந்தாய்?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "நீங்கள் தானே எனக்கு அனுமதி கொடுத்தீர்கள்" என்றான். அப்போது, அவர்கள், "நீ இதிலிருந்து வெளியேறிவிடு என்றார்கள்". அதற்கவன், "இல்லை. நீர் என்னை உம்முடன் சுமந்து சென்றுதான் ஆகவேண்டும்", என்று கூறினான். எனவே, அவன் கப்பலின் மேல் தளத்தில் இருந்தான் என்று கூறப்படுகின்றது. அறிவிப்பவர் - இப்னு அப்பாஸ் (ரலி), நூல்- (தஃப்ஸீர் குர்துபீ) என்று ஒரு நிகழ்ச்சி கூறப்படுவதுண்டு.
அதுபோல, இந்த மேற்கத்திய நாகரிகம், மொழியென்னும் வாலைப்பிடித்துக்கொண்டு அதன் முழு ஆதிக்கத்தையும் ஒரு நாள் நம்மீது செலுத்திவிடக் கூடும் என்ற தூர நோக்கின் அடிப்படையில் அப்போதிருந்த உலமாக்கள் ஆங்கில மொழி கற்க வேண்டாம் என்று கூறி இருக்கக் கூடும். நம்முடைய உம்மத்தின் நிலையும் ஏறக்குறைய இப்போது அவ்வாறுதானே ஆகி விட்டது. மேற்கத்திய நாகரிகம் மற்றும் அவர்களது கலாச்சாரத்தின் ஆதிக்கத்தின் கீழ்க் கட்டுப்பட்டவர்களாகத்தான் இப்போது நாம் இருக்கின்றோம். முஃமினின் புத்திக் கூர்மையைப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக, அவன் அல்லாஹ்வுடைய ஒளியைக் கொண்டு பார்க்கின்றான் என்றும் ஒரு நபி மொழி உள்ளது.
எனினும், இப்போது உள்ளே நுழைந்து விட்ட ஷைத்தானை விரட்ட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படைியலும், ஆங்கில மொழியறிவு உடையோருக்கு இஸ்லாத்தையும், அதன் வழிகாட்டுதல்களையும் எத்திவைப்பதற்காகவும், புதிய அறிவுகளையும், கலைகளையும், தொழில் நுட்பங்களையும் நாம் கற்பது அவசியம். எப்படியெனில், நபி (ஸல்) அவர்கள், ரோம் நாட்டு மன்னருக்கு இஸ்லாத்தைப் பற்றி அழைப்பு விடுப்பதற்குக் கடிதம் எழுதுவதற்காக, தமது தோழர் ஜைது (ரலி) அவர்களுக்கு ரோம் நாட்டு மொழியைக் கற்கப் பணித்தார்கள். அவர்களும், ஏறக்குறைய இரண்டு வார காலத்திற்குள் கடிதம் எழுதும் வண்ணம் அம்மொழியைக் கற்றுக் கொண்டார்கள் என்று ஹதீஸில் வருகின்றது. அதன் அடிப்படையில் நாமும், அல்லாஹ் நமக்களித்த உயர்ந்த மார்க்கமாகிய இஸ்லாத்தை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் இக்காலத்திற்குத் தேவையான உலகியல் கல்விகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.
அஹ்மது ஆரிஃப்.