கல்வியின் மேன்மையும், சிறப்புகளும் (1)
அரபு மூலம் – இமாம் ஸர்னூஜி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)
அஃப்ளலுல் உலமா அ. அஹ்மது ஆரிஃப்
கல்வியின் சிறப்பு
கல்வியின் சிறப்பு மனிதத்துவத்தைக் கொண்டு சிறப்பிக்கப் பெற்ற எவரை விட்டும் மறைந்ததல்ல., கல்வியைத் தவிர உள்ள வீரம், தைரியம், வலிமை, இரக்கம், அன்பு, இவை போன்ற எல்லாப் பண்புகளிலும் மனிதனும் மிருகங்களும் பங்கு கொள்கின்றன.
அறிவைக் கொண்டே அல்லாஹு தஆலா ஆதம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களுக்கு வானவர்களை விடச் சிறப்பளித்து, வானவர்கள் ஆதம் அலைஹிஸ் ஸலாமுக்குச் சிரம் பணிய வேண்டும் என்றும் கட்டளையிடப் பட்டனர்.
அல்லாஹ்விடம் கண்ணியத்தையும், நிலைத்திருக்கக் கூடிய மறுமையின் மகிழ்ச்சியையும் பெற்றுத் தரும் இறையச்சம் எனும் தக்வாவை அடையக் காரணமாக இருப்பதால், அல்லாஹ் கல்வியைச் சிறப்பாக்கி வைத்துள்ளான்.
“கற்றுக் கொள்வீராக, ஏனெனில் நிச்சயமாகக் கல்வி அதனை உடையோருக்கு அழகாகும். மேலும், அது புகழப்பட்ட நற்குணங்களுக்கு அடையாளமாயும், சிறப்புமாயிக்கிறது.
கல்வியின் மூலம் ஒவ்வொரு நாளும் அதிகமான பயன்களை அடைந்து கொள்வீராக. அப்பயன்களாகிய கடல்களில் நீந்தி வருவீராக.
கல்வியில் தேர்ச்சியடைவீராக, ஏனெனில், கல்விய்ல தேர்ச்சியடைவது என்பது நன்மையின் பக்கமும், இறையச்சத்தின் பக்கமும் கொண்டு செல்லும் சிறப்பு மிக்க நடத்துனராகவும், நேர்மையான நோக்கம் கொண்டதாகவும் இருக்கிறது.
கல்வியே நேர்வழியின் வழிமுறைகளுக்கு வழிகாட்டியாகும். அதுவே, எல்லாத் திடுக்கங்களில் இருந்து பாதுகாகக்கும் கோட்டையாகும். ஏனெனில், (மார்க்கத்தில்) தேர்ச்சி பெற்ற ஒருவன், ஷைத்தானுக்கு ஆயிரம் வணக்கவாளிகளை விடக் கடினமாக இருப்பான்”,
- என்று முஹம்மது இப்னு ஹஸன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி (அல்லாஹ்வின் அருள் அவர்கள் மீது உண்டாகுக) அவர்கள் கூறியது போன்று, கல்வியும், தேர்ச்சியும் சிறப்பு வாய்ந்தவைகளாக இருக்கின்றன.
கடமையான கல்வி எது?
“கல்வியைத் தேடுவது முஸ்லிமான ஆண், பெண் ஒவ்வொருவர் மீதும் கடமை ஆகும்”, என இறைத்தூதர் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளனர் என்றாலும் முஸ்லிமான ஆண், பெண் ஒவ்வொருவரும் எல்லாக் கல்வியைம் கற்றுக் கொள்வது கடமை அல்ல எனவும் தெரிந்து கொள்ளவேண்டும். அஃப்ளலுல் இல்மி இல்முல் ஹால் வஅஃப்ளலுல் அமலி ஹிஃப்ளுல் ஹால் – அதாவது, சிறந்த கல்வி உடனடியாகத் தேவைப்படும் கல்விதான், சிறந்த செயல் நிகழ்காலத்தைப் பாதுகாகாப்பது தான் (கற்ற கல்வியின் படி உடனடியாகச் செயல்புரிவது தான்) என்று கூறப்படுவதைப் போன்று, உடனடியாக (மார்க்கத்தில்) தேவைப்படும் கல்வியைக் கற்றுக்கொள்வது தான் கடமையானதாகும்.
ஒரு முஸ்லிம் எந்நிலையில் இருந்தாலும், அந்நிலையில் அவருக்குத் தேவைப்படும் கல்வியைக் கற்றுக் கொள்வது அவர் மீது கடமை. ஒருவருக்குத் தொழுகை கடமை ஆகிவிட்டதெனில், தொழுகையின் ஃபர்ளுகளை (மிகக் கட்டாயமான செயல்களை) நிறைவேற்றப் போதுமான அளவு கற்றுக் கொள்வது ஃபர்ளு (மிகவும் கட்டாயமானது) ஆகும். அதைப் போன்றே (பர்ளுக்கு அடுத்த படியான) செய்லகளை நிறைவேற்ற உதவும் செயல்களும் வாஜிபு (கட்டாயமானது) ஆகும்.
இவ்வாறே நோன்பிலும், பொருள் இருப்பின் ஜக்காத்து எனும் ஏழைவரி கொடுப்பது பற்றியும், ஹஜ்ஜு கடமை ஆகி விட்டால் ஹஜ்ஜைப் பற்றியும் கற்றுக் கொள்வது கடமை ஆகும். முஹம்மது இப்னு ஹஸன் என்னும் பெரியாரிடம், “தாங்கள் துறவு பற்றி ஒரு நூல் எழுதக் கூடாதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நான் வியாபாரச் சட்ட திட்டங்கள் பற்றி ஒரு நூலைத் தொகுத்து உள்ளேன், என்று பதிலிறுத்தார்கள். இப்பதிலின் பொருள் என்னவென்றால், வியாபாரத்தில் சந்தேகமானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும் தவிர்ந்து கொள்பவன் கூடத் துறவி தான் என்பதாகும்.
இவ்வாறு ஒவ்வொரு செயலிலும் ஆகுமான தொழில்களிலும், அவற்றைப் பற்றிக் கற்றுக் கொள்வது அவசியம். மேலும், ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அதில் ஹராமான (தடுக்கப்பட்ட விஷயங்கள) விட்டும நீங்கி இருப்பது பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். இவை போன்றே, தவக்குல் – இறையாதரவு, இறைவனிடம் மீளுதல், தக்வா – இறையச்சம், ரிளா – இறை பொருத்தம் போன்ற உள்ளத்துடன் தொடர்புடைய நிலைகளைப் பற்றியும் அறிந்து கொள்வது கடமை ஆகும். ஏனெனில், இவ்விஷயங்கள் எல்லா நேரங்களிலும் தேவைப்படுகின்றன.
இரக்கம், கஞ்சத்னம், கோழைத்தனம், வீரம், பெருமை, பணிவு, கற்பு, வீண் செலவு செய்தல், இவை போன்ற எல்லாக் குணங்களைப் பற்றியும் அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில், பெருமை, கஞ்சத்தனம், கோழைத்தனம், வீண் செலவு செய்தல் போன்றவைகள் ஹராம் (தடுக்கப்பட்டவை) ஆகும். தீய குணங்கள் பற்றியும், அவற்றுக்கு மாறன நற்குணங்களையும் அறிந்து கொள்ளாமல், தீய குணங்களில் இருந்து தவிர்ந்து கொள்வது இயலலாததாகும். எனவே, இவை பற்றி அறிவதும் ஒவ்வொரு மனிதனின் மீதும் கடமை ஆகும்.
சில குறிப்பிட்ட நேரங்களில் தேவைப்படும் கல்வி (உதாணமா, ஜனாஸா தொழுகை போன்றவை) பற்றி அறிந்து கொள்வது ஃபர்ளு கிஃபாயா (சிறப்புக் கடமை) ஆகும். அவற்றை ஊரில் உள்ள சிலர் அறிந்திருந்தால், மற்றவர்களை விட்டு அதன் கடமை நீங்கி விடும். ஆனால், ஒருவருமே அவற்றை அறிந்திருக்கவில்லை என்றால், எல்லோருமே பாவிகளாகி விடுவர். எனவே, இத்தகையவற்றை கற்றுக் கொள்வது பற்றி ஏவுவது, அவ்வூரில் உள்ள இமாம்கள் மீது கடமையாகும். அவர்கள் ஊர் மக்களை இவ்விஷயத்தில் வற்புறுத்த வேண்டும்.
கல்வியின் உதாரணமும், அதில் தடுக்கப்பட்டதும்
எல்லா நேரங்களிலும் தேவைப்படுவன பற்றிய கல்வியறிவு உணவினைப் போன்றதாகும். ஏனெனில், அது ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகின்றது. சில குறிப்பிட்ட நேரங்களில் தேவைப்படும் கல்வியறிவு மருந்தினைப் போன்றதாகும். ஏனெனில், மருந்து சிற்சில நேரங்களில் அவசியம் ஆகின்றது. எனினும், இல்முன்னுஜூம் என்ற வான சாஸ்திரக் கல்வியை (எதிர்காலத்தை அறிந்து கொள்ளும் நோக்கத்திற்காகக்) கற்றுக் கொள்வது நோயினைப் போன்றதாகும். அத்தகைய நோக்கில் அக்கல்வியினைக் கற்றுக் கொள்வது ஹராம் ஆகும். அல்லாஹ்வுடைய கற்பனையை விட்டும், விதியை விட்டும் தப்பித்து ஓடுவது இயலாத ஒன்றாகும். (இதற்கு மாறாக) ஒவ்வொரு முஸ்லிமும் எல்லா நேரத்திலும், அல்லாஹ்வுடைய திக்ரு (தியானம்), துஆ (இறைஞ்சுதல்), பேணுதல், குர்ஆன் ஓதுதல், சோதனைகளைத் தடுக்கும் தர்மங்களைச் செய்தல், சோதனைகளை விட்டு அல்லாஹ் பாதுகாப்பதற்க அவனிடம் இம்மையிலும், மறுமையிலும் நன்னையைம், நற்சுகத்தையும் கேட்டல போன்றவற்றிலும் ஈடுபட்டிருக்க வேண்டும். ஏனென்றால், யார் துஆ – இறைஞ்சுதல் என்னும் பாக்கியம் அருளப் பெற்றாரோ, அவர் பதிலளிக்கப்படுவதை விட்டும் தடுக்கப் பெற மாட்டார்.
சோதனை அல்லாஹ்வின் விதியில் இருப்பின், அது எப்படியும் வந்தே தீரும். ஆனால், துஆவின் அருளால் அச்சோதனையை அல்லாஹ் இலேசாக ஆக்கி, அதற்கான பொறுமையையும் தருவான்.
என்றாலும், வானசாஸ்திரக் கலையை கிப்லா எனும் தொழும் திசையை அறியவும், தொழுகை நேரங்களை அறியவும் கற்றுக் கொண்டால் அது அனுமதிக்கப்பட்டதாகும். மருத்துவம் கற்றுக் கொள்வதும் அனுமதிக்கப்பட்டதாகும். ஏனெனில், ஏனெனில், அது தேவைகளில் ஒன்றாக இருக்கின்றது. நபி (ஸல்) அவர்களும் மருத்துவம் பார்த்திருக்கிறார்கள்.
“அறிவு இரண்டு வகைப்படும். ஒன்று மார்க்கத்தைப் பற்றிய அறிவு. இன்னொன்று உடலைப் பற்றிய மருத்துவ அறிவு. இவையல்லாத மற்றவை வெறும் சபைகளுக்கு மட்டுமே பயன்படக் கூடியவை” என்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
கல்வி, தேர்ச்சி ஆகியவற்றின் விளக்கம்
இல்மு- கல்வி, அறிவு என்பது ஒரு பண்பாகும். ஒருவரிடம் அப்பண்பு இருப்பதால், அதனைக் கொண்டு அவரிடம் கூறப்படும் ஒன்று அவருக்குத் தெளிவாகின்றது. இதற்கே கல்வியறிவு என்று கூறப்படும்.
ஃபிக்ஹு – தேர்ச்சி என்பது அறிவின் நுட்பங்களை அறிந்து கொள்வதாகும்.
இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள், “தன்னைப்பற்றி, தனக்குச் சார்புடையவை (நன்மை பயப்பவை) எவை, தனக்கு எதிரானவை (தீமை பயப்பவை) எவை என்று அறிவதே ஃபிக்ஹு – தேர்ச்சி” என்று கூறியுள்ளார்கள்.
மேலும், அவர்கள், “இல்மு – கல்வி என்பது அதனைக் கொண்டு அமல்-செயல் புரிவதற்கன்றி வேறெதற்குமில்லை. அமல்-செயல்புரிவது என்பது மறுமைக்காக இம்மையை விட்டு விடுவதாகும்”, என்று கூறியுள்ளார்கள்.
எனவே, ஒரு மனிதன், தன்னைப் பற்றியும், தனக்கு இம்மையிலும், மறுமையிலும் எது நன்மை அளிக்கும், எது ஊறு விளைவிக்கும் என்பது பற்றியும் மறக்காமல் இருப்பது அவசியம். அப்போது தான், அவன் நன்மை அளிப்பவற்றை அவன் பக்கம் ஈர்த்துக் கொள்ளவும், தீமை தருபவற்றை அவனை விட்டு விலக்கிக் கொள்ளவும் செய்வான். ஏனெனில், அவனது, புத்தியும், அறிவும் அவன் மீதே வாதிகளாக மாறி விடக்கூடாது. அப்படி மாறிவிடின், தண்டனையும் அதிகமாகி விடும்.
அல்லாஹ் அவனது வெறுப்பு, தண்டனைகளில் இருந்து நம்மைப் பாதுகாப்பானாக.
அரபு மூல நூல் – இமாம் ஸர்னூஜி அவர்களது தஃலீமுல் முதஅல்லிம் (கற்போர் கல்வி)
தமிழில் – அஹ்மது ஆரிஃப், எம். காம்., எம்.ஃபில்., அஃப்ளலுல் உலமா