இஸ்லாமியப் பொருளாதாரம் (1)
அறிமுகம்
அ. அஹ்மது ஆரிஃப், எம். காம்., எம். ஃபில்., அஃப்ளலுல் உலமா
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்,
சென்னை-600087
மக்களே, பூமியில் உள்ளவற்றிலிருந்து அனுமதிக்கப் பட்டதும், மணமானது மானவைகளைப் புசியுங்கள். மேலும், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டாம். நிச்சயமாக, அவன் உங்களது வெளிப்படையான பகைவனாவான். (அல்குர்ஆன்-2-168).
இறைவனின் பிரதிநிதியான மனிதனின் அடிப்படையான மூன்று தேவைகள் உணவு, உடை, உறையுள் ஆகியன. சமுக அடிப்படையில் வாழும் தன்மையில் மனிதன் படைக்கப்பட்டு இருப்பதால், அவனது தேவைகள் இம்மூன்றுடன் மட்டும் முடிந்து விடவில்லை. நாகரிக வளர்ச்சியின் தாக்கம், அவனது தேவைகளை முடிவற்றதாக்கி விட்டன. ஒரு தேவை முடிந்து விட்டதும், மற்றொன்று புதிதாக உருவாகி விடுகின்றது. அந்நோக்கங்களை அடையும் வழிகள் மிகக் குறைவாகவே உள்ளன. இப்படி வளர்ந்து கொண்டே செல்லும் தேவைகளை, இருக்கின்ற குறைந்த வழிகளில் ஒன்றின் மூலம், எப்படி, எப்போது நிறைவேற்றுவது என்பதில் மனிதன் குழம்பி விடுகின்றான். இக்குழப்பத்திலிருந்து தீர்வு காண்பதே பொருளாதார அறிவு. இஸ்லாமியப் பொருளாதாரம் இந்நோக்கத்தையே கொண்டது.
மேற்கண்ட குழப்பத்திற்கு திருக்குர்ஆனும், நபிவழியும் அளிக்கும் தீர்வே இஸ்லாமியப் பொருளாதாரமாகும்.
நவீனப் பொருளாதரமும், இஸ்லாமியப் பொருளியலும் இவ்விஷயத்தில் ஒத்த கருத்தையே கொண்டுள்ளன. இரண்டுக்கும் இடையில் வேறுபாட்டை உண்டாக்குவது, சிக்கல்களின் தன்மை, மற்றும் அவற்றைக் கையாளும் முறையில் தான் இருக்கின்றது. இரண்டும் தனிமனிதனை ஓரிடத்தில வேறு வேறு நோக்கில் காண்கின்றன.
மனோ இச்சையின் அடிப்படையில் வழியைத் தேர்ந்தெடுத்துத் தீர்வு காணும்போது, அது தவறான எதிர் விளைவுகளை உருவாக்கலாம். அந்த எதிர்விளைவுகள் மீண்டும் பல சிக்கல்களை உருவாக்கலாம்.
இறைவனின், அவன் தூதரின் வழியில் சிக்கல்களை எதிர் நோக்கும் போது தவறான தீர்வு காணும் வாய்ப்பு குறைகிறது. சமுகத்ன் நன்மையைக் கருத்தில் கொண்டே சிக்கலுக்குத் தீர்வு காணப்படுகிறது.
அல்லாஹ் ஒருவனென்றும், அவனது தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்றும் நம்பிக்கை கொண்டு அவ்விருவரின் வழிகளைப் பின்பற்றுவோருடன் தொடர்புடைய இஸ்லாமியப் பொருளாதாரம்.
இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவைகள் மட்டுமே இஸ்லாமியப் பொருளாதாரத்தில் இடம்பெறும். இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகளுக்கு இஸ்லாமியப் பொருளாதாரத்தில் இடமில்லை. எடுத்துக் காட்டாக மது உற்பத்தி செய்தல், அதனை விற்றல் போன்றவை.
தனிமதினத நலன், சமூக நலன் இரண்டும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. தனிமனித நலனுக்கென சமூக நலன் இழக்கப்படுவதை இஸ்லாமியப் பொருளாதாரம் இடம் கொடாது. உதராணமா வட்டி மற்றும் அதன் தொடர்புடைய வியாபாரங்கள் மற்றும் நடைமுறைகள்.
அல்லாஹ் அளித்துள்ள அரிய வளங்களை மனித சமுதாயத்துக்கு நன்மை அளிக்கும் முறையில் பயன்படுத்துவதே இஸ்லாமியப் பொருளாதாரத்தின் சாரமாகும்.

No comments:
Post a Comment