Thursday, January 26, 2012

அல்குர்ஆனில் நபி (ஸல்) அவர்கள் இறைவனால் எவ்வாறு அழைக்கப் பெற்றுள்ளார்கள்?

அல்குர்ஆனில் நபி (ஸல்) அவர்கள் இறைவனால் எவ்வாறு அழைக்கப் பெற்றுள்ளார்கள்?


அல்லாஹ் அண்ணல் நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை, ரசூல்- தூதர், நபி (தீர்க்கதரிசி -மறைவான விஷயங்கள் அறிவிக்கப் பெறுபவர்), அமீன் (நம்பிக்கைக்குரியவர்), ஷாஹித் (சாட்சியாளர்), முபஷ்ஷிர் (நன்மாராயம் கூறுபவர்), நஃதீர் (எச்சரிப்பவர்), தாஈ இலல்லாஹ் பி இஃத்னிஹி (அவனது அனுமதியுடன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்), சிராஜுன் முனீர் (ஒளிதரும் விளக்கு), ரஊஃப் (இரக்கம் கொள்பவர்), ரஹீம்(அன்பு மிக்கவர்), ரஹ்மத் (அருள்), நிஃமத்(கொடை), ஹாதீ (நேர்வழி காட்டுபவர்) என்றெல்லாம் வர்ணித்துக் கூறியுள்ளான் என அறிஞர்கள் ஆராய்ந்து கூறியுள்ளார்கள் என்று இமாம் பைஹகீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

இத்தகைய நபி (ஸல்) அவர்களது மேன்மையான தன்மைகளை விவரிக்கும் ஆயிரத்தை விட அதிகமான சிறப்புப் பெயர்கள் என அறிஞர்கள் தொகுத்து வைத்துள்ளனர். திர்மிதீ எனும் ஹதீஸ் நூலுக்கு விளக்கம் எழுதியுள்ள ஷைகு அபுபக்கர் இப்னுல் அரபி அல் மாலிக்கீ எனும் அறிஞர் நபி (ஸல்) அவர்களின் சிறப்புப் பெயர்கள் நாற்பத்து எட்டினைத் தொகுத்து தமது அல்அஹ்வதீ எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள. நபி (ஸல்) அவர்களது தந்தையார் அப்துல்லாஹ் ஆவார்கள். நபி (ஸல்) அவர்களது பாட்டனார் அப்துல் முத்தலிபு. அப்துல் முத்தலிபின் பத்து மக்களில் கடைசி மகனே நபி (ஸல்) அவர்களின் தந்தையார். குறைஷிக்குலத்தாரின் ஆண்களிலேயே மிகவும் அழகானவராக அவர்கள் இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் தந்தையாருடன் பிறந்தவர்கள் ஹாரிஃத், ஜுபைர், ஹம்ஸா, ளிரார், அபூதாலிப் எனப்படும அப்துமனாஃப், அபூலஹப் என்ற அப்துல் உஜ்ஜா, அப்துல் கஅபா, முகீரா, நவ்ஃபல் ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையர் ஆவர். உர்வா, பர்ரா, உமைமா, ஸஃபிய்யா, ஆதிகா, உம்மு ஹகீம் எனும் பைளா ஆகியோர் நபி (ஸல்) அவர்களது தந்தையாருடன் பிறந்த சகோதரிகள். அதாவது நபி (ஸல்) அவர்களது மாமிமார்கள்.

நபி (ஸல்) அவர்களே, “நான் நதார் என்பவரின் மகன் முளர் என்பவரின் மகன் இல்யால் என்பவரின் மகன் முத்ரிகா என்பவரின் மகன் குஜைமா என்பவரின் மகன் கினானா என்பவரின் மகன் நள்ர் என்பவரின் மகன் மாலிக் என்பவரின் மகன் காலிப் என்பவரின் மகன் கஅப் என்பவரின் மகன் முர்ரா என்பவரின் மகன் கிலாப் என்பவரின் மகன் குஸை என்பவரின் மகன் அப்து முனாஃப் என்பவரின் மகன் ஹாஷிம் என்பவரின் மகன் முத்தலிப் என்பவரின் மகன் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது ஆவேன். மனிதர்களை இரண்டாகப் பிரித்தால் அதில் சிறந்த பிரிவிலேயே அன்றி அல்லாஹ் என்னை ஆக்கவில்லை. என் பெற்றோரிலிருந்து நான் வெளியாக்கப் படுவதில் அறியாமைக்காலத்தில் இருந்த அருவெறுப்புகள் எதுவும் என்னைத் தீண்டவில்லை. ஆதம் (அலை) முதல் எனது தாய், தந்தையர் வரை நான் பரிசுத்தமான திருமணத்தின் மூலமே அன்றி முறை தவறிய உறவின் மூலம் வெளியாக்கப் பெறவில்லை. எனவே, நான் உங்களிலேயே சிறந்தவன். சிறந்த தந்தையைப் பெற்றவன்”, எனக் கூறியுள்ளார்கள். (நூல்-பைஹகீ)

“இன்னும், நிச்சயமாக அல்லாஹ் இப்றாஹீம் (அலை) அவர்கள்து மக்களில் இஸ்மாஈல் (அலை) அவர்கள்த் தேர்ந்தெடுத்தான். இஸ்மாயீல் (அலை) அவர்களது மக்கள் பனீ கினானாவைத் தேர்ந்தெடுத்தான். பனீ கினான கோத்திரத்தாரில் குறைஷி குலத்தினரைத் தேர்ந்தெடுத்தான். குறைஷி குலத்தாரில் ஹாஷிம் கிளையினரைத் தேர்ந்தெடுத்தான். ஹாஷிம் கிளையோரில் என்னைத் தேர்ந்தெடுத்தான்”, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பவர், வாயில் இப்னு அஸ்கஉ, நூல் – முஸ்லிம்.

No comments:

Post a Comment