Thursday, July 5, 2012

ஷஅபான் மாதத்தின் சிறப்பும் மேன்மையும் (2)


وروى البيهقي من حديث السيدة عائشة رضي الله عنها أن رسول الله صلّىالله عليه وسلّم قال : " أتاني جبرائيل عليه السلام فقال : هذه ليلة النصف من شعبان ولله فيها عتقاء من النار بعدد شعور غنم كلب (1) (1) قوله ( بعدد شعور غنم كلب ) يعني غنم بني كلب ، وبنو كلب قبيلة كبيرة هم أكثر قبائل العرب أو من أكثرها غنماً . ولا ينظر الله فيها إلى مشرك ولا إلى مشاحن ولا إلى قاطع رحم ولا إلى مسبل ولا إلى عاق لوالديه ولا إلى مدمن خمر…" وذكر الحديث بتمامه .

ஜிப்ரஈல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, இது ஷஅபான் மாதத்தின் பாதியின் இரவாகும். இவ்விரவில் அல்லாஹ் கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளின் உரோமங்களின் எண்ணிக்கையளவு நரகில் இருந்து விடுதலை செய்கின்றான் என்று கூறினார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) நூல்- பைஹகீ.

அரபுமக்களிடையே பனீ கல்ப் கோத்திரத்தாரே மிகவும் அதிகமான எண்ணிக்கையில் ஆடுகளை வைத்திருந்தனர். இன்னுமொரு அறிவிப்பில், அல்லாஹ் இவ்விரவில், இணைவைப்பவன், சண்டைமூட்டுபவன், உறவைத் துண்டிப்பவன், பெருமையாக ஆடையைக் கரண்டைக் காலின் கீழ் தொங்கவிட்டு அணிபவன், பெற்றோரை ஏசுபவன், மதுவில் மூழ்கி இருப்பவன் ஆகியோரை ஏறிட்டும் பார்ப்பதில்லை, என்று வந்துள்ளது.

وروى الإمام أحمد عن عبدالله بن عمرو رضي الله عنهما أن رسول الله صلّىالله عليه وسلّم قال: " يطلع الله عز وجل إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لعباده إلا اثنين : مشاحن وقاتل نفس " . وإسناده لين كما قال الحافظ المنذري .

அல்லாஹ் ஷஅபான் மாதத்தின் பாதி இரவில் தனது படைப்புகளுக்காகத் தோன்றி, சண்டை மூட்டுபவன், (அநியாயமாக) உயிரைக் கொல்பவன் ஆகிய இருவரைத் தவிர தனது அடியார்கள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்குகின்றான் என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்- அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலியல்லாஹு அன்ஹுமா). நூல்-அஹ்மது (இந்த ஹதீதின் அறிவிப்பு லய்யின் எனும் வகையைச் சேர்ந்தது)

وأخرج الترمذى وابن ماجه عن السيدة عائشة رضى الله عنها قالت : فقدت النبي صلّىالله عليه وسلّم فخرجت فإذا هو في البقيع رافـعاً رأسه إلى السماء فقال :" أكنت تخافين أن يحيف الله عليك ورسـوله " فقلت : ظننت أنك أتيت بعض نسـائك فقال : " إن الله تبارك وتعالى ينـزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب " قال الترمذي : حديث عائـشـة لا نعرفه إلا من هـذا الوجـه .

நான் நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் காணவில்லை. எனவே, அவர்களைத் தேடி வெளியே சென்றேன். அவர்கள் பகீஃ எனும் முஸலிம்களின் அடக்கத் தலத்தில் தனது தலை வானத்தின் உயர்த்தியவர்களாக இருந்தார்கள். என்ன அல்லாஹ்வும் அவனது தூதரும் உமக்கு அநியாயம் செய்து விடுவார்கள் என்று நீர் பயந்து விட்டீரா? என்றார்கள். நான், நீங்கள் உங்கள் மனைவியர் எவரிடமும் சென்றிருப்பீர்கள் என்று எண்ணினேன், என்றேன். நிச்சயமாக, அல்லாஹ் ஷஅபான் மாதம் பாதியின் இரவில் இவ்வுலகின் வானத்தின் அளவில் இறங்கி கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளின் உரோமங்களின் எண்ணிக்கையினும் அதிகமான அடியார்களுக்கு மன்னிப்பளிக்கின்றான், என்று கூறினார்கள். அறிவிப்பவர்- ஆயிஷா (ரலி) நூல்- திர்மிதீ

மேற்கண்ட ஹதீதை இந்த அறிவிப்பை அன்றி வேறு எந்த ஒரு அறிவிப்பின் மூலமும் அறியவில்லை என்று இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்களும், இந்த ஹதீது பலஹீனமான அறிவிப்பாகும் என்று இமாம் புகாரீ (ரஹ்) அவர்களும் கூறுகின்றார்கள்.

وأخرج البيهقي عن مكحول عن كثير بن مرة وهو تابعي عن النبي صلّىالله عليه وسلّم : " في ليلة النصف من شـعبان يغفر الله لأهل الأرض إلا مشركاً أو مشاحناً " قال البيهقي : هذا مرسل جيد . اهـ.
ஷஅபான் மாதத்தின் பாதி இரவில் அல்லாஹ் இணைவைப்பவனையும், இருவருக்கிடையில் சண்டை மூட்டுபவனையும் தவிர உலக மக்களில் அனைவரையும் மன்னிக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்-கஃதீர் இப்னு முர்ரா நூல் பைஹகீ (இவ்வறிவிப்பு முர்ஸல் எனும் வகையைச் சார்ந்ததாகும்)

وأخرج البيهقي عن العلاء بن الحارث أن السـيدة عائشة رضى الله عنها قالت : قام رسـول الله صلّىالله عليه وسلّم من الليل فصلى فأطال السجود حتى ظننت أنه قد قبض فلما رأيت ذلك قمت حتى حركت إبـهامه فتحرك فرجعت فلما رفع رأسه من السجود وفرغ من صلاته قال : " يا عائشة - أو يا حميراء - أظننت أن النبي صلّىالله عليه وسلّم قد خاس بك ؟ " قلت: لا والله يا رسول الله ولكنى ظننت أنك قبضت لطول سجودك ، فقال : " أتدرين أي ليلة هذه ؟ " قلت: الله ورسـوله أعلم ، قال : " هذه ليلة النصف من شعبان إن الله عز وجل يطلع على عباده في ليلة النصف من شعبان فيغفر للمستغفرين ويرحم المسترحمين ويؤخر أهل الحقد كما هم " قال البيهقي: هذا مرسـل جيد ويحتمل أن يكون العلاء أخذه من مكحول . اهـ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் எழுந்து தொழுதார்கள். அப்போது, ஸஜ்தாவில் மிக நீண்ட நேரம் இருந்தார்கள். எந்த அளவுக்கெனில், அவர்கள் இறைவனடி சேர்ந்த விட்டார்களோ என்று எனக்கு சந்தேகம் வந்து விட்டது. எனவே, நான் அவர்களது கட்டை விரலை அசைத்தேன்.  அவர்களும் அதை அசைத்தார்கள். எனவே, நான் திரும்பி வந்து விட்டேன். தமது ஸஜ்தாவில் இருந்து தலையை உயர்த்தி, தொழுகையை நிறைவு செய்த பின்னர், ஆயிஷாவே.. அல்லது ஹுமைராவே.. என்று என்னை அழைத்து, என்ன நபி (ஸல்) அவர்கள் உமக்குரியதைத் தராமல் விட்டு விட்டுச் சென்று விட்டார்கள் என்று எண்ணி விட்டீரோ? என்றார்கள். அதற்கு நான், இல்லை அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் ஸஜ்தாவில் மிக நீண்ட நேரம் இருந்ததால், எங்கே தங்களது உயிர் வாங்கப்பட்டு விட்டதோ? என்று நான் சந்தேகப்பட்டு விட்டேன், என்று கூறினேன். அப்போது, ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள், இது ஷஅபான் மாதத்தின் பாதி இரவாகும்.  ஷஅபான் மாதத்தின் பாதி (15ஆம்) இரவில் அல்லாஹ் அவனது அடியார்களுக்குத் தோன்றுகிறான். பாவமன்னிப்புத் தேடுபவர்களுக்கு மன்னிப்பு வழங்குகின்றான். அவனது அருளைத் தேடுவோருக்கு அருள்புரிகின்றான். இன்னும் தங்களுக்டையில் பொறாமை கொண்டோருக்குத் தன் அருளை வழங்குவதைப் பிற்படுத்துகின்றான். அறிவிப்பவர்- ஆயிஷா (ரலி) நூல்-பைஹகீ. இந்த ஹதீது முர்ஸல் எனும் வகையைச் சேர்ந்தது என்று இமாம் பைஹகீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ورواه الطبراني والبيهقي أيضا عن مكحول عن أبي ثعلبة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وسلم- قال : " يطلع الله إلى عباده ليلة النصف من شعبان فيغفر للمؤمنين ويمهل الكافرين ويدع أهل الحقد بحقدهم حتى يدعوه " ، قال البيهقي : وهو أيضا بين مكحول وأبي ثعلبة مرسل جيد ، انتهى .
அல்லாஹ் ஷஅபான் மாதம் பாதியின் இரவில் தோன்றி இறைநம்பிக்கை கொண்டோருக்கு மன்னிப்பு அளிக்கின்றான். நிராகரிப்போருக்குத் தவணை கொடுக்கின்றான்.  பொறாமையினால் சண்டையிட்டுக் கொள்வோரை அவர்கள் அவனிடம் பிரார்த்தனை புரியும் வரை அவர்களது பொறாமையில் விட்டுவிடுகின்றான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்-அபூஸஅலபா (ரலி) நூல்-தபரானீ, பைஹகீ. இமாம் பைஹகீ அவர்களின் கூற்றுப்படி இந்த ஹதீதும் முர்ஸல் வகையைச் சேர்ந்தது.

رقم الحديث: 5782(حديث مرفوع) عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " يَطْلُعُ اللَّهُ إِلَى خَلْقِهِ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ ، فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ " (صحيح ابن حبان)
அல்லாஹு தபாரக வதஆலா தனது படைபினங்களுக்கு ஷஅபான் மாதம் பாதியின் இரவில் தோன்றி, இணைவைப்பவன், இருவருக்கிடையில் சண்டை மூட்டுபவன் ஆகியோரைத் தவிர, ஏனைய தனது படைப்புகள் அனைத்திற்கும் மன்னிப்பு வழங்குகின்றான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்-முஆத் இப்னு ஜபல் (ரலி) நூல்-ஸஹீஹ் இப்னு ஹிப்பான். (இந்த ஹதீது மர்ஃபூ வகையைச் சேர்ந்தது)

ஷஅபான் மாதம் பாதி இரவிற்கு வழங்கப் பெறும் பெயர்கள்

அரபி மொழியியில் ஷஅபான் மாதம் 15 இரவிற்கு லைலத்துல் பராஅத் என்று கூறப்படும். அறிஞர்கள் இவ்விரவின் சிறப்பினைக் குறிக்கும் பல பெயர்களைத் ஹதீதில் இவிவிரவு பற்றிக் கூறப்படும் சிறப்புகளின் அடிப்படையில் தொகுத்துள்ளனர். லைலத்துல் முபாரக்கா-அபிவிருத்தியாக்கப் பட்ட இரவு, லைலத்துல் கிஸ்மா-பிரிக்கப்படும் இரவு, லைலத்துத் தக்ஃபீர்-பாவங்களுக்குப் பரிகாரம் வழங்கும் இரவு, லைலத்துல் இஜாபா-பதிலளிக்கப்படும் இரவு, லைலத்துல் ஹயாத்-நல்அமல்களின் மூலம் உயிர்ப்பிக்கப் படும் இரவு, லைலத்துல் ஈதில் மலாஇக-மலக்குமார்களின் பெருநாள் இரவு, லைலத்துஷ் ஷஃபாஅ-பரிந்துரை செய்யப்படும் இரவு, விடுதலையளிக்கும் இரவு, லைலத்துஸ் ஸக்-உடன்படிக்கை எழுதப்படும் இரவு, லைலத்துல் இஜாஸஹ்-நற்கூலி வழங்கப்படும் இரவு, லைலத்துர் ரஜ்ஹான்-நன்மை தீமை உறுதி செய்யப்படும் இரவு, லைலத்துல் அளமஹ்-மகத்துவம்மிக்க இரவு, லைலத்துல் கத்ர்-கண்ணியமிக்க இரவு, லைலத்துல் ஃகுஃப்ரான்-மன்னிப்பின் இரவு என்பவை அப்பெயர்களில் சில.

பலஹீனமான ஹதீஸ்களின் அடிப்படையில் செயல்படுவது பற்றிய விளக்கம்

பலஹீனமான ஹதீஸ்களை அவை மிகமிகப் பலஹீனமாக இல்லாத வரை அவற்றைக் கொண்டு சிறப்புகளைக் கூறுவது, நல்ல விஷயங்களின் பக்கம் ஆர்வமூட்டுவது, தீயவற்றை எச்சரிப்பது போன்றவற்றில் அடிப்படையாகக் கொள்ளலாம். ஆனால், ஹலால், ஹராம் மற்றும் இவை தொடர்பான சட்ட்ங்களை எடுப்பதற்கு அவற்றை அடிப்படையாகக் கொள்ளல் ஆகாது என்பது மார்க்க வல்லுநர்களின் ஏகோபித்த கருத்து ஆகும்.

ஹலால், ஹராம் போன்ற விஷயங்களைத் தீர்மானிப்பதில் ஹதீதுகளின் அறிவிப்புகளை அடிப்படையாகக் கொள்வதில் கடுமையைக் கையாள வேண்டும், சிறப்புகளை, எச்சரிக்கைகளைக் கூறும் செய்திகள் தொடர்பான ஹதீதுகளின் அறிவிப்புகைளை அடிப்படையாகக் கொள்வதில் எளிமையைக் கையாள வேண்டும் என்பது இமாம் அஹ்மது இப்னு ஹன்பல், இப்னுல் முபாரக், ஸுஃப்யான் இப்னு உயைய்னா, ஸஃப்யான் இப்னு ஸஈது, அல்அன்பரீ, இமாம் நவவீ, இமாம் ரமலீ, மற்றும் பல மார்க்க வல்லுநர்களின் கூற்றாகும்.

இஸ்ஸு இப்னு அப்துஸ்ஸலாம், இப்னு தகீக் போன்ற மார்க்கச் சட்டவியல் வல்லுநர்கள், பலஹீனமான ஹதீதுகளில் வரும் செய்திகள், அதனை அனுமதிக்கக் கூடிய வேறொரு பொதுவான அடிப்படையின் கீழ் வருகின்றன எனில், அவற்றைக் கொண்டு செயல் புரிவதற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறுகின்றனர்.

இன்னும் அபூபக்கர் இப்னு அரபீ அவர்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் பலஹீனமான ஓரு அறிவிப்பைத் தவிர வேறு அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றாலும், இன்னும் அந்த அறிவிப்புக்கு நேர்மாற்றமான வேறு அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றாலும், அத்தகைய அறிவிப்பை அடிப்படையாக வைத்துச் செயல் புரியலாம் என்றும் கூறுகின்றனர்.

எனவே, மேற்கண்ட விதிமுறைகளின் அடிப்படையில் ஷஅபான், மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஹதீதுகளின் ஆதாரமாக வைத்து,  மாதம் 15ஆம் இரவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது ஒன்றும் தவறான விஷயமல்ல. 

ஷாம் தேசத்தில் இருந்த ஃகாலித் இப்னு மிஃதான், மக்ஹூல், லுக்மான் இப்னு ஆமிர் மற்றும் பல தாபிஈன்கள் ஷஅபான் மாதம் 15ஆம் நாளிற்கு முக்கியத்துவம் அளித்து, அவ்விரவில் வணக்கம் புரிந்து, அவ்விரவை உயிர்ப்பித்து வந்தார்கள் என்றும், ஆனால், ஹிஜாஸ், மதீனா பிரதேசங்களில் இருந்த தாபிஈன்களான அதாஉ, இப்னு அபீமுலைகா, இமாம் மாலிக் (ரஹ்) போன்றோர் இவ்வாறு செய்வதை விரும்பவில்லை என்றும் இப்னு ரஜப் அல்ஹன்பலி அவர்கள் தமது லதாஇஃபுல் மஆரிஃப் நூலில் கூறுகிறார்கள்.

உமர் இப்னு அப்துல அஸீஸ் (ரலி) அவர்கள் பஸராவில் இருந்த தமது பிரதிநிதிக்கு எழுதிய ஒரு கடிதத்தில், வருடத்தில் வரும் நான்கு இரவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவ்விரவுகளில் அல்லாஹ் தனது ரஹ்மத்தை வாரி வாரி வழங்குகின்றான். ரஜபு மாதத்தின் முதல் பிறை, ஷஅபான் மாதத்தின் பாதி இரவு, நோன்புப் பெருநாள் இரவு, ஹஜ்ஜுப் பெருநாள் இரவு ஆகிய இரவுகள், என்று குறிப்பிட்டு இருந்ததாகக் கூறப்படுகின்றது.

இப்னு தைய்மிய்யா அவர்களின் கூற்று

قال الشيخ ابن تيمية : و أما ليلة النصف فقد روي في فضلها أحاديث وآثار ونقل عن طائفة من السلف أنـهم كانوا يصلون فيها ، فصلاة الرجل فيها وحده قد تقدمه فيه سلف وله فيه حجة فلا ينكر مثل هذا ، وأما الصلاة فيها جماعة فهذا مبنيٌّ على قاعدة عامة في الاجتماع على الطاعات والعبادات فإنه نوعان ، أحدهما : سنّة راتبة ، إما واجب وإما مستحب كالصلوات الخمس والجمعة والعيدين وصلاة الكسوف والاستسقاء والتراويح فهذا سنّة راتبة ينبغي المحافظة عليها والمداومة ، والثاني : ما ليس بسنة راتبة مثل الاجتماع لصلاة تطوّع مثل قيام الليل أو على قراءة قرآن أو ذكر الله أو دعاء ، فهذا لا بأس به إذا لم يتخذ عادة راتبة ، فإن النبي صلّىالله عليه وسلّم صلّى التطوّع في جماعةٍ أحياناً ولم يداوم عليه إلا ما ذكر ، وكان أصحابه إذا اجتمعوا أمروا واحداً منهم أن يقرأ والباقي يستمعون ، وكان عمر بن الخطاب يقول لأبي موسى : ذكّرنا ربّنا فيقرأ وهم يستمعون ، وقد روي أن النبي صلّىالله عليه وسلّم خرج على أهل الصّفة ومنهم واحد يقرأ فجلس معهم ، وقد روي في الملائكة السيّارين الذين يتبعون مجالس الذكر .. الحديث المعروف ، فلو أن قوماً اجتمعوا بعض الليالي على صلاة تطوع من غير أن يتخذوا ذلك عادة راتبة تشبه السنة الراتبة لم يكره لكن اتخاذه عادة دائرة بدوران الأوقات مكروه لما فيه من تغيير الشريعة وتشبيه غير المشروع بالمشروع ، ولو ساغ ذلك لساغ أن يعمل صلاة أخرى وقت الضحى أو بين الظهر والعصر أو تراويح في شعبان أو أذان في العيدين أو حجّ إلى الصخرة ببيت المقدس وهذا تغيير لدين الله وتبديل له ، وهكذا القول في ليلة المولد وغيرها . )كتب ورسائل وفتاوى ابن تيمية في الفقه ج: 23 ص: 132(

ஷஅபான் மாதத்தின் பாதி இரவின் சிறப்பு பற்றி நபிமொழிகளும், அறிவிப்புகளும் பல வந்துள்ளன.  ஸலஃபுகள் எனும் இஸ்லாமிய சமுகத்தின் முன்னோடிகள் அந்நாளில் தொழுது வந்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.  அவ்விரவில் தனியா ஒரு மனிதர் தான் தொழுவது பற்றி எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனெனில், அவருக்கு இவ்விஷயத்தில் முன்னோர்களின் ஆதாரம் உள்ளது.  எனவே, அவர் அவ்விஷயத்தில் மறுத்துரைக்கப் பட மாட்டார்.  எனினும் அவ்விரவில் ஜமாஅத்தாக ஒன்று சேர்ந்து தொழுவது இரண்டு அடிப்படைகளின் மீது அமைந்துள்ளது.  1, வணக்க வழிபாடுகளை ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றுதல். இதில் இரண்டு வகையுண்டு. முதலாம் வகை கட்டாயமான கடமைகளை கூட்டாகச் செய்தல் 2, விரும்பத்தக்க கடமைகளைக் கூட்டாகச் செய்தல். உதாரணமாக, ஐவேளைத் தொழுகைகள், ஜும்ஆ தொழுகை, இரு பெருநாள் தொழுகை, கிரகணத் தொழுகை, மழைத் தொழுகை, தராவீஹ் தொழுகை போன்றவை இவ்விரண்டில் அடங்கும். இவ்வகைத் தொழுகைகளை ஒன்றாகச் சேர்ந்தே நிறைவேற்ற வேண்டும்.  இரண்டாம் வகையைச் சார்ந்தவை, அனுதினமும் வழக்கமாக நிறைவேற்றப் படாமல், விரும்பித் தொழப்படும் தொழுகைகள். உதராணத்திற்கு, இரவுத் தொழுகை, ஒன்றாகச் சேர்ந்து குர்ஆன் ஓதுவது, ஒன்றாகச் சேர்ந்து திக்ரு செய்வது அல்லது துஆ கேட்பது இது போன்றவை. அனுதினமும் வழக்கமாக ஆக்கப்படாமல் இருந்தால், இத்தகைய வணக்கங்களை நிறைவேற்றுவதிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் சில நேரங்களில் விருப்பத் தொழுகைகளான நஃபில் தொழுகைகளையும் ஜமாஅத்தாக நிறைவேற்றி உள்ளார்கள். எனினும், அதை அவர்கள் அனுதினமும் வழக்கமாக்கிக் கொள்ளவில்லை. முன்னர், கூறப்பட்ட வழக்கமான தொழுகைகளைத் தவிர.  இன்னும், அன்னாரது தோழர்கள் ஒன்றாகக் கூடினால் அவர்களில் ஒருவர் குர்ஆன் ஓதவும், மற்றவர்கள் அவர் ஓதுவதைக் கேட்டுக் கொண்டும் இருப்பர்.  உமர் இப்னுல் ஃகத்தாப் (ரலி) அவர்கள், அபூமூஸா (ரலி) அவர்களிடம், நம்முடைய இறைவனைப் பற்றி நமக்கு நினைவூட்டுங்கள் என்று கூறுவார்கள். அப்போது அவர்கள் குர்ஆன் ஓதத் தொடங்குவார்கள்.  அவர்கள் அதைக் கேட்பார்கள்.  இன்னும், நபி (ஸல்) அவர்கள் அஹ்லுஸ் ஸுஃப்பா எனப்படும் திண்ணைத் தோழர்களிடம் வந்தால், அவர்களில் ஒருவர் குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பார். அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து விடுவார்கள்.  இன்னும், திக்ரு செய்யப்படும் மஜ்லிஸ்களைத் தொடர்ந்து செல்லக்கூடிய மலக்குமார்கள்  உண்டு.. என்று அறிவிக்கப்படும் நபி மொழி மிகவும் பிரசித்தமானது.  எனவே, மக்கள் குறிப்பிட்ட சில நாட்களில் ஒன்று கூடி நஃபில் தொழுகைகளை ஒன்றாக நிறைவேற்றினால், அதனை அவர்கள் அனுதினமும் குறிப்பிட்ட நேரத்தில் செய்யக் கூடியதாக மாற்றவில்லை எனில், அது ஒன்றும் வெறுக்கத் தக்கதல்ல. ஏனெனில், அவ்வாறு தினமும் ஒன்று கூடி அத்தொழுகைகளை நிறைவேற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டால் அது ஷரீஅத்தில் சொல்லப்படாத ஒன்றக் கட்டாயமாக்கப்பட்ட ஒன்றாக ஆக்குவதாகும்.  இப்படி வழக்கமாக்குவது தொடங்கி விட்டால், இன்னும் இதுபோன்று ளுஹா நேரத்தில் வேறு தொழுகை, ளுஹருக்கும் அஸருக்கும் இடையில் ஒரு தொழுகை, ஷஅபான் மாதத்தில் இன்னொரு தராவீஹ், பெருநாட்களில் பாங்கு சொல்லுதல், அல்லது பைத்துல் முகத்தஸுக்கு ஹஜ்ஜ செல்லுதல் போன்று ஷரீஅத்திற்கு மாற்றமான பல புதிய செயல்கள் மக்கள் மத்தியில் வரத்  தொடங்கிவிடும். இதே விதிதான் லைலத்துல் மீலாத் எனப்படும் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தின் இரவிலும், இன்னும் அதுபோன்ற பிற நாட்களில் நிறைவேற்றப்படும் அமல்களுக்கும் பொருந்தும்.  (நூல்- இமாம் இப்னு தைய்மிய்யா அவர்களின் ஃபத்வா தொகுப்புகள் பாகம் 23 பக்கம் 132)

இமாம் இப்னு தைய்மிய்யா அவர்களின் மேற்கண்ட கருத்தின் சாரம் என்னவெனில், ஷஅபான் 15ஆம் நாள் இரவு, நபி (ஸல்) அவர்கள் பிறந்த தின இரவு, இன்னும் இது போன்ற நாட்களில் மக்கள் ஒன்று கூடி நஃபில் வணக்கங்களை நிறைவேற்றலாம். ஆனால், அவ்வாறு அனுதினமும் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது என்பதுதான்.

நடைமுறையில் இத்தகைய நஃபில் வணக்கங்களை அந்தந்த இரவுகளில் மட்டுமே நிறைவேற்றுகின்றனர். அனுதினமும் எங்கும், யாரும் அவ்வாறு வழக்கமாக ஒன்று சேர்ந்து நஃபில் தொழுகைகளை நிறைவேற்றுவதில்லை என்பது வெளிப்படையான விஷயம்.

ஷஅபான் பிறை 15இல் யாசீன் ஓதிக் கேட்கப்படும் துஆ

ஷஅபான் மாதம் பாதியின் இரவில் வழக்கமாக ஒரு துஆவை ஓதுவதை முஸ்லிம்களில் பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். யாஸீன் சூராவை மூன்று முறை, முதல் முறை 1. இறைவனுக்கும், அவனது தூதருக்கும் வழிப்பட்டு நடக்கும் வண்ணம் வாழ்நாள் அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், 2ஆம் முறை வாழ்க்கையில் கஷ்டங்கள், சிரமங்கள், சோதனைகளில் இருந்து பாதுகாவல் பெற வேண்டும், வளமான வாழ்க்கைக்குண்டான இரணம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், 3ஆம் முறை பிறரிடம் தேவையற்று இருக்க உதவும் செல்வமும், வாழ்க்கையின் நோக்கமான இம்மை, மறுமையின் முடிவு நன்மையானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் ஓதுகின்றனர். ஒவ்வொரு முறை யாசீன் சூரா ஓதிய பின்னரும், ஒரு துஆவை ஓதி வருகின்றனர்.

இவ்வாறு ஓதுவது கூடாது, பித்அத், என்று சிலர் கூறினாலும், மேற்கண்ட ஹதீதுகளின் அடிப்படையில், யாசீன் சூரா ஓதுவதும், குறிப்பிட்ட துஆவை ஓதுவதும், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாதிருப்பினும், அவை குர்ஆன் ஓதுவது, துஆ கேட்பது போன்ற ஒரு பொதுவான அடிப்படையின் கீழ் வந்து விடுவதால், அவற்றைச் செய்வதை தவறாகக் கொள்ள முடியாது.

இன்னும், ஷஅபான் 15ஆம் இரவில் நபி (ஸல்) அவர்களே தனிப்பட்ட முறையில் நீண்ட நேரம் இறைவணக்கத்தில் மூழ்கி இறைவனிடம் இறைஞ்சியவர்களாக இருந்தார்கள் எனில் அவர்களைப் பின்பற்றி நாமும் தனிப்பட்ட முறையிலோ, அல்லது ஒன்று சேர்ந்தோ நல் அமல்களைச் செய்வது குற்றமாகாது.

இன்னும், ஷஅபான் இரவில் ஓதப்படும் இந்த துஆவை ஏதோ புனையப்பட்ட ஒரு துஆவைப் போன்று கருதப்படுகின்றது. ஆனால், அந்த துஆ ஹதீதில் வந்துள்ள ஸஹாபாக்கள் ஓதிய துஆதான்.

(حديث موقوف) حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، قَالَ : كَانَ ابْنُ مَسْعُودٍ يَدْعُو ، يَقُولُ : " اللَّهُمَّ يَا ذَا الْمَنِّ ، وَلا يُمَنُّ عَلَيْكَ ، يَا ذَا الْجَلالِ وَالإِكْرَامِ ، يَا ذَا الطَّوْلِ لا إِلَهَ إِلا أَنْتَ ، ظَهْرَ اللاجِئِينَ ، وَجَارَ الْمُسْتَجِيرِينَ ، وَمَأْمَنَ الْخَائِفِينَ . إِنْ كَانَ فِي أُمِّ الْكِتَابِ أَنِّي شَقِيٌّ ، فَامْحُ مِنْ أُمِّ الْكِتَابِ شَقَائِي ، وَأَثْبِتْنِي عِنْدَكَ سَعِيدًا ، وَإِنْ كَانَ فِي أُمِّ الْكِتَابِ أَنِّي مَحْرُومٌ مُقَتَّرٌ عَلَيَّ مِنَ الرِّزْقِ ، فَامْحُ مِنْ أُمِّ الْكِتَابِ حِرْمَانِي وَإِقْتَارَ رِزْقِي ، وَأَثْبِتْنِي عِنْدَكَ سَعِيدًا مُوَفَّقًا لَكَ فِي الْخَيْرِ ، فَإِنَّكَ قُلْتَ فِي كِتَابِكَ الْمُنَزَّلِ عَلَى نَبِيِّكَ : يَمْحُو اللَّهُ مَا يَشَاءُ وَيُثْبِتُ وَعِنْدَهُ أُمُّ الْكِتَابِ سورة الرعد آية 39 قَالَ : فَمَا قَالَهُنَّ عَبْدٌ قَطُّ إِلا وَسَّعَ اللَّهُ عَلَيْهِ فِي مَعِيشَتِهِ "
யா அல்லாஹ், கருணையை உடையவனே, கருணை புரியப் பெற இயலாதவனே, வல்லமையும், சங்கையும் மிக்கவனே, நீண்ட கருணை கொண்டவனே, உன்னைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை, மீளுவோருக்குப் பாதுகாவலனே, அண்டுவோருக்கு அடைக்கலமானவனே, பயந்தோருக்கு அபயமளிப்பவனே, உனது மூலப்பதிவேட்டில் நான் துரதிஷ்டவாளன் என்று இருப்பின், அப்பதிவேட்டில் உள்ள எனது துரதிஷ்டத்தனத்தை அழித்து, என்னை உன்னிடத்தில் மகிழ்ச்சியை அடையப் பெறுபவனாக மாற்றிப் பதிவாயாக. உனது மூலப் பதிவேட்டில் நான் உனது அருள்மிக்க நல்இரணங்களை விட்டும் தடுக்கப்பெற்றவனாகப் பதியப்பெற்றிருப்பின், எனது இரணங்கள் தடுக்கப்பெற்றிருப்பதையும், சுருக்கப் பெற்றிருப்பதையும் மாற்றி, உனது நன்மைகள் அளவிலாமல் படியளக்கப் பெறுபவனாக மாற்றிப் பதிவாயாக. ஏனெனில், நிச்சயமாக உனது நபியின் மீது நீ இறக்கிய வேதத்தில் நீயே, அவனிடத்திலேயே மூலப் பதிவேடு உள்ளது. அவன் நாடியதை அவன் அழிக்கிறான். அவன் நாடியதை அதில் நிலைநிறுத்துகின்றான் என்று கூறியுள்ளாய், என்று எந்த ஒரு அடியான் கூறிப் பிரார்த்திப்பினும், அவனது இரணம் விசாலமாக்கப் பெறுவான் என்று இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் கூறிப் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்-அப்துர் ரஹ்மான் இப்னு இஸ்ஹாக் நூல்-அல்முஸன்னஃப், இப்னு அபித் ஷைபா, அத்துஆ/இப்னு அபீ ஷைபா.(ஹதீஸ் எண் 52) (இந்த அறிவிப்பு ஹதீஸ் மவ்கூஃப் வகையைச் சார்ந்தது)

யாசீன் சூராவை ஓதிய பின்னர் துஆ கேட்பதற்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கலாம். அனைத்துலகக்கும் அரசனாகிய, அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்விடம் நமது தேவையை வெறுமனே கேட்பதை விட, அதற்கு முன்னர் அவனுக்குப் பொருத்தமான ஒரு நன்மையான செயலைச் செய்து விட்டுக் கேட்பது, அழகல்லவா? அதனால் தான் சூரா யாசீன் ஓதியபின்னர், இந்த துஆ கேட்ககப் படுகின்றது.

இன்னும், எவர் குர்ஆன் ஓதுகின்றாரோ, அவர் அல்லாஹ்விடம் கேட்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். (அறிவிப்பவர்-இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) நூல்-முஸ்னதுல் பஸ்ஸார்/ எண் 3004) என்று ஒரு நபிமொழியும் உண்டு. இதன் அடிப்படையில் குர்ஆன் ஓதிய பின்னர் கேட்கப்படும துஆக்கள் இறைவனால் அங்கீகரிக்கப்படுகின்றன என்று கொள்ளப்படுகின்றது.

தனது நற்செயலைக் கூறி இறைவனிடம் கேட்பது தவறா?

யாசீன் சூரா ஓதி துஆ கேட்கலாமா? இதுவேண்டும், அது வேண்டும் என்ற எண்ணத்தில் குர்ஆன் ஓதலாமா? அது இக்லாஸாக ஓதுவதா? என்று பலருக்கு சந்தேகம் வருகின்றது. 

நபி (ஸல்) அவர்கள் குகைத் தோழர்கள் பற்றிக் கூறியது பிரபலமான நபிமொழி. அவர்கள் குகையில் மாட்டிக் கொண்ட பொழுது அவர்களில் ஒருவர் தான் அவரது பெற்றோருக்குப் புரிந்த பணிவிடையைக் கூறிப் பிரார்த்தித்தார். இரண்டாமவர், இறைவன் தடுத்த இழிசெயல் ஒன்றைப் புரிய எளிய வாய்ப்புக் கிடைத்தும் இறைவனது அச்சத்தால் அதிலிருந்து தவிர்ந்து கொண்டதைக் கூறிப் பிரார்த்தித்தார். மூன்றாமர் இன்னொருவருக்குச் சேர வேண்டிய ஒரு பொருளைப் பாதுகாத்து, அது பல்கிப் பெருகிய பின்னரும், பலகாலம் கழித்து அதற்குரியவர் அதை வந்து கேட்ட பொழுது, அவருக்கு உரியதை மட்டும் கொடுக்காமல், அதிலிருந்து பெருகியவை அனைத்தையும் கொடுத்த தனது நம்பிக்கை, மற்றும் நாணயத்தைக் கூறிப் பிரார்த்தார். இவ்வாறு மூவரும் தத்தமது நற்செயல்களைக் கூறிப்பிரார்த்தித்த பின்னர் அக்குகையின் வாசலை அடைத்துக் கொண்டிருந்த பாறை விலகியது, என்ற நீண்ட நபிமொழியின் அடிப்படையில், மனிதன் தன் நற்செயல்களைக் கூறி இறைவனிடம் பிரார்த்திப்பது போன்றுதான் யாசீன் சூரா ஓதி, துஆ கேட்பதும். 

எனவே, செய்யும் நல்அமல் அல்லாஹ்விற்காகத் தான். எனினும், அதனைக் கூறி அவனிடம் பிரார்த்திப்பதில் எதுவும் தவறில்லை.

அதே போன்று பெற்றோர்கள், உறவினர்கள் கப்ருகளுக்குச் சென்று ஜியாரத் செய்வதும் அப்படித்தான். நபி (ஸல்) அவர்கள் பகீஉ என்ற முஸ்லிம்களின் அடக்கத்தலத்தில் வானத்தின் பக்கம் தலையை உயர்த்தியவர்களாக நின்று கொண்டிருந்தததைப் பார்த்தேன், என்று ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பின் படி, காலஞ்சென்ற நம்முடைய பெற்றோர்கள், முன்னோர்களுக்கென அவர்களது இறைப் பொருத்தத்திற்காகவும், மறுமை ஈடேற்றத்திற்காகவும் பிரார்த்திப்பதில் தவறென்ன உள்ளது?

வாழ்நாள் முழுதும் நம்முடன் அவர்கள் இருந்திருந்தும் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்யாமல் அவர்களை இழந்திருப்போம். இம்மாதத்தில் ஒரு நாளாவது அவர்களை நினைத்து, அவர்களுக்குப் பயன்படாது போய்விட்ட நமது நாட்களை நினைத்து, இறைவனிடம் அழுது கண்ணீர் பாவமன்னிப்புத் தேடுவதில் தவறென்ன உள்ளது? அவர்களுக்காக ஏழைகளுக்குத் தர்மம் செய்வதில் தவறென்ன உள்ளது?

தொழுவது, ஓதுவது, பிரார்த்திப்பது ஒரு பக்கம் கூடும், கூடாது, அழகான பித்அத், வெறுக்கத்தக்க பித்அத் என்ற வாதங்கள் ஒரு புறம் இருப்பினும், மேற்கண்ட அனைத்து நபிமொழிகளிலும் இன்னொரு முக்கியமான ஒரு விஷயம் வருகின்றது.

அதாவது, அல்லாஹ் ஷஅபான் மாதம் பாதி இரவில் தனது அடியார்களுக்காகத் தோன்றி எல்லோருக்கும் தனது மன்னிப்பை வழங்குகின்றான், இவர்களைத் தவிர..
1. நிராகரிப்பவன்
2. இணைவைப்பவன்,
3. இருவருக்கிடையில் சண்டை மூட்டுபவன்
4. உறவை முறிப்பவன்,
5. உயிரைக் கொல்பவன்
6. ஆடையைக் கரண்டைக் காலின் கீழ் தொங்கவிட்டு அணிபவன்
7. பெற்றோரை ஏசுபவன்
8. மதுவில் மூழ்கி இருப்பவன்.
9. பொறாமையினால் சண்டையிட்டுக் கொள்வோர்

இன்றைய நமது இஸ்லாமிய சமுதாயம் இருக்கும் நிலை, மேற்கண்ட, முதல் இரண்டு செயல்களைத் தவிர மீதமுள்ள ஏழு செயல்களும், இன்னும் இவை அல்லாத பலவும், உலக அளவில், ஊர் அளவில், தனிப்பட்ட அளவில், அறிந்தோ, அறியாமலோ, புரிந்தோ, புரியாமலோ நம்மில் இருந்து வெளிப்பட்டுக் கொண்டிருப்பதாகத்தான் உள்ளது.

இது நபி (ஸல்) அவர்களுடன் ஸஹபாக்கள் வாழ்ந்திருந்த பொற்காலம் அல்ல. நம்மை அல்லாஹ்வை விட்டும், அவனது தூதர் காட்டிய வழியை விட்டும் நம்மை விலக்க நம்மைச் சுற்றி எத்தனை எத்தனையோ சூழல்கள். காரணங்கள். தொழில் துறைகள், பொழுதுபோக்குகள், புதுப்புதுக் கவர்ச்சிகள். இவற்றில் நாம் யார், நாம் எப்படி இருந்தோம், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள், இப்போது எப்படி இருக்கிறோம், எங்கு போய்க் கொண்டிருக்கிறோம்.... என்ற சிந்தனைகள் எல்லாம் இழந்து புறச் சூழல் கவர்ச்சிகளில் மயங்கி, நமக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கூட உணராத நிலையில் இருக்கின்றோம்.

நாம் மீண்டும் எவ்வாறு நாம் அந்தப் பொற்காலத்திற்குத் திரும்பிச் செல்வது...?

நபி (ஸல்) அவர்களின் நேரடிப் பார்வையில் வணக்க வழிபாடுகளின் மூலம் பக்குவப் பயிற்சி பெற்றார்கள் ஸஹாபாக்கள். அந்த ஸஹாபாக்களின் பார்வையில் பக்குவப் பயிற்சி பெற்றார்கள் தாபிஈன்கள். அத்தாபிஈன்களின் பார்வையில் பக்குவப் பயிற்சி பெற்றார்கள் அவர்களின் பின்வந்தோர். அவர்கள் செய்து வந்த வணக்க வழிபாடுகளுடன், நம்முடையவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது நினைக்கக் கூட இயலாத ஒன்று. நபி (ஸல்) அவர்களது தோழர்கள் இடுப்பில் கயிற்றைக் கட்டிக் கொண்டு இரவுத் தொழுகையை நிறைவேற்ற முயன்றார்கள். அவ்வாறு வருத்திக் கொள்வதை விட்டு அவர்களைத் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

ஆனால், இக்காலத்தில், இறைவனை அவனது ஃபர்ளான வணக்கங்கள், அதிகப்படியான வணக்க வழிபாடுகள், உபரித் தொழுகைகள், குர்ஆன் ஓதுதல், இறைத்தியானம், இறைஞ்சுதல்கள்  மூலம் நெருங்குவதற்காகச் செலவிடப்பட்ட நேரங்களை இன்று எண்ணவியலாத காரணிகள் எடுத்துக் கொண்டு விட்டனவே?

நாமிருக்கும் இக்காலத்தில், ரஜப், ஷஅபான், ரமலான் போன்ற மாதங்களில் ஒன்று கூடி இவ்வாறு சில நல் அமல்களைச் செய்வது கட்டாயமான ஒன்று என்று கூடக் கூறலாம். இக்கருத்தையே சில மார்க்க அறிஞர்கள், காலங்களும், காரணங்களும் மாறினால் சட்டங்களும் அதற்கேற்ப மாறும். அதுபோன்று தான், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பித்அத் என்று கருதப்பட்டவை காலமாற்றத்தால், ஃபர்ளு என்ற நிலையைக் கூட அடையும் என்று கருதுகின்றனர்.

காரணங்களும், சூழ்நிலைகளும், காலங்களும் மாறுபட்டால் விதிகளும் அதற்கேற்ப மாறும் என்பதற்கான உதாரணங்கள்
1.            சாதாரணமான சூழ்நிலையில் ஒருவன் விலக்கப்பட்ட பொருட்களை உண்ணுவது ஹராம் (விலக்கப்பட்டது). எனினும், உயிர் போய்விடும், வேறு உணவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்ற நிலையில், உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஹராமாக்கப்பட்ட உணவை உண்ண அனுமதி உண்டு.
2.            தொழுகைக்கு உளு செய்வதற்கு தண்ணீர் ஒருவனிடம் இல்லை. ஆனால், இன்னொருவரிடம் தண்ணீர் உள்ளது. அவர் அதனைத் தர மறுப்பின் அவரிடம் இருந்து அத்தண்ணீரைப் பிடுங்கி உளு செய்து கொள்ளலாம்.
3.            பட்டாடை அணிவது ஆண்களுக்கு ஹராம்.எனினும் போருக்குச் செல்லும் போது, அவ்வாடை அணிவது வீரத் தோற்றத்தை அளிப்பதால், அப்போது அணிந்து கொள்ளலாம்.  இன்னும், பேன் தொல்லையினால் அவதிப்படும் ஓர் ஆண், அதிலிருந்து நீங்குவதற்காகப் பட்டாடை அணியலாம்.

இவை காரணங்களும், சூழ்நிலைகளும் மாறுவதால் விதிகள் மாறும் என்பதற்கான சில உதாரணங்கள்.

அந்த அடிப்படையில், முஸ்லிம்கள், தங்களது உயிரினும் மேலான இறைநம்பிக்கையைப் புதுப்பித்துக் கொள்ளவும், மார்க்கத்தில்  அவர்களுக்கிருக்கும் அறிவுகளையும், செயல்பாடுகளையும் அதிகப்படுத்திக் கொள்ளவும், அந்தந்தக் காலங்களில் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளை ஞாபகப் படுத்தி படிப்பினை பெற்றுக் கொள்ளவும், சமுதாயத் தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ளவும், இஸ்லாமிய உணர்வை வெளிப்படுத்திக் கொள்ளவும், குறிப்பிட்ட சில நாட்களில், நேரத்தில் குறிப்பிட்ட ஒரு சில இறைவணக்கங்களை, அவற்றின் பல்வேறு முறைகளில் தனியாகவோ, ஒன்று சேர்ந்தோ நிறைவேற்றுவது, இக்காலச் சூழ்நிலையில் கட்டாயமான ஒன்று (வாஜிபு / ஃபர்ளு) ஆகும். ஏனெனில், காலத்தின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இவ்வாறு செய்வது நன்மையான செயலே அன்றி வேறில்லை. இன்னும், இவ்வாறு செய்வதைத் தடுப்பதை ஹராம் என்று கூடக் கூறலாம் என்று அறிஞர்களுள் ஒரு சாரார் கூறுகின்றனர்.

இந்த அடிப்படையின் பேரில், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்திராத பல வழக்கங்கள் இன்று நம்மிடையே கட்டாயமாகப் பின்பற்றப் படுகின்றன.

உதாரணம், ரமலான் மாத தராவீஹ் தொழுகை, ஒவ்வொரு வார ஜும்ஆவிலும் அரபி அல்லாத வேறு மொழிகளில் நடத்தப்படும் அதிகப்படியான உரை (உலகம் முழுதும் ஜும்ஆவில் அரபி அல்லாத வேற்று மொழியில் உரை நிகழ்த்தும் வழக்கம் தொடங்கி இன்றைக்கு 100 ஆண்டுகள் கூட ஆகியிருக்காது) இப்படிப் பல வழக்கங்கள் மக்களுக்குப் பயன் தரும் என்ற எண்ணத்தில் நடைபெறுகின்றன. இவற்றில் நாம் ஒன்றும் தவறு காணவில்லையே...? அப்படியிருக்க, ஷஅபான் மாதம் நடைபெறும் பல நிகழ்ச்சிகளையும், செயல்களையும் பித்அத்தின் பெயரால் தடை செய்வதில் என்ன பயன்?

ஒரு கட்டிடத்தைக் கட்டுவது மிகவும் கடினம். ஆனால், அதனை இடிப்பது மிக மிக எளிது. இரண்டு மூன்று ஆண்டுகள் கட்டிய பெரும் பெரும் கட்டிடங்களைக் கூட இருபது நொடிகளில் இடிக்க உதவும் தொழில் நுட்பங்கள் உள்ளன. அதுபோல, மக்களிடம் நற்செயல்களைப் புரியும் சூழலை உருவாக்குவது மிகவும் கடினம். ஆனால், அவர்களை நற்செயல்களைப் புரியும் சூழலை விட்டு நீக்குவது இக்காலத்தில் மிகவும் எளிது.

இன்றைய காலகட்டத்தில், இந்தத் தொழுகை தொழுவது சுன்னத்தல்ல, அந்தத் தொழுகை தொழுவது சுன்னத்தல்ல, இந்த துஆ ஓதுவது பித்அத், அந்த துஆ ஓதுவது பித்அத், வியாழன், திங்கள் இரவுகளில் ஒன்று சேர்ந்து இறைத் தியானம் செய்வது பித்அத், இன்னின்ன தினங்களுக்கு ஏதும் முக்கியத்துவம் இல்லை, இன்னின்ன மாதங்களுக்கென்று ஏதும் முக்கியத்துவம் இல்லை, அவற்றில் எதுவும் அமல்கள் (நற்செயல்கள்) செய்யத் தேவை இல்லை என (இத்தகைய நற்செயல்களுக்கு ஹதீதுகளில் ஒரு பொதுவான அடிப்படையின்படி ஆதாரங்கள் இருந்தும்) ஒவ்வொரு அமல்களும் படிப்படியாக நீக்கப் பட்டுக் கொண்டு வருவதால், அந்த அமல்களைச் செய்து கொண்டிருந்த நேரங்கள்  எந்தப் பிரயோஜனமும் இல்லாத பொழுது போக்குகளிலும், கேளிக்கைகளிலும் செலவிடப் பட்டு வீணாகப் போய்க் கொண்டிருக்கின்றன. இறைவனை நெருங்குவதற்கும், அவன் சமுகத்தில் இருந்து அவனது அருள்களைப் பெறுவதற்குப் பயனளித்த நேரங்கள், இறைவனிடம் இருந்தும் அவனது அருள்களைப் பெறுவதில் இருந்தும் தூரமாவதற்குச் செலவிடப் படுகின்றன.

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் பல்வேறு வகையான உணவுகளிலிருந்து பெறப் படுவதைப் போன்று, உள்ளத்துக்கும், உயிருக்கும் தேவையான ஊட்டச்சத்துகளும், உணவுகளும் இறைவனை நெருங்க உதவும் இறைவணக்கங்களின் மூலமே கிடைக்கும். 

இதற்கு ஏதும் மாற்றுத் தீர்வு இருக்கின்றதா?


إِنَّ اللَّهَ لا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ
எந்த ஒரு சமுகத்தினரிடமும் இருக்கும் நன்மையை (அல்லாஹ்வுக்கு மாறுபட்டு தீமைகளாக) அவர்களாகவே மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ் மாற்றுவதில்லை.(அல்ரஃது / 11)

وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ  يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُولَئِكَ مَا كَانَ لَهُمْ أَنْ يَدْخُلُوهَا إِلاَّ خَائِفِينَ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனது பெயர் நினைவு கூறப்படுவதைத் தடுப்பவனை விட அநியாயக் காரன் யார்?
அவர்கள் அவனுக்கு அஞ்சியவர்களாகவே அன்றி அம்மஸ்ஜிதுகளில் அவர்கள் நுழையக் கூடாது. நிச்சயமா, அவர்களுக்கு இவ்வுலகில் நஷ்டமும் மறுமையில் மகத்தான வேதனையும் உண்டு. (அல்பகரா-114)



துஆ

யா அல்லாஹ், எங்களது பரிதாபமான இந்த நிலையிலிருந்து எங்களை மாற்றுவாயாக. எங்கள் உள்ளங்களை இணைத்து, அவற்றில் ஊறிக்கிடக்கும் அழுக்குளை நீக்கி, உனக்கென்றே நேசம் கொண்டவர்களாக உனது நேர்வழியின் பக்கம் மாற்றிக் கொண்டு செல்வாயாக. எங்களது பொதுவான வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் உனக்கும், உனது தூதருக்கும் வழிப்பட்டு நடக்கும் வாழ்க்கையை எங்களுக்குத் தருவாயாக. வாழ்க்கையின் சோதனைகளை விட்டுப் பாதுகாப்பாயாக. சோதனைகளைத் தாங்கி வெற்றி கொள்ளும் உள்ளங்களைத் தருவாயக. உலக மக்கள் அனைவரும் உனது நேர்வழியைக் காட்டி அருள் புரிவாயாக.. உனது அறிவின் பாதைகளை எங்களுக்குத் திறந்து விடுவாயாக. எங்களைப் பொருந்திக் கொள்வாயாக. எங்களது தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் கிளையார்கள் தோழர்கள் மீதும், அவர்களின் வழிபற்றி நேர்வழி நடக்கும் அனைவர் மீது உனது அருள் மழையைப் பொழிவாயாக. ஆமீன்.. ஆமீன்.. யா ரப்பல் ஆலமீன்.

‏الثلاثاء‏، 15‏ شعبان‏،  هـ1433
வியாழன், 05 ஜூலை 2012
15, ஷஅபான், 1433 ஹிஜ்ரி

அஃப்ளலுல் உலமா
அ. அஹ்மது ஆரிஃப்,  எம்.காம். எம்.ஃபில்.,
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்,
சென்னை 600087

No comments:

Post a Comment