துருவப் பகுதியில் உள்ள டென்மார்க் போன்ற இடங்களில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு இவ்வருட ரமலான் நோன்பு 21 மணி நேரம் கொண்டதாக மிக நீண்ட நோன்புக் காலமாக இருக்கும். தென் அமெரிக்காவின் கடைத் தென்பகுதியில் உள்ள அர்ஜென்டினா வாழ் முஸ்லிம்களுக்கோ 9.30 மணி நேரத்தை மட்டும் கொண்ட குறுகிய நோன்புக் காலமாக இருக்கும்.
வடக்கு ரஷ்யாவின் முர்மன்ஸ்க் நகரில் உள்ள முஸ்லிம்களுக்கு இந்த ரமலான் 24 மணி நேரமும் சூரியன் இருக்கும் ஒரு நிமிடம் கூட இரவே இல்லாத பகல்கால நோன்பாகவே இருக்கும். இதனால், இவ்வூரில் உள்ள முஸ்லிம்கள் நோன்பு வைப்பதும், நோன்பு திறப்பதும் பகலாகவே உள்ளது. இவ்வித்தியாசமான சிக்கலைக் கருத்தில் கொண்டு உலமாக்கள் அதிகபட்சமாக 20 மணிநேரம் நோன்பு வைப்பதற்கான நேரமாக அறிவித்துள்ளனர். ஏனெனில், இந்த நகரம் ஆர்க்டிக் வட்டத்திற்கும் வெளியே உள்ளது.
இந்நகரில் வாழும் முஸ்லிம்கள் கூறுவதன் படி வருடத்தின் குளிர்கால நாட்களில் சில மிக நீண்ட இரவைக் கொண்டுள்ளதாகவும், அக்காலங்களில் அவர்கள் நோன்பு வைக்கும் நேரம் சில மணி நேரங்களே என்றும் கூறுகின்றனர். ஆனால், கோடைக்கால நாட்களில், இவ்வருடத்தைப் போல, மிக நீண்ட பகலைக் கொண்ட நாட்களும் உள்ளன. மே 22 முதல் ஜூலை 22 வரை வருடத்தில் 62 நாட்கள் இரவே இல்லாத பகலாகவும், டிசம்பர் முதல் நாள் முதல் ஜனவரி 11 ஆம் நாள் வரை, (42 நாட்கள்) 22 முதல் 23 மணி நேரம் கொண்ட மிக நீண்ட இரவுகளை உடைய நாட்களாகவும் இருக்கின்றன.
இத்தகைய துருவப் பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்கள் ரமலான் மாத காலங்களில் நோன்பின் நேரத்தை மக்கா நகரத்தின் நேரத்தின் அடிப்படையில் வைத்துக் கொள்ளலாம். அல்லது, தங்களது பிரதேசத்திற்கு அருகில் உள்ள நடுநிலையான தட்பவெப்பம் கொண்ட ஒரு நாட்டின் நேரத்தின் அடிப்படையில் கணித்துக் கொள்ளலாம் என்று இத்தகைய போலார் பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்கள் சந்திக்கும் இச்சிக்கலுக்கான ஓரு தீர்வை மக்காவில் உள்ள இஸ்லாமிய ஃபிக்ஹு மையம் 2006 ஆம் வருடம் ஒரு ஃபத்வா (தீர்ப்பை) வெளியிட்டுள்ளது.
கடந்த 33 வருடங்களிலேயே மிகவும் வெப்பமான ரமலான்
மற்ற பல நாடுகளில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு ஏற்ப நோன்பு நேரம் நீளமானதாகவோ, குறுகியதாகவோ இருக்கின்றது. எனினும், உலகில் கடந்த 33 வருடங்களிலேயே மிகவும் வெப்பமான ரமலான் இந்த வருட ரமலான் மாதம் தான்.
இவ்வருட ரமலான் மாதத்தில், ஐஸ்லாந்தில் உள்ள முஸ்லிம்கள் 20 மணிநேரம் 20 நிமிடங்களும், ரஷ்யாவில் மாஸ்கோ உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் அதிகாலை 3.00 மணி முதல் இரவு 11 மணி வரை 19 மணி நேரம் நோன்பு வைப்பர்.
கனடா, நெதர்லாந்து, ஹாலந்து போன்ற நாடுகளில் உள்ளோர் 18 மணிநேரத்திற்கும் அதிகமாகவும், சஊதி அரேபியா, ஃபிரான்சு, இங்கிலாந்து, எகிப்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ளோர் ஏறக்குறைய 16 மணி நேரத்திற்கும் அதிகமாகவும், தென்துருவத்திற்கு அருகில் உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் 10 முதல் 10.30 மணி நேரம் வரையும் நோன்பு வைப்பர்.
இக்கட்டுரை http://5bre.com/ என்ற அரபி மொழி தளத்தில் 20/07/2012 அன்று வெளிவந்த செய்தியின் மொழி பெயர்ப்பாகும்
No comments:
Post a Comment